வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள்

 வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள்












கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவின் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம் .....
வைரமுத்து அய்யா....
உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,
1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக; உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமித்து அவருக்கு 'வித்தாக கவிஞர்' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து விட்ட இடத்தை பிடிக்க தாங்கள் கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.
2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கின்றீர்களா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை அல்லவா எழுதி உள்ளீர்கள்
3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே தாங்கள்?
4 ) இயக்குனர் சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தால் யாரை வேண்டுமானாலும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?" என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக? பணத்திற்காகவும் சரணின் அடுத்த திரைப்பட வாய்பிற்க்காகவும்தானே?
இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
//இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//
உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளையராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?
ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு; ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன்! அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன்படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று; உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் அமையாதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் இளையராஜாவிற்கு பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள்; ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?
//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.//
//திரை உலகில் நான் அதிகநேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//
//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//
//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//
எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கவேண்டியது தாங்களா? அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவுசெய்து கூறமுடியுமா?
/உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//
காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?
//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//
இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால்; நண்பன் சொன்னதை வேறொருவரிடம் போய் போட்டுக் கொடுப்பவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால்; உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா? அதன் பின்னர் தாங்கள் எத்தனை திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகின்றீர்களா?
// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//
இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் , ஆனால் தங்களின் இந்த கவிதையை பார்த்தால் தாங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?
//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.//
வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்று கூறியதற்கு நன்றி, ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?
//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//
நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.
//நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?//
நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது, உங்களுக்கு தேவையென்றால் வளைந்து நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள்; பணத்துக்காகவும், புகழுக்காகவும், ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும், நண்பர்களையும் தூக்கி எறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.
ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.
வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து
நன்றி
அ.ஜீவதர்ஷன்
article courtesy:
Kandasamy.R

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி