கார்த்திகை மாதத்தின் சூட்சும சக்திகளும் தெய்வீகப் பெருமைகளும்!
கார்த்திகை மாதத்தின் சூட்சும சக்திகளும் தெய்வீகப்
பெருமைகளும்!
நமது ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், நேரங்கள் ஆகிய அனைத்தும் வானியல், அறிவியல், ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவையேயாகும்!! ஆனால், இன்றும் ஆங்கிலேயர்களால் புகுத்தப்பெற்ற, சரித்திர நிகழ்ச்சிகளையும், ரோமானிய சரித்திரத்தின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள், மாதங்கள் ஆகியவற்றையே நாம் கடைப்பிடித்து வருகிறோம். சூரிய பகவான், அவரது நீச்ச வீடான துலாம் ராசியை விட்டு நெருப்புக்கோளான செவ்வாயின் விருச்சிக ராசிக்கு மாறி, வலம் வரும் காலத்தையே “கார்த்திகை மாதம்'' என ஜோதிடக் கலை விவரித்துள்ளது! (அக்னிக்கு உரிய மாதம் என்பது பொருள்).
வீடுதோறும், தினமும் சுத்தம் செய்து, அரிசிமாவுக் கோலமிட்டு, அலங்கரித்து, “சந்தியா காலம்'' எனப்படும் மாலைநேரத்தில், மண் அகல்களிலும், வெள்ளி மற்றும் வெண்கல விளக்குகளில் தீபங்கள் ஏற்றியும் இறைவனைப் பூஜித்துவருகிறோம். திருக்கயிலைப்பதியான பரமேஸ்வரன், அம்பிகை ஸ்ரீ பார்வதிக்கும், இந்திராதி தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் அக்னியின் அம்சமாக தரிசனம் அளித்த நன்னாளையே “கார்த்திகை தீப” தினமாகக் கொண்டாடி, வீடுகள்தோறும் தீபங்கள் ஏற்றிவைத்து, விசேஷமாகப் பெருமானை பூஜிக்கிறோம்.
அதுமட்டுமல்ல!! திருக்கோயில்களிலும், “சொக்கப்பனை” என்ற பெயரில், பெரிய அளவில் அக்னியை வளர்த்து இறைவனைப் பூஜிக்கிறோம். அப்போது, இறைவனும் தனது தேவியருடன் சொக்கப்பனை நடக்கும் இடத்திற்கு எழுந்தருளி தரிசனம் அளிப்பதும் வழக்கத்தில் உள்ளது.
அண்ணாமலை தீபம்!
பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை திருத்தலத்தில் ஈசனே அக்னி மலைஸ்வரூபமாக எழுந்தருளி, காட்சியளிப்பது பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கலியில்
கிடைத்தற்கரிய பேறு ஆகும். சிந்தனையில் இறைவனைவிட்டுக் கணநேரமும் பிரிந்திருக்க மனமில்லாத ஏராளமான சித்த புருஷர்களும், மகான்களும், முனிஸ்ரேஷ்டர்களும் அண்ணாமலையில், சூட்சும சரீரங்களில் இன்றும் தவம் இயற்றிவருகின்றனர்!!
கல்லினைப் பூட்டி கடலினும் பாய்ச்சினும், நற்றுணையாக நிற்கும் நமசிவாயத்தை அக்னி வடிவில் தரிசித்து, இன்புறுவதற்காகவே ஆண்டு தோறும், கார்த்திகை மாதத்தில் திருவண்ணா
மலையில் பரணி தீபமும், மறுநாள் மகாதீபமும் ஏற்றப்படுகின்றன; தரிசிப்பது கிடைத்தற்கரிய பாக்கியமாகும்!
நாம் வசிக்கும் உலகமே, சூரியனிடமிருந்து தெறித்து விழுந்த ஓர் அக்னிப் பகுதியேயாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதலால்தான், இன்றும் பூமியின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாக உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகின் முதல் விஞ்ஞானிகள் நமது வேதகால மகரிஷிகளே ஆவர். மனித உடலில் மூன்று அக்னி அம்சங்கள் உள்ளதாக புராதன நூல்கள் கூறுகின்றன.
அவை:
1. ஜடாக்னி: நாம் உண்பவற்றை ஜீரணிக்கச் செய்து, உடலை சீராக இயங்க வைக்கிறது.
2. ஆத்மாக்னி: நம் இதயத்தில் தீப ஒளியாக, நம் செயல்கள் அனைத்திற்கும் சாட்சியாக (ஆவணமாக - Record) ஒளிவீசிப் பிரகாசிக்கிறது.
3. மூலாதார அக்னி: நம் சரீரத்தை எப்போதும் சம உஷ்ணமாக வைத்திருப்பது, இந்த அக்னியினால்தான் நம் தாயின் வயிற்றில் பிண்டமாக உருவாகி, 5ம் மாதத்தில் ஜீவன் உட்புகுகிறது (ஆதாரம்: ஸ்ரீ மத் பாகவதம்).
அக்னியினால் பெற்ற சரீரத்தை, மீண்டும் அக்னியிடமே ஒப்படைப்பதுதான் “தகனம்” ஆகும். இத்தகைய பெருமையும், ஆன்மிக சக்தியும் கொண்டுள்ள இந்த கார்த்திகை மாதம் எமது வாசக அன்பர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள பகவானைப் பிரார்த்தித்து, இம்மாத ராசிபலன்களைத் துல்லியமாகக் கணித்து வழங்குவதில் மனநிறைவு பெறுகிறோம்....
‘பகவத் கைங்கர்ய,ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்
Comments