ஜெய் பீம் /ஒரு சிறு விமர்சனம்
ஜெய் பீம் படத்தை இன்றுதான் பார்த்தேன். மனம் கனத்துவிட்டது. என் மகன் நேற்று இப்படத்தைக் குறித்து இட்ட பதிவு என்னையும் பார்க்கத் தூண்டியது. ஒருவேளை பார்க்காமல் விட்டுருந்தால் அது எனக்கு இழப்புதான்.
நான் படித்தது திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில்தான். பழங்குடியினரான இருளா்களின் நலனுக்காகத் தொடா்ந்து பாடுபடும் பேராசிரியர் பிரபா கல்விமணி (கல்யாணி) அவர்களிடம் நானும் பயின்றிருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் என் பால்ய கால நினைவுகள் பலவற்றைத் தூண்டியிருக்கிறது. எங்கள் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் நிறைய இருளர்கள் இருந்தார்கள். காட்டிலிருந்து விறகு வெட்டி வந்து ஊருக்குள் விநியோகிப்பதன் மூலம் கிடைப்பதுதான் அப்போது அவர்களுக்கு வருமானம்.
பாம்பு பிடிக்கவும் அவர்களைப் பலர் அழைப்பதுண்டு. நானறிந்த வரை எந்த முறைகேடான காரியங்களிலும் அவர்கள் ஈடுபட்டது கிடையாது. தங்களுக்கே உரிய வாழ்க்கை முறையில் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். காலப்போக்கில் இருளர்களை எங்கள் ஊர்ப்பக்கம் காணும் எண்ணிக்கையும் அருகிப்போயிருக்கிறது.
அதே போல நான் கல்லூரியில் இளமறிவியல் இரண்டாமாண்டு படித்த காலத்தில், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்று, அந்த மாணவனுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வாய்ப்பு கிட்டியது. அங்கே ராகிங் தொல்லை தாளாமல் மனப்பிறழ்வுக்கு ஆளாகி, படிப்பை முடிக்க முடியாமல் போனதாகக் கேள்வியுற்றேன். பிறகென்ன ஆனார் என்பதைக் குறித்த விவரமும் அறியேன்.
நிற்க, படம் முழுவதையும் ஒருவித பதைபதைப்புடனே பார்த்தேன். இந்த வழக்கு நடந்த காலகட்டத்திலேயே ஜுவியில் விடாமல் இதுகுறித்து வாசித்திருக்கிறேன். பல உண்மை சம்பவங்களைத் திரைமொழிக்குரிய நேர்த்தியுடன் கொண்டுவந்திருக் கிறார்கள்.
அதற்காக இயக்குநர் திரு தா. செ. ஞானவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிகர் சூர்யாவும் அபாரமான நடிப்பைக் கொடுத்திருக் கிறார். ராஜாகண்ணுவாகவும் செங்கேணியாகவும் நடித்தவர்கள் அக்கதாபாட்த்திரங்களாகவே நம் கண்முன் நிற்கிறார்கள்.
இருளர்களின் வாழ்வியல் பற்றிய நுட்பமான குறிப்புகள் படத்தில் இடம்பெற்றிருப்பதும் பாராட்டுக்குரியது. பேராசிரியர் கல்விமணி போன்று களத்தில் மக்களுக்காக உடனிருந்து போராடும் தோழர்களும் களப்பணியாளர்களும் என்றும் நம் மதிப்புக்குரியவர்கள். வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதியரசா் மாண்பமை சந்துரு அவர்களையும் நன்றியுடன் வணங்குகிறேன்.
இறுதிக் காட்சியில் செங்கேணியின் மகள் வழக்கறிஞராக இருக்கும் சூர்யா போலவே கால்மேல் கால் போட்டு நாளிதழ் வாசிக்கும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்தேன். சுயமரியாதை என்பது ஒவ்வொரு தனிமனிதனும் எந்நிலையிலும் விட்டுக்கொடுத்துவிட முடியாத ஒன்று. அதை நிலைநாட்டவே நம் அரசியலமைப்புச் சட்டமும் இயங்குகிறது. ”#மனித_மாண்பை_மீட்டெடுப்பதொன்றே_நம்முடைய_போராட்டம்” என்று அண்ணல் அம்பேத்கரும் சொல்லியிருப்பார். இந்தத் தத்துவங்களையெல்லாம் அச்சிறுமி நாற்காலியில் அமரும் தோரணை ஒன்றே நமக்கு உணர்த்திவிடுகிறது. அபாரமான காட்சியாக்கம்!
நிச்சயம் தவறவிடக் கூடாத படம். அனைவரும் காணும்படி வேண்டிக்கொள்கிறேன். விருதுகள், விழாக்கள் என்று நின்றுவிடாமல் பழங்குடிகளின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுக்கும் ஒரு தொடக்கமாக இப்படம் அமைய விழைகிறேன்.
பி.கு:−
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் விசாரணை அதிகாரியான காவல் துறை அலுவலரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவராக அடையாளம் காட்டியிருப்பதைத் தவிா்த்திருக்கலாம்.
எப்போதாவது நல்ல திரைப்படங்கள் வந்த நான் தான் இங்கே பதிவு செய்வேன்.
இந்த தடவை நண்பர் -முன்னூர் ரமேஷ்
அவர்களின் கருத்துகள் நன்றாக இருக்க இங்கு பதிவிட்டேன்
/உமாதமிழ்
Comments