1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா போதும்

 1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா போதும் சட்டுனு சூப்பரான ஒரு ஆரோக்கியமான சட்னி செய்து அசத்தலாமே!



உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலையை பலரும் ஒதுக்கி வைப்பது ஏனோ தெரியவில்லை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தட்டில் கருவேப்பிலையை பார்த்தால் உடனே ஒதுக்கி வைத்து விடுவார்கள். கருகருவென அலைபாயும் கூந்தலை பெற கறிவேப்பிலையை அதிகம் நாம் சாப்பிட வேண்டும். அது போல் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள இந்த கறிவேப்பிலையை இனி இப்படி சட்னி அரைத்து கொடுத்து பாருங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!


கறிவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பூண்டு பல் – 2, சின்ன வெங்காயம் – 7, வர மிளகாய் – 8, துருவிய தேங்காய் – அரை கப், பெரிய தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 1, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.

கருவேப்பிலை சட்னி செய்முறை விளக்கம்: முதலில் பச்சையாக இருக்கும் நல்ல கருவேப்பிலைகளை கொத்தாக உருவி கழுவி தண்ணீரை உதறி ஒரு கப்பில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கை நிறைய கறிவேப்பிலை இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் முதலில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

உளுந்து நன்கு பொன்னிறமாக வறுபட்டதும், சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து வதக்குங்கள். பின்னர் 2 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது வர மிளகாய்களையும் சேர்த்து வதக்குங்கள். காம்புகளை நீக்கி விட்டு சேருங்கள். 2 நிமிடம் நன்கு வதக்கிய பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ரெண்டு தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி வேகமாக வதங்கி வர இப்போது சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். 2 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு வதக்கினால் சீக்கிரம் வதங்கும். தக்காளி பாதி அளவிற்கு வதங்கியதும் ஒரு கைப்பிடி அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.


கருவேப்பிலை இலைகள் சுருண்டு வரும் வரை நன்கு வதக்க வேண்டும். தக்காளியும் மசிய வதங்கி விடும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இவற்றை அப்படியே விட்டு விடுங்கள். இந்த பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

தாளிப்பு கரண்டியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்குங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் கருவேப்பிலை, ஒரு வர மிளகாய், கால் ஸ்பூன்க்கும் குறைவாக பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி!



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி