போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை

 
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி  இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.


 அத்துடன் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது,  மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு,  வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் புதிய கட்டுபாடாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி