டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை
கிருஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நேற்று நள்ளிரவு தொடங்கிய சிறப்பு பிரார்த்தனையுடன் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.
சென்னை பெசண்ட்நகர் தேவாலயம், சாந்தோம் தேவாலயம், செயிண்ட் தாமஸ் மலை தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொரோனா கட்டுப்பாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்றது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருப்பலி நிறைவடைந்து இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பித்தார். அப்போது பக்தர்கள் அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வசனங்களை ஜெபித்து வழிபட்டனர். கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Comments