ஜனவரி மாதம் 2-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
நாமக்கல்லில் நேற்று ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஜனவரி மாதம் 2-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இலவச அல்லது கட்டண வழியில் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
அதற்கு பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியோடு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணியாதவர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். மேலும் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஆஞ்சநேயர் ஜெயந்தி நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
Comments