எம்.ஏ.வேணு செட்டியார் கதை
மாநகரக் காவல் இயக்குனர் தியாகராஜன் பட வாய்ப்புகள் எதுவுமின்றி ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் இறந்து கிடந்த சோக செய்தியைக் கேட்டதும் அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றும் சேலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்துப் பெரும்புகழ் பெற்ற எம்.ஏ.வேணு செட்டியார் கதையும் நினைவுக்கு வருகிறது.
வேணு செட்டியாரின் வாழ்க்கை மாடர்ன் தியேட்டர்ஸில் வாட்ச் மேன் என்றுதான் தொடங்கியது. அவருக்கு சினிமா மீது இருந்த மோகம் காரணமாக சின்ன சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்து படம் தயாரிக்கும் அளவிற்குத் திரைப்பட தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டார்.
மாடர்ன் தியேட்டர்ஸில் கற்ற அறிவினால் நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு நால்வர் என்ற படத்தை எடுத்தார். இயக்குனராக ஏ.அபி.நாகராஜனுக்கு அதுதான் பிள்ளையார் சுழி. படம் சுமாரகத்தான் போனது. ஆனால் மாங்கல்யம் என்ற இரண்டாவது படம் அமோக வெற்றி பெற்றதும் வேணு செட்டியார் காட்டில் அடை மழை.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே என்ற பாடல் அறுபதுகளில் ஒலிக்காத வானொலி பெட்டியே இல்லை எனலாம். பாக்ஸ் ஆபீஸில் பயங்கர ஹிட் கொடுத்த டவுன் பஸ் படப் பாடல் இது . தயாரிப்பு வேணு செட்டியார். கதை வசனம் இயக்கம் ஏபிஎன்.
தொடர்ந்து வெற்றிப் படங்கள் எடுக்கவே வேணு செட்டியாருக்கு மிகப் பெரிய பட்ஜட்டில் இராமாயணத்தைப் படமாகத் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டது. இராமாயணத்தைப் படமாக எடுப்பது என்றால் லேசுபட்ட சாமாசாரமா என்ன? ஏகப்பட்ட கேரக்டர்கள். ஏகப்பட்ட நடிகர்கள். படம் இரண்டு வருடம் தயாரிப்பில் கிடந்தது.
இடையில் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை இலாகாவில் இருந்த முக்தா சகோதர்ர்களிடம் உள்ளே கணன்று கொண்டிருந்த சினிமா தாகத்தை அறிந்து கொண்டு முக்தா ஶ்ரீனிவாசனின் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார் வேணு செட்டியார். முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த முதலாளி பயங்கர ஹிட். பிரமிளா தேவி என்று அறிமுகமான தேவிகா அருமையானநடிகையாக மிளிர்ந்த படம் . சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
அடுத்து வெளிவந்த சம்பூரண ராமாயணம் வெற்றியைத் தனியாகக் குறிப்பிட வேண்டாம் . திரைப்படங்களைப் பார்க்காத சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியார் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சிம்மத்தின் நடிப்பை சிலாகித்தது தனிச் சிறப்பு.
அதன் பிறகு வேணு செட்டியாரின் வெற்றிச் சக்கரம் கீழே வரத் தொடங்கியது. அடுத்தடுத்து நான்கு படங்கள் மரண அடியை சந்திக்கவே மொத்த திரைப்பட உலகமும் வேணு செட்டியார் என்ற நபரையே மறந்து விட்டது.
பல வருடங்கள் சென்ற பிறகு தனது சொத்துக்களை எல்லாம் இழந்த ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்ற வேணு செட்டியார் தன்னிடம் உள்ள எடிட்டிங் கருவியுடன் கோடம்பாக்கம் எடுத்துக் கொண்டு வருகிறார் . நல்ல வேளை பெண்களுக்குத் திருமணம் செய்து விட்டிருந்தார். கைக்கும் வாய்க்கும் பற்றாமல் ஒரு பிழைப்பில் வாழ்க்கை ஓடுகிறது.
திரைக்கதாசுரியர் , தயாரிப்பாளருமான கலைஞானத்தின் உதவியாளர் கண்களில் வேணு செட்டியார் படுகிறார். ஒரு காலத்தில் ஓஹோ என கொடி கட்டப். பறந்த தயாரிப்பாளர் கிட்டதட்ட பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்டு பதறி விட்டார்.
முதலாளி படம் தேசிய விருது பெற்ற படம் என்பதால் தேசிய திரைப்படக் கழகத்திற்கு விண்ணப்பித்தால் கணிசமான தொகை கிடக்கும் என்பதால் கலைஞானத்தின் உதவியாளர் அதற்கான முயற்சியில் இறங்குகிறார். விண்ணப்ப படிவத்தில் தான்தான் முதலாளி படத்தின் தயாரிப்பாளர் என்பதற்கு ஒரு அத்தாட்சி தேவைப்படுகிறது.
அந்த நேரத்தில் ஸவுத் இந்தியன் ஃபிலிம் பெடரேஷனில் முக்தா சீனிவாசன் தலைவர் பதவியில் இருந்தார். முதலாளி படத்தைத் தயாரித்த வேணு செட்டியார் அந்தப் படத்தை இயக்கிய இயக்குனரிடம் ஓர் அத்தாட்சி கையெழுத்துப் பெற அறை வாசலில் காத்திருந்த அந்தத் தருணத்தை என்னவென்று சொல்வது?
ஆனால் முக்தா சீனிவாசனின் உன்னதமான செய்கையைக் குறிப்பிடவில்லை என்றால் இந்தக் கட்டுரை முழுமையடையாது. வேணு செட்டியார் முக்தா சீனிவாசனைப் பார்க்க அனுமதி கேட்டு ஒரு துண்டுச் சீட்டில் வேணு செட்டியார் என்று மட்டும் எழுதி உள்ளே அனுப்புகிறார் .
மறு கணமே உள்ளேயிருந்து ஓடோடி வந்துவேணு செட்டியாரை உள்ளே அழைத்து சென்று ஆசனமளித்து விண்ணப்பப் படிவத்தில் அத்தாட்சி கையெழுத்து போட்டுத் தந்தாதோடு மட்டுமில்லை வேணு செட்டியார் கிளம்பும் வரையில் முக்தா சீனிவாசன் நின்று கொண்டே இருந்தது அவரது தனிப் பெரும் குணத்தைக் காட்டுகிறது.
வேணு செட்டியாருக்கு தேசிய திரைப்படக் கழகத்திலிருந்து ஓரளவு கணிசமான தொகை கிடைக்கவே அந்தப் பணத்துடன் பாட்னாவில் வசித்து வந்த மகள் வீட்டிற்கு சென்ற பின்னர் குறுகிய காலத்திற்குள் தன் இறுதி மூச்சை வேணு செட்டியார் விட்டார்.
லைம் லைட் விழும் வரையில்தான் சினிமா துறையில் மதிப்பு. நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் நிலைதான்.
Comments