#குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள்/அடிப்படை சட்ட தகவல் பகுதி

 #CrPC Sections 156,157:

-----------------------------------------



#குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 156, 157 ஆகியவை காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு புலன்விசாரணை நடத்தக்கூடிய அதிகாரத்தை வழங்குகிறது.


1. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம்.


2. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் (Gr. II. PC) சேர்த்துக் கொள்ளக்கூடாது.


3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு குற்றங்கள் அல்லது விரைவாக விசாரணை முடிக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகியவற்றில் தலைமைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்திட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் (SHO) அதாவது காவல் சார்பு ஆய்வாளர் / காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புலன்விசாரணை நடத்திட அதிகாரம் உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் காவல் நிலை ஆணைகளின்படியும் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் துறை சார்ந்த அறிவுரைகளின்படியும், காவல் ஆய்வாளர் புலன்விசாரணை நடத்திட வேண்டும்.


4. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி, காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்களில் (Cognizable Offences) மட்டுமே விசாரணை நடத்தும் அதிகாரம் உள்ளது.


5. பிடியாணை வேண்டாக் குற்றங்களின் மீது புலன்விசாரணையை காவல் அலுவலர் மேற்கொள்ள, குற்றவியல் நடுவரின் அனுமதியோ, அங்கீகரிப்போ தேவையில்லை.


6. பிடியாணை வேண்டும் குற்றங்களை (Non Cognizable offences) பொறுத்த வரையில், காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு புலன்விசாரணை செய்ய அதிகாரம் கிடையாது என்ற போதிலும், அவர் உரிய அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவர் அவர்களிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190(1)(பி) உ/பி 155(4) மற்றும் தமிழ்நாடு காவல் நிலை ஆணை 561 ன்படி முன் அனுமதி பெற்று, அத்தகைய புலன்விசாரணையை மேற்கொள்ளலாம்.


7. ஒரு குற்ற வழக்கில் பல பிடியாணை வேண்டும் குற்றங்களும், அதனோடு சேர்ந்து ஒரேயொரு பிடியாணை வேண்டாக் குற்றமும் புரியப்பட்டிருந்தால், காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அந்த வழக்கை மொத்தமாக பிடியாணை வேண்டாக் குற்றமாக கருதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(4) ன்படி புலன்விசாரணை செய்யலாம். இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(2) ன்படி, அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவரிடமிருந்து அனுமதி பெற தேவையில்லை.


8. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர் பிடியாணை வேண்டாக் குற்றங்களை பொறுத்த வரையில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 154 ன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகே, அது குறித்த புலன்விசாரணையை மேற்கொள்ள அதிகாரம் உள்ளவராவார்.


9. பிடியாணை வேண்டாக் குற்றங்களை பதிவு செய்யும் அதிகாரம் என்பது ஒரு செயலாக இருந்தாலும், அது சம்மந்தமாக புலன்விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது அதற்கு மாறானதாகும். காவல் நிலைய பொறுப்பு அலுவலர் பிடியாணை வேண்டாக் குற்றம் ஒன்று தாக்கலாகினால், அந்த பிடியாணை வேண்டாக் குற்றமானது, அவரது உள்ளூர் சரகத்தில் நடந்துள்ளதா? என்பதை குறித்து பார்த்திடாமல், அது குறித்து FIR பதிவு செய்ய வேண்டியது உடனடிக் கடமையாகும். பிடியாணை வேண்டாக் குற்றத்தை பொறுத்தவரையில் அதனை பதிவு செய்ய மறுக்க அதிகாரம் இல்லை. ஆயினும் காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 177 முதல் 189 வரை குறிப்பிட்டுள்ளபடி, தனது உள்ளூர் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற அத்தகைய குற்றங்களின் மீது புலன்விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு. காவல் அலுவலர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் பதிவு செய்த குற்றமானது, அவரது உள்ளூர் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தது இல்லையெனில், அக்காவல் அலுவலர் அந்த வழக்கை, அதிகார வரம்பு எல்லை நன்கு தெரிந்தால், அந்த சம்பவம் நடைபெற்ற அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக அவ்வழக்கை புலன்விசாரணைக்கு அனுப்பிட வேண்டும். அதிகார வரம்பு எல்லை தெரியாமல் அல்லது சந்தேகமாக இருந்தது என்றால் ஆரம்பகட்ட புலன்விசாரணையை முடித்த பிறகு அத்தகைய அதிகார எல்லைப் பகுதியை கண்டறிந்து அந்நிலையத்திற்கு மேல் புலன்விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.


10. காவல் நிலையப் பொறுப்பு வகிக்கும் அலுவலர், தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பிடியாணை வேண்டாக் குற்றம் சம்மந்தமாக புலன்விசாரணை மேற்கொள்ளுதலை, எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(2) ன்படி கேள்வி கேட்க இயலாது.


11. ஓர் இடத்தின் எல்லைவரம்பிற்குட்பட்ட அதிகாரமுடைய குற்றவியல் நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 ன்படி அந்த குறிப்பிட்ட அதிகார எல்லைவரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு, தான் அனுப்பி வைக்கும் வழக்கை, புலன்விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி அவருக்கு அதிகாரம் உண்டு.


12. சட்டப்படி அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவருக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட தனியார் மனு (private complaint) குறித்து, அந்தக் குற்றத்தின் விசாரிப்பதற்கு உகந்த தன்மை (cognizance) என்ன என்பதை கண்டறியும் முன்பே, அது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன்படி அப்புகாரை விசாரிக்கவோ, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடவோ செய்யலாம். அத்தகைய வழக்குகளில் காவல்துறையினர் குற்றவியல் நடுவர் அனுப்பிய புகாரின் பேரில் வழக்கொன்றை பதிவு செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து இறுதியரிக்கை ஒன்றை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173(2) ன்படி அனுப்பிட வேண்டும். இறுதி அறிக்கை MF, NC, ML அல்லது உண்மையான வழக்கு என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் புகாரில் கூறப்படும் குற்றத்தின் விசாரிப்பதற்கு உகந்த தன்மையைக் கருத்தில் கொண்ட பிறகு, குற்றவியல் நடுவர் இந்த வழக்கு நடைமுறையை குற்றவாளிகளுக்கு எதிராக தீர்மானித்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 202(1) மற்றும் 203 ன்படி காவல்துறை புலன்விசாரணைக்கு உத்தரவிடலாம்.


13. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி உரிய அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவர், ஒரு வழக்கு பற்றிய புலன்விசாரணையை நடத்திட தனிப்பட்ட நபர், ஒரு வழக்கறிஞர் போன்றோரைக் கூட அறிவுறுத்தலாம். ஆயினும் அத்தகைய புலன்விசாரணை காவல்துறையினர் நடத்துவதை போன்ற தாக்கத்தையும், வேகத்தையும் கொண்டதாக இருக்காது. அத்தகைய நபருக்கு உரிய உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 202(3) ன்படி இல்லாமல், பிடியாணை இல்லாமல் கைது செய்யலாம் என்பதை தவிர்த்து, பிற அனைத்து புலன்விசாரணை அதிகாரங்களும் இருக்கும்.


14. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 2(h) ன்படி, குற்றவியல் நடுவரால் புலன்விசாரணை எதையும் நடத்திட இயலாது.


15. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 ன்படி காவல் அலுவலர்களுக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்களின் மீதான புலன்விசாரணையை வழக்கு பதிவு செய்து நடத்திட அதிகாரம் உள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157 பிடியாணை வேண்டாக் குற்றங்களை பொறுத்தவரையில் காவல் அலுவலர் அதனை பதிவு செய்வதற்கு முன்பாகவே புலன்விசாரணை செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது.


16. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி காவல் அலுவலர் ஒருவருக்கு தனது அதிகார எல்லைக்குள்பட்ட உள்ளூர் சரகத்தில் பிடியாணை வேண்டாக் குற்றம் நிகழந்துள்ளதாக உண்மையான தகவலோ, சந்தேகமோ கிடைக்கப்பெற்றால், எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யாமலேயே காவல் நிலைய பொது நாட்குறிப்பில் அதுகுறித்து பதிவுகளை செய்து, அது சம்பந்தமாக அவ்வதிகார எல்லைக்குள்பட்ட குற்றவியல் நடுவருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டு, அவர் தானே நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்றோ மாநில அரசால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள தனது சார்நிலை பணியாளரை அனுப்பியோ புலன்விசாரணையை தொடங்கலாம்.


17. காவல் அலுவலருக்கு இரு பிரிவினரிடையே கலவரம் நடக்கிறது என்றோ, சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது என்றோ நம்பகமான தகவல் கிடைத்தது என்றாலோ அல்லது கள்ளச்சாராயம் அல்லது போதைப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்று தகவல் கிடைத்தது என்றாலோ, அவர் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அது சம்பந்தமாக உரிய அதிகார எல்லைக்குள்பட்ட குற்றவியல் நடுவருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிய பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து, அத்தனை சாட்சிப் பொருட்களையும் பறிமுதல் செய்து, சாட்சிகளை விசாரித்து விட்டு, அதுவரை செய்யப்பட்ட புலன்விசாரணையின் பேரில், வழக்கை பதிவு செய்திட காவல் நிலையம் திரும்பி, வழக்கை பதிவு செய்து, அதன்பிறகு தொடர்ந்து புலன்விசாரணையை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி செய்திடலாம்.


18. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(a) மற்றும் (b) [ விலக்கு - Proviso] ன்படி காவல் அலுவலருக்கு பெயர் தெரியாத நபர் ஒருவரால், அதிக கடும் தனமை இல்லாத குற்றம் நடைபெற்றதாக தகவல் ஒன்று கிடைத்தால் என்றால், அவர் அது சம்பந்தமாக குற்றம் நடைபெற்ற இடத்திற்கு செல்லவோ அல்லது அவ்விடத்திற்கு தனது சார்நிலை அலுவலரை அனுப்பவோ வேண்டியதில்லை. காவல் அலுவலரை பொறுத்தவரையில் அதுகுறித்து புலன்விசாரணையை தொடங்க போதிய காரணம் இல்லை என்று தெரிய வந்தால், அவர் அந்த வழக்கை புலன்விசாரணை செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது.


19. பாலியல் பலாத்காரம் சம்மந்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வாக்குமூலத்தை அவரின் வசிப்பிடத்திற்கோ அல்லது அவர் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று, அவரின் பெற்றோர் முன்னிலையிலோ அல்லது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலோ அல்லது அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் முன்னிலையிலோ முடிந்த அளவுக்கு ஒரு பெண் காவல் அலுவலரை கொண்டே பதிவு செய்ய வேண்டும்.


20. சில வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலில் குற்றங்களின் தன்மை கடுமையானதாக இல்லாமல் இருந்தாலோ அல்லது அதற்கான போதிய காரணம் எதுவும் இல்லாமல் இருந்தாலோ, அல்லது அத்தகவலானது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி பெறப்பட்டு இருந்தாலோ காவல் அலுவலர் அந்த வழக்கில் தாங்கள் புலன்விசாரணை செய்திட இயலாது என்ற தகவலை, தகவல் கொடுத்தவருக்கு உடனடியாக பிரிவு 157(2) ன்படி தெரிவிக்க வேண்டும்.


இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல் நிலை ஆணை 562 மற்றும் 660 புலன்விசாரணை எவ்வப்போது மறுக்கப்படலாம் மற்றும் புகார்தாரருக்கு படிவம் 90 ல் அறிவிப்பு அனுப்புதல் மற்றும் அதனை செய்து முடித்தல் பற்றிய விவரங்களை கூறுகிறது.



 வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,