ஆறுமுக நாவலர்
சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார்.
சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.
யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.
சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார்.
தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.
சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார்.
சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார்.
பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.
20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் 57ஆவது வயதில் (1879) மறைந்தார்.
Comments