ஆண்கள் தவிர்க்கவே கூடாத முக்கிய அறிகுறிகள்.*


 *


*ஆண்கள் தவிர்க்கவே கூடாத முக்கிய அறிகுறிகள்.*பெண்களைக் காட்டிலும் மருத்துவ மனைக்கு வரும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான். மிகவும் தீவிர பாதிப்பு என்றால்தான் அவர்கள் மருத்துவமனை பக்கமே வருகின்றனர்.தங்கள் உடல் நலம் பற்றி கவலையின்றி, வேலை வேலை என்று சுற்றுவதால் பிரச்னைகள் பெரியதான நிலையிலேயே அவர்கள் மருத்துவமனைக்கு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


நம்முடைய உடலில் திடீரென்று சில மாற்றங்கள் தென்படும். இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று நாம் அலட்சியமாக அதைக் கடந்து செல்வோம். அது மிகவும் தவறான செயல்... அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் எதனால் பிரச்னை என்பதைக் கண்டறிந்தால் மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் வேறுபாடு தென்பட்டால் அது பிராஸ்டேட் சுரப்பி பிரச்னையாக இருக்கலாம். சிறுநீர் அடிக்கடி வெளியேற வேண்டிய உணர்வு, சிறுநீர் கழித்தும் முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வு இன்மை, சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது போன்றவை பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளிட்ட பிரச்னையாக இருக்கலாம். அல்லது பாக்டீரியா நோய்த் தொற்றாகக் கூட இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தக் கூடாது.


உடலில் மருக்கள் திடீரென்று அதிக அளவில் தோன்றுவது, பல ஆண்டுகளாக இருந்த மருவில் திடீரென்று மாறுதல், வளர்ச்சி தென்படுவதைப் புறக்கணிக்கக் கூடாது. இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.


சிறுநீர், மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுவது சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று, சிறுநீரக கல், செரிமான மண்டலத்தில் ரத்தக் கசிவு, கட்டி என ஏதாவது ஒரு பிரச்னையாக இருக்கலாம். எனவே, சிறுநீர், மலத்துடன் ரத்தம் வெளிப்பட்டால் மருத்துவ ஆலோசனையை நாட வேண்டியது அவசியம்.


குறட்டை தேசிய வியாதியாகவே மாறிவிட்டது. அதனால், அது சாதாரண பிரச்னை என்று இருந்துவிட வேண்டாம். அதிக சப்தம் வருவது, அதிக நேரம் குறட்டை ஏற்படுவது என மாறுதல் தெரிந்தால் அது ஸ்லீப் ஆப்னியா பிரச்னையாக இருக்கலாம். மேலும், இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோயின் அடையாளமாகவும் இருக்கலாம். எனவே, எதனால் பிரச்னை என்று ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.


திடீரென்று உடல் எடை குறைந்தால் மகிழ்ச்சி அடைய வேண்டியது இல்லை. எதனால் உடல் எடை குறைந்த என்பதைக் கண்டறிய வேண்டும். சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி பிரச்னை, புற்றுநோய் இருந்தால் உடல் எடைக் குறையலாம். திடீரென்று 10 கிலோவுக்கும் கீழாக உடல் எடை குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.


உடலில் குறிப்பாக பிறப்புறுப்பு பகுதிகளில் திடீர் வீக்கம், அதீத வலி ஏற்பட்டால் அதைப் புறக்கணிக்கக் கூடாது. விதைப் பையில் வீக்கம், மாற்றம் தென்பட்டால் அதைப் பற்றி எப்படி வெளியே சொல்வது என்று அசிங்கப்படாமல் மருத்துவ உதவியை நாட வேண்டும். அதே போல் மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று இல்லை. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம். மார்பக பகுதியில் மாற்றம் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.*பகிர்வு*Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,