மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்ளும் வித்தகர் வைரமுத்து

தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை.



ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து. ஆனால் அவர் அப்படிச் செய்த ஒரு விஷயம், கேலிக்குரியதாகிவிட்டது. அது மறைந்த தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்பானது. என்ன அது? இதோ ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி வைரமுத்துவை 'வெளுத்து வாங்கி' எழுதியிருப்பதைப் படியுங்கள்: "சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது." -
நன்றி: பிலிம் பீட் தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி