வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்த அறிஞர் பிதகோரஸ்

 கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான் — பிதியாஸ் கதை.


பிதியாஸும் டாமன் என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.
பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.
“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.
கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.
அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.
மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.
அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.
கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.
பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,
மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்
இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது
அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,