"இருதயமும் இதயமும்"./சிறுகதை/கந்தசாமி .ஆர்

 "இருதயமும் இதயமும்"

---சிறுகதை
கதிரவன் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகிறது. தனியார் ஆலையில் கணக்குப் பிரிவில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு பத்து நாட்களாக இடதுகை வலித்துக் கொண்டே இருந்தது. வலி மாத்திரைகள், ஆயிண்ட்மெண்ட் எல்லாம் வலியைக் கொஞ்சமும் குறைக்கவில்லை.
'மீனா' மனைவியை அழைத்தார் கதிரவன். "எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது. எதற்கும் டாக்டர் செழியனை ஒருமுறை பார்த்து விடலாம்" என்றார்.
"சரிங்க நாளை பார்த்து விடலாம்" என்றாள் மீனா. "என்னவாக இருக்கும்? ஏதேனும் பெரிய பிரச்சினை ஆக இருக்குமோ?" என்று நினைத்த கதிரவனுக்கு அன்று இரவு தூக்கம் சரியாக வரவில்லை. அடுத்த நாள் அந்தப் பெரிய தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றார். டாக்டர் செழியன் கொலஸ்ட்ரால் பார்க்கச் சொன்னார். LDL, HDL, Triglyceride மூன்றும் பார்த்தார்கள். 100க்கு கீழ் இருக்க வேண்டிய LDL கெட்ட கொலஸ்ட்ரால் 250 இருந்தது. HDL நல்ல கொலஸ்ட்ரால் இது 60 க்கும் மேல் இருந்தால் நல்லது. 50 இருந்தது. Triglyceride கெட்டது 150க்குள் இருக்கனும். அவருக்கு 550 இருந்தது.
அடுத்து ECG 24 மணிநேர ஆய்வில் இருதய செயல்பாட்டைக் கவனித்த
செழியன் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார். அடுத்த நாள் அந்தப் பரிசோதனை நடந்தது. மொத்தம் ஆறு அடைப்புகள் இருந்தது தெரிந்தது. இருதய ஆபரேஷன் செய்ய முடிவானது. மீனாவுக்கு இப்படி தொல்லை கொடுத்து விட்டோமே என்று கதிரவன் வருந்தினார். அடுத்த இரண்டு நாட்களில் ஆபரேஷன் நடந்தது. இரண்டு வாரம் மருத்துவமனை வாசம்.
ஆபரேஷன் செய்வதற்கு முன்னர் டாக்டர் கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்தார்.
"நீங்கள் புகை பிடிப்பீர்களா?"
"இல்லை"
"உங்கள் அப்பா, அம்மாவில்
யாருக்கேனும் இருதயப் பிரச்சினை இருந்ததா?"
"இல்லை"
"உங்களுக்கு கோபம் வருமா?"
"அடிக்கடி வரும்"
"என்ன வேலை செய்கிறீர்கள்?"
"ஓராண்டாக்கு முன்னர் பணிஓய்வு பெற்று விட்டேன்"
"இப்போது என்ன செய்கிறீர்கள்?"
"சும்மாதான் இருக்கிறேன். சும்மா இருப்பதுதான் பெரிய கஷ்டமாக உள்ளது"
"அந்தக் கவலை உங்கள் stress லெவலை அதிகப்படுத்தி இருக்கும்"
"எதனால் டாக்டர் இருதய நோய் வருகிறது?"
"அதிக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல், மன அழுத்தம், வயது, பரம்பரை, உணவு முறை, உடல் வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பது, நீரிழிவு நோய், அதிக எடை என்று பல காரணங்கள்"
"டாக்டர் ஸ்ட்ரோக் வந்து விடுமோ என்று பயம் இருந்தது"
"மூளைக்கு இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் தான் ஸ்ட்ரோக் வரும். உங்களுக்கு இதயத்
தசைகளுக்கு இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு உள்ளது"
அறுவை சிகிச்சைக்கு முதல்நாள் இரவு பத்து மணியிலிருந்து எதுவும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூட குடிக்கக் கூடாது என்று சொன்னது எல்லாம் கதிரவனுக்கு நினைவுக்கு வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து கதிரவன் ஐஸீயூவில் இருந்த இரண்டு நாட்களில் தான் வெயிட்டிங் ஹாலில் 24 மணி நேரமும் சேரில் அமர்ந்திருந்ததையும் கூப்பிட்டால் வந்ததையும் சொன்ன போது தன்னை விடவும் மனைவியின் பாடு
மோசமாக இருந்திருக்கிறது என நினைத்து வருந்தினார். மூன்றாம் நாள்தான் தனியறை கிடைத்தது. என்னைக் கேட்காமல் எழுந்து விட முயற்சி செய்து விடாதீர்கள் என்று மீனா அடிக்கடி சொல்வாள்.
இரவு முழுக்க அவ்வப்போது அவளை எழுப்பியதால் மீனாவுக்கு சில நாட்கள் தூங்காத இரவுகள் ஆனது.
ஒருவழியாக இரண்டு வாரம் முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எவ்வளவு நாட்கள் கழித்து வரவேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று டாக்டர் செழியன் சொன்னார். மாத்திரை சாப்பிடும் முறை பற்றியும் சொன்னார். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து விட்டார். மீனா நேராக பூஜை அறைக்கு சென்றாள். இறைவனை வழிபட்டு திருநீறு, குங்குமம் எடுத்து வந்து அவரது நெற்றியில் வைத்தாள். அவரையே உற்றுப் பார்த்தாள். தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. கதிரவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மருத்துவ மனையில் அவள் ஒருநாள் கூட அழுததில்லை. கவலை கொண்டு பேசியதில்லை. தைரியமாகவும் எதுவும் நடவாதது போல சிரித்த முகத்துடனும் இருந்தாள். அப்படி இருந்த அவள் இன்று ஏன் அழுகிறாள்? அவளையே கேட்டார். "எல்லாக் கவலையையும் இதயத்துள் அடக்கி வைத்துக் கொண்டேன். நான் அழுதாலோ, கவலைப்பட்டாலோ அது உங்களை பாதிக்கும் என்று பயந்து செயற்கையாகவே இரண்டு வாரங்கள் வாழ்ந்தேன்" என்றாள்.
"என்னுடைய இருதயத்தைக் காப்பாற்ற எனது இதயத்தை மிகவும் துன்புறுத்தி விட்டேன்" என்றார் கதிரவன். "அதெல்லாம் ஒன்றுமில்லை நாம்தான் சரியாகி வந்து விட்டோமே" என்று ஆதரவாக கணவனது கையைப் பிடித்துக் கொண்டாள் மீனா.

---கந்தசாமி .ஆர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்