தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை உன் நாமம் வாழும்.

 கண்களில் தீர்க்கம், நெஞ்சினில் உறுதி, நடையில் வேகம், செயலில் ஆண்மை, சொல்லில் ஆணித்தரம், சுதந்திர வேட்கை, இந்திய ஒருமைப்பாடு, மனமெல்லாம் இரக்கம், 




இவை எல்லாவற்றையுமே அவன் கொண்டிருந்தாலும், "தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று பசித்தோரைப் பார்த்து இரங்கி, சமுதாயத்தைப் பார்த்து சீறி, தன் இன அடையாளமான பூநூலையே கழற்றி எறிந்த ஒரு பொதுவுடைமைவாதியாக (கம்யூனிஸ்ட்) தோற்றமளித்தாலும், பெண் விடுதலைக்காக 'புரட்சிப் பெண்' உருவாக ஆசைப்பட்ட மனித நேயம் கொண்டவனாக இருந்தாலும் -


கண்ணன் மேலும், அம்மன் மேலும் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு பக்தனாய், இயற்கையை, அழகை, காதலை, இன்னும் இன்னோரன்ன ரசனைகளை எல்லாம் தன்னகத்தே கொண்டிருந்து, அவைகளின் வெளிப்பாடாய் -


"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" என்று தன் தாய் மொழிமீது அளவு கடந்த பற்றுக் கொண்டு, சொல்லாத விடயங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு, அற்புத கவிதைகளை நம் தமிழுக்கும், நமக்கும் அளித்து, 'புதுமைக் கவிதை, இலகு கவிதை'- இவற்றின் முன்னோடியாய், ரசனையுள்ள எவனும் கவிதை எழுதலாம் என நமக்கெல்லாம் வழிகாட்டி, "மகாகவி" எனப் புகழ் பூத்த - என் பாரதிக்கு, நம் பாரதிக்கு இன்று பிறந்த நாள் நினைவு தினம்.


உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் என் உள்ளம் இனிக்கிறது. உன்னைப்பற்றி எழுத எனக்கு இந்த முகநூல் பக்கங்கள் போதாது. என்னை முழுமையாக ஆக்கிரமித்தவன் நீ. 


ஆனால்.......,


"பஞ்சமும் நோயுமுன் மெய்யடியார்க்கோ

 பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ

 தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ

 தாயுந்தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ...,"


என்னையும் கவிதை என்ற ஏதோ ஒன்றை எழுத, முன்னோடியாக இருந்து தைரியம் தந்த மகா கவியே,

இன்றைய உனது பிறந்த நாளிலே ஏனோ உன்னை எண்ணி, இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் வந்ததைத் தடுக்கவே முடியவில்லை.


எங்கே ஐயா நீ கனவு கண்ட சுதந்திரம்? எங்கே ஐயா நீ கனவு கண்ட ஒற்றுமை? எங்கே ஐயா நீ கனவு கண்ட பாரத தேச பக்தி?

எங்கே ஐயா நீ கனவு கண்ட தமிழ்ப் பற்று? எங்கே ஐயா நீ கனவு கண்ட பெண் விடுதலை? உன் கனவுகளெல்லாம் பொய்யாய்ப் போனாலும் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை உன் நாமம் வாழும்.


விம்மி வெடிக்கும் கனத்த இதயத்தோடு என் கண்ணீரை உனக்குக் காணிக்கையாக்கி உன் பிறந்த நாளிலே உன் பாதம் தொழுகிறேன்.


உயிர் பிரியும்போதுகூட உன் பெயர் சொல்லி மண்ணில் விழுந்தால் நான் உண்மையான தமிழன். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை உன் நாமம் வாழும். வாழ்க உன் நாமம், ஓங்கி வளர்க உன் புகழ் என்றென்றும்!!!!



லோகநாதன் P. S. கொலம்போ. ஸ்ரீலங்கா


Comments

உண்மையாகவே உடல் சிலிர்த்தது, முதல் இரண்டு வரிகளிலேயே ! பாரதியின் உருவத்தையும் உள்ளத்தையும் ஒருசேர தரிசிக்க வைக்கும் எழுத்தாக அமைந்தது தங்களது பதிவு. கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று விரும்பிய பாரதியின் கனவுகளின் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்லிய வரிகள் நெஞ்சைத் தாக்கின. சிறந்த பதிவு. அவனது எழுத்து, எண்ணம், உணர்வு இவற்றின் எதிரொலிகள்நம் நெஞ்சை நிறைத்துக் கொண்டே இருக்கட்டும். வாழ்த்துகள் !

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்