மக்கள் திலகத்தின் மனிதநேயம்

 எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி. எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும் உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது. பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.


பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி. திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர். அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில் வாசிக்கலாம்.
‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார். நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். ‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னம்மா நீ…?’ என்றார்.
கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக பட அதிபரைத் திட்டினார். புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே உடன் நடித்தார்’.
ராணி சம்யுக்தாவில் மட்டுமல்ல, ரிக்ஷாகாரனில் நடித்த போதும் பத்மினியைப் புதிய சங்கடம் வாட்டியது. அப்போது, தனது ‘உலகம் சுற்றும் வாலிபனு’க்காக எம்.ஜி.ஆர். அயல்நாட்டுப் பயணத்தில் இருந்தார். கழக இடைத்தேர்தல்கள் என அனைத்து நொடிகளிலும் நேரம்போல் இயங்கினார். இடையில், பத்மினிக்கு அவருடைய கணவரிடமிருந்து குடித்தனம் நடத்த அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்து விட்டது.
பத்மினிக்குப் பதற்றம் அதிகரித்தது. எம்.ஜி.ஆர். இருக்கிற பிஸியில், அவர் ஒத்துழைக்க நினைத்தாலும் அரசியல் குறுக்கிடுமே என்கிற தவிப்பு கூடியது. குறித்த காலத்தில், பத்மினி அவரது கணவரைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர். தன் மற்ற இயக்கங்களை ஒத்தி வைத்துவிட்டு, இரவு பகலாகத் தொடர்ந்து பத்மினியோடு நடித்துத் தீர்த்தார். அதோடு மட்டுமல்ல, பத்மினி முன்னிலையில் வாத்தியாராகி மஞ்சுளாவுக்கும் மகிழ்ச்சியோடு பாடம் நடத்தினார்.
‘எங்க தங்கச்சியைப் பார்! ஒத்திகைன்னாலும்கூட, டேக் மாதிரி எவ்வளவு கரெக்டா செய்யறாங்க பார். இதைப்போல நடிக்க நீயும் கத்துக்கணும்’.
பத்மினிக்கு 27 வருடங்களுக்கு மேலாக அரிதாரம் பூசியவர் மேக்அப்மேன் தனகோடி. அவரை அம்போ என்று விட்டுவிட்டு அமெரிக்காவுக்குப் போவதில் பத்மினிக்கு சம்மதம் கிடையாது. எம்.ஜி.ஆரிடம் சொன்னால் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை. தனகோடியின் எதிர்காலப் பிழைப்பு குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்.
சினிமா எஜமானர்களை எதிரிகளாகப் பாவிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். தொழிலாளிகளிடம் தனிப் பிரியம் காட்டுவதே தலைவரின் ஸ்டைல். பத்மினி விஷயத்திலும் அது நிரூபணமானது. தன்னுடைய புதிய ஜோடியான லதாவுக்கு தனகோடியை மேக்அப்மேனாக எம்.ஜி.ஆர். நியமித்தார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை