கம்பனும் கண்ணதாசனும்

 “கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை” என்று அடிக்கடி உரைப்பார் கவியரசர் கண்ணதாசன்



.

“பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி வைத்த கம்பனுக்கு ஈடு –
இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு”
என்று வேறொரிடத்தில் உணர்ச்சி பொங்க பாடி, தனக்கும் கம்பனுக்குமிடையே உள்ள மானசீக உறவை தம்பட்டம் அடிக்கிறார் கண்ணதாசன்.
முன்னூறுக்கும் மேலான கம்பனின் பாடல்களை கண்ணதாசன் மனனம் செய்து வைத்திருந்தார்.
கம்பனுக்கும் கவியரசருக்கும் அப்படியென்ன ஒரு இறுக்கம்? கம்பன் மேல் அப்படியென்ன ஒரு கிறக்கம்? கவியரசரே தருகிறார் அதன் விளக்கம்.
எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன் அப்படித்தான்
என்று பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாக அழகாக கற்பனை செய்து ஆனந்தப் படுகிறார் கவிஞர்.
அதுமட்டுமல்ல தனது எத்தனையோ சினிமா பாடல்களில் கம்பனை நினைவுக்கு கொண்டு வந்து களிப்படைகிறார் கண்ணதாசன்.
‘கன்னியரை ஒரு மலரென்று’ பாடிய கம்பனை வம்புக்கிழுத்து “கம்பன் ஏமாந்தான்” என்ற பாடலில் “புலவா நீ சொன்னது பொய்” என்று – சூசகமாக – அன்பாகச் சாடுகிறார் நம் கவிஞர்.
“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று தொடங்கும் திரைப்படப்பாடலை எழுதும்போதும் கவிஞருக்கு கம்பனின் நினைவு வந்து மீண்டும் பாடாய்ப் படுத்துகிறது. “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வருணனை” என்று பாடி ஆனந்தம் கொள்கிறார்.
“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” என்ற காலத்தில் அழியாத கானத்தில் ‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா’ என்று வரும் கண்ணதாசனின் பாடல்வரிகளை முணுமுணுத்திராத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.
“அவள் ஒரு மேனகை” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இழைந்து குழைந்து பாடும் கவிஞரின் பாடலிலும் ‘என்ன சொல்லி என்ன பாட, கம்பன் இல்லை கவிதை பாட’ என்று கம்பனை நினைவுக் கூறுகிறார்.
“அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என்ற பாடல் மறக்க முடியாத நிலாப் பாடல். பேசாமல் “வண்ண நிலா” “வெள்ளி நிலா” என்று பாடி விட்டு போவதுதானே? ஊஹும்.. “கம்பன் பாடிய வெள்ளி நிலா” என்று மறைந்துபோன கம்பனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிறார் கண்ணதாசன்.
“இதயத்தில் நீ” என்ற படத்தில் ‘சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?” என்ற படத்தில் மனதை வருடும்
அருமையான
காதற்பாடலொன்று.
“கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ? – இந்த
பட்டு உடலினை
தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ?”
என்ற கம்பனை பிடித்திழுத்து வந்து நுழைக்கையில் நம் மனதும் கம்பனை நாடிச் செல்கிறது.
அது மட்டுமா? பண்டிதர்கள் மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடிய தண்டமிழ் வரிகளை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக்கியவன் இந்த கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.
“நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
……………………………
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்”
என்ற கம்பராமாயணத்தில் வரும் இலக்கணச் செய்யுளை எல்லோரும் புரியும் விதத்தில் எப்படி இனிமையாய் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் என்று பாருங்கள்.
“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா?”
ஆஹா…! இதை விட எளிமையா வேறு யாரால் கூற இயலும்?
“தோள் கண்டார் தோளே கண்டார்”! என்று கம்பன் ராமனை வருணிக்கும் வரிகளை “இதயக்கமலம்” என்ற படத்தில்
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”
என்ற பாடல் வரிகளை பட்டிக்காட்டானுக்கும் எட்டும் வகையில் புட்டு புட்டு வைக்கிறார்.
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.
என்று “பாசம்” படத்தில் வரும் கவிஞரின் பாடல் வரிகளிலும் கம்பனின் தாக்கம் ரொம்பவே தெரிகிறது.
மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. வேறு எந்த புலவனைக்காட்டிலும் கம்பனின் எழுத்துக்கள் இவனை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழுக்குக் ‘கதி’ இருவர்தானாம். காலங்காலமாக அறிஞர்கள் உரைக்கும் கூற்று இது. “கதி” என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்து கம்பனையும், ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்குமாம்.
சிலகாலம் நாத்திகச் சிந்தனையில் ஊறித் திளைத்த கண்ணதாசன், கம்பராமாயணத்தைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கம்பனின் பாடல்களைக் கசடறக் கற்று, அதன் கவிநடையில் மயங்கி தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் கண்ணதாசன்.
“நான் கேலி செய்ய நினைத்த கம்பன், என்னையே கேலி செய்து விட்டான்” என்று இந்நிகழ்வை கண்ணதாசன் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,