உமர் கய்யாம்

 உன்னத மனிதர் உமர் கய்யாம் மறைந்த நாளின்றுஉமர் கய்யாம் உலகப் புகழ்பெற்ற கவிஞர். அதுமட்டுமல்ல... வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி என இவருக்குப் பல முகங்கள் உண்டு.இவர் 1048ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (இன்றைய ஈரான்) பிறந்தார். இவரது குடும்பம் கூடாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. உமர் கய்யாம் சில ஆண்டுகள் வடக்கு ஆப்கானிஸ்தானில், பால்க் நகரில் வசித்தார்.
சேக் முகமது மன்சூர் என்பவரிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிறகு குராசன் பகுதியில் இமாம் மோவாபாக் நிஷாபுரியிடம் தனது கல்வி அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். அவரிடம் தத்துவமும் பயின்றார். மிகச் சிறந்த கணிதவியலாளரான உமர், எண் கணிதம், இசை, இயற் கணிதம் குறித்த புத்தகங்களை தனது 25 வயதுக்குள் எழுதினார்.
உஸ்பெக்கிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரில் 1070ல் குடியேறினார். இயற்கணிதப் புதிர்களுக்கான செயல் விளக்கம் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அதில் முப்படிச் சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான வடிவியல் முறையை வகுத்தார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியையும் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல், பெர்ஷியாவில் பாட நூலாகப் பயன்படுத்தப்பட்டது.
தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக் கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்கு வரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். கடவுள், ரோஜாக்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம் பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் நவீன கருத்துகளும் நிரம்பி வழிந்தன.
நாள்காட்டி சீர்திருத்தத்துக்காக வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள சுல்தான் மாலிக் ஷா இவரை அழைத்தார். இதற்காக எஸ்ஃபகான் என்ற இடத்தில் ஒரு கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டது. நாள்காட்டியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஜலாலி (Jalali) என்ற புதிய நாள்காட்டி உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் என்பது 365.24219858156 நாட்கள் என்று துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார் உமர் கய்யாம்.
நாட்டில் 1092ல் உருவான புரட்சியில் பல தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். சுல்தான் மாலிக்கும் இறந்தார். ஆட்சி கை மாறியது. வானியல் ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டது. அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவரை நாத்திகவாதி என்று கூறி புரட்சியாளர்கள் இவரையும் தாக்கினார்கள். இதன்பிறகு உமர் கய்யாம் கவிதைகள் படைப்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இவர் எழுதிய இரண்டு அத்தியாயங்கள் கொண்ட நூலின் கையெழுத்துப் படி ஈரானில் உள்ள டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இன்றும் உள்ளது.
இவரது கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ் ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859ல் வெளியிட்டுள்ளார். இது உலகப் புகழ்பெற்றது. இத்தனை ஆளுமை மிக்க உன்னத மனிதர் உமர் கய்யாம் 1131, இதே டிசம்பர் 4ம் தேதி மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,