கணித மேதை ராமானுஜம்
கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் (டிசம்பர் 22) இன்று.
என் ' எண்ணும் எழுத்தும்' கவிதை நூலை
'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு'
என்று எழுதிய திருவள்ளுவருக்கும்,
'முடிவிலியை அறிந்த மனிதன்' '(The man who knew infinity)
கணிதமேதை ராமானுஜத்துக்கும்
சமர்ப்பணம் செய்திருந்தேன்.
கும்பகோணத்தில் ராமானுஜம் வாழ்ந்த வீடு சாரங்கபாணி சன்னதி வாசலில் இருக்கிறது. கலை விமர்சகர் தேனுகா- உடன் அவ்வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் காபி சாப்பிடச் செல்லும்போதும் அக்கோயில் மண்டபத்தில் அமர்ந்து உரையாடும்போதும் ராமானுஜம் குறித்த செய்திகளைப் பகிர்ந்துக் கொள்வார்.
அதைக் கடக்கும்போதெல்லாம் உலகப் புகழ்பெற்ற ஒரு மாமனிதர் அங்கு வாழ்ந்தார் என்று ஒரு மாபெரும் வியப்புடன் அதைக் கடப்பேன்.
அவர் ஊரில் வாழ்ந்த காரணத்தினால், அவர் பயின்ற கல்லூரியில் நானும் படிக்கிறேன் என்ற பெயரில் உலவிய காரணத்தினால் கணிதம் எனக்கு வராது என்றாலும் கூட அவரது உயரங்களைப் புரியாமலேயே ராமானுஜத்தின் மேல் ஒரு மயக்கம் எனக்குள் தோன்றியது.
அவர் குறித்த செய்திகளை அறிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருந்தது. அவரது குல தெய்வம் கனவில் வந்து சிக்கலான சூத்திரங்களுக்கு விடை கூறும் என்ற ஒரு மர்மத் தகவலும் அவரைப்பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வத்தைத் தூண்டியது.
அறிவின் உன்னதத்தைத் தீண்டிய ஒரு மனிதன் வறுமையின் கோரப்பிடியில் சூறையாடப்பட்டது என்ன ஒரு கொடுமை?
பிறகு இயக்குநர் லிங்குசாமி 'வேட்டை' திரைப்படத்தில் மாதவன் நடித்தபோது ராமானுஜம் வேடத்தில் நடிக்க அவருக்கு ஒரு ஆங்கிலப் பட வாய்ப்பு வந்திருப்பதாக கூறினார். அதில் பணியாற்ற விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவ்வேடத்தில் அவரும் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கும் கிடைக்கவில்லை.
கும்பகோணம் காற்றைச் சுவாசித்ததால் என்னவோ நானும் எண்கள் குறித்து யோசித்திருக்கிறேன். 'எண்ணும் எழுத்தும்' கவிதை தொகுப்பு எண்கள் குறித்த என் வியப்புகள். என் சிலிர்ப்புகள்.
கணிதமேதை ராமானுஜம் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் நான் பிறந்ததுதான் எண்கள் குறித்து நான் எழுதுவதற்கு ஒரு மறைமுகமான காரணம் என்று நினைக்கிறேன்.
ஆகவே அந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்தேன்.
*
-பிருந்தா சாரதி
*
('எண்ணும் எழுத்தும்' நூல் முகப்பையும் உள் ஓவியங்களையும் எண்கள் குறித்த ஓவியங்களில் ஆர்வம் மிக்க தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த ஓவியர்
இராம. பழனியப்பன் Palaniappan Rm அவர்களிடம் இருந்து வாங்கிச் சேர்த்தேன்.)
Comments