தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்

 தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்

      நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.     முன்பு ஒருநாள் உணவுப் பொருள் பங்கீட்டுக் கடையில் பொருள்களை வாங்குவதற்காகச் சென்றிருந்தேன்.


 நீண்ட வரிசையில் நின்றபடி நோட்டமிட்டேன்.      கடையில் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது என எழுதப் பட்டிருந்தது. 


ஒரு வரியில் இரு பிழைகள். அரிசி, பருப்பு வழங்கப்படுகின்றன என அமைய வேண்டும். And என்பதன் மொழிபெயர்ப்பு மற்றும் என்பது. 


ஆங்கிலத்தில் bread and  butter, ladies and gentlemen என்று எழுதுவது அவர்கள் மரபு. நாமும் அவர்களைப்போல ரொட்டி மற்றும் பால் கிடைக்கும் என்று எழுதுவது சரியன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. சேர மற்றும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என எழுதுவது தவறு.


    கபிலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என எழுதுவது ஆங்கில மரபு. கபிலர் கலை அறிவியல் கல்லூரி என எழுத வேண்டும். இதுதான் தமிழ் மரபு.


    ஒரு வாக்கியத்தை ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் முடிக்க வேண்டும். பன்மையில் தொடங்கினால் பன்மையில் முடிக்க வேண்டும். 


அரிசி, பருப்பு என ஒன்றுக்கும் மேற்பட்டப் பொருள்களை வழங்குகிறார்கள். வாக்கியம் பன்மையில் தொடங்குகிறது; வழங்கப் படுகின்றன என்று பன்மையில் முடிய வேண்டும். மாடுகள் மேய்கிறது என எழுதலாமா? 


மாடுகள் மேய்கின்றன என எழுத வேண்டும். உதடுகள் ஒட்டாது என்பது தவறு. உதடுகள் ஒட்டா என்பதே சரி.    அங்கே இருந்த கரும்பலகையில், அரிசி இருப்பு- முன்னூறு மூட்டைகள் என எழுதப்பட்டிருந்தது. முன்னர் நூறு மூட்டைகள் இருந்தன என்றால் இப்போது இருப்பில் எத்தனை மூட்டைகள் உள்ளன என்று கேட்கத் தோன்றியது. முந்நூறு மூட்டைகள் என எழுதுவதே சரியாகும். அதே கரும்பலகையில் இக் கடைக்கு ஐநூறு அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என எழுதப் பட்டிருந்தது. ஐநூறு என்பது தவறு. ஐந்நூறு என எழுதுவதே முறையாகும்.


    வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தது. எதிரில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. 


போவோர் வருவோரைக் கவரும் “இன்றைய ஸ்பெஷல்” பலகையில் அக் கடைக்காரர் எழுதியிருந்த பட்டியலைப்  பார்த்தேன். மீன் குழம்பு, மீன் வருவல், கேரட் பொறியல் எனப் பட்டியல் நீண்டது.


 கடைசியில் அன்புடன் வரவேற்க்கிறோம் என்று எழுதி “முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்னும் பொன்மொழியுடன் முடித்திருந்தார்.     பொரிப்பதால் பொரியல், வறுப்பதால் வறுவல். இது தெரியாமல் பொறியல், வருவல் என எழுதிவிட்டார்.


 பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம், கருவி எனப் பல பொருள்கள் உண்டு. எலியைப் பிடிக்க உதவும் கருவிக்கு எலிப்பொறி என்று பெயர். வருவல் என்றால் வருக என்று பொருள். 


கோழி வருவல் என்றால் கோழியே வருக என்றாகிவிடும்! வரவேற்க்கிறோம் முயற்ச்சி என்பனவும் பிழையுடைய சொற்கள்தாம். 


இரண்டு வல்லின மெய்கள் இணைந்து வாரா என்பது விதி. 


அதாவது க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு மெய் எழுத்துகளில் எந்த இரண்டு எழுத்துகளும் அருகருகே அமைவது தவறு.    அங்கே சாலை ஓரத்தில் காவல் துறையினர் வைத்திருந்த ஒரு வாசகம் கண்ணில் பட்டது.  சாலை  விதிகளைக் கடைபிடிப்பீர் என்பதாகும்.


 கடைப்பிடிப்பீர் என எழுதியிருக்க வேண்டும். நடுவில் ப் போடாமல் கடைபிடிப்பீர் என்று எழுதினால், கடையை வாடகைக்குப் பிடித்தல் என்றுதான் பொருள் தரும்.    அந்த வழியாக ஒரு கல்லூரிப் பேருந்து கடந்து சென்றது. அதன் பின்புறம் ‘மாணவியர்கள் உள்ளே’ என எழுதப் பட்டிருந்தது. வாழும் வழியிலும் சரி, பேசும் மொழியிலும் சரி கள்ளின் ஆதிக்கம் அதிகம். மாணவி என்பது ஒருமை; மாணவியர் என்பது பன்மை. பிறகு எதற்கு மேலும் ஒரு கள்? மாணவியர்கள் என்று  எழுதலாமா? கூடாது.        அப்போது அவசரமாக வந்த ஒருவர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தபோது, மற்றொருவர், ”அங்கே என்ன எழுதியிருக்கு? பாருங்க” என்றார். வரிசையில் நிற்கவும் என்று எழுதியிருந்தார்கள். வரிசையில் நிற்க என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். 


எல்லோரும் வரிசையில் வரவும் என்பது தவறு. விரைந்து செல்லவும் என  எழுதினால் தவறு. செல், செல்க, செல்ல வேண்டும் என எழுதலாமே. 


வரிசையில் வருக என்பதே சரி. உம் என்னும் ஓசையுடன் வாக்கியம் முற்றுப்பெறுவது தமிழ் மரபு அன்று.      என் பணியை முடித்துத் திரும்பினேன், எனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாக ஒலித்தது. ஒரு நண்பர், ”இன்று இரவு எட்டு மணிக்கு என் உரை திருச்சி வானொலியில் ஒளி பரப்பாகிறது” என்று செய்தி அனுப்பியிருந்தார்.


 வானொலியில் ஒலிபரப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழும். இந்த வேறுபாட்டை அவர் அறியவில்லை. 


அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராக உள்ளார்!


    கட்சித் தொண்டர்கள், நடிகர்களின் இரசிகர்கள் வைக்கும் பதாகைகளில் காணப்படும் பிழைகளுக்கு அளவே இல்லை. செய்தித் தாள்களின் தலையங்கக் கட்டுரைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன. வணிக எழுத்தாளர்களின் படைப்புகளில் எண்ணற்றப் பிழைகள்! சமூக வலைத் தளங்களில் காணப்படும் பதிவேற்றங்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை.


    “இவை எல்லாம் பெரிய பிழைகளா? பிழை இருந்தாலும் விஷயம் புரிகிறது. அது போதாதா?” இப்படிக் கேட்டவர் ஒரு தமிழர்.


 இன்னொருவர் இப்போது காணப்படும் பிழைகளுக்கு ஏற்பளித்துப் புதிய இலக்கணம் எழுத வேண்டும் என்கிறார்.


 இப்படி ஒரு சமரசம் நம் மூதாதையர்களிடம் இருந்திருந்தால் இன்றைக்குத் திருக்குறளும், தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நமக்குச் சிந்தாமல் சிதறாமல் கிடைத்திருக்குமா? 


   ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்வது ஒரு வாழ்வியல் திறனாகும். இந்தத் திறமை வாய்க்கப் பெறாதவர்கள், திறனுடையாரை அணுகித் தவறில்லாமல் எழுதிட ஆவன செய்வது தாய்மொழிக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.


      இப்போது பாரதியார் இருந்தால், நம்மைப் பார்த்துப் ‘பிழை மலிந்த மொழியினாய் போ போ போ’ என்று பாடியிருப்பார்;


முனைவர் அ.கோவிந்தராஜூ, படித்தில் பகிர்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,