மணப்பெண் தந்த கல்யாணப்பரிசு

 2016 ல் நடந்தது 

ஸ்ரேயாவின் திருமணம் !ஆனால் இன்னமும் கூட 

பத்திரிகைகளில் அது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.


காரணம் மணமகள் ஸ்ரேயாவின் தந்தை.

அவர் பெயர் அஜய் முனாட் . 

மகாராஷ்டிரா மாநிலம்   அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர்.   


அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணத்திற்கான தேதி எல்லாம்  நிச்சயிக்கப்பட்டு விட்டது. சுமார் ஒரு கோடி  ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே  தெரியும்.


இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய ...இல்லையில்லை ... 

மிகப் பெரிய மாற்றத்தை  செய்யலாமா என  மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும்  இதற்கு சம்மதிக்க வேண்டுமே..! 


முக்கியமாக   மகள் ஸ்ரேயா ? 

அவள் சம்மதிக்க வேண்டுமே ?


சரி. சிந்தித்துக் கொண்டே இருந்தால் செயல்படுத்துவது எப்படி ?


ஒருநாள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தார் அஜய். மகள் ஸ்ரேயாவும் அங்கிருந்தாள்.


அஜய் தன் மனதில் இருந்த  ஸ்ரேயாவின் கல்யாணம் பற்றிய திட்டத்தை மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .

சொல்லும்போதே மகள் ஸ்ரேயாவின் முகத்தை உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். 


அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஒருவழியாக சொல்லி முடித்து விட்டார் .

அவர் சொன்னதைக் கேட்டு விட்டு, அந்தக் குடும்பமே அமைதியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தது.


அஜய்  முனாட் மெதுவாக தன் மகள் ஸ்ரேயா அருகே சென்று கேட்டார்  : 

“நான் ஏதாவது தப்பாக திட்டம் போட்டு விட்டேனா ?  அப்படி இருந்தால்  என்னை மன்னித்து விடு அம்மா.” 


அப்பா இப்படி சொல்லவும், திடுக்கிட்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரேயா .

அப்பாவின் கண்களில் கண்ணீர். அதைப் பார்த்த மகள் ஸ்ரேயாவின்  கண்களிலும் கண்ணீர். “அப்பா, உண்மையை சொல்லட்டுமா ?”


அஜய் தன் மகள் என்ன சொல்லப் போகிறாள் என படபடப்போடு பார்த்திருந்தார்.


ஸ்ரேயா சொன்னாள் : 

“உண்மையை சொல்லப் போனால் எனக்கு இப்போது சந்தோஷத்தில் வார்த்தைகள் எதுவும் வரவில்லை அப்பா. ஆனால் என்னைப் போல் ஒரு புண்ணியம் செய்த மகள், இந்த உலகத்தில் எவருமே  இருக்க முடியாது. எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதரை அப்பாவாக நான் அடைந்து இருக்கிறேன்.”


ஸ்ரேயா பேச பேச அவளது தந்தை அஜய் அதை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் : “நிஜமாகவா சொல்கிறாய் ஸ்ரேயா ?”

ஆனந்தக் கண்ணீருடன் “ஆம்” என தலையசைத்தாள் ஸ்ரேயா.


அப்பறம் என்ன ?

அஜய் முனாட்டின் மகள் ஸ்ரேயா திருமணம் சந்தோஷமாக நடைபெற்றது .


அஜய் முனாட்டின் திட்டப்படி ஆடம்பர செலவுகள் எதுவும் இல்லாத திருமணம் .


கல்யாண செலவுகளுக்காக அஜய் முனாட் ஒதுக்கி வைத்திருந்த அந்த ஒரு கோடி ரூபாயில் ... 

90 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. 


யாருக்காக அந்த வீடுகள்..?

தங்குவதற்கு இடம் இல்லாமல் பிளாட்பார்மில் குடியிருந்த 90 குடும்பங்களுக்கு ..!


ஆம். அஜய் முனாட் தன் வீட்டிலிருந்து அலுவலகம் போகும் வழியில், தங்குவதற்கு வீடு இல்லாமல் பிளாட்பார்மில் பரிதவிப்போடு வாழ்ந்து கொண்டிருந்த பல குடும்பங்களை தினம்தோறும்  பார்த்து வந்திருக்கிறார். இது அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது.


அவர்களிலிருந்து  90 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தன் மகள் ஸ்ரேயா கரங்களால், கல்யாண மேடையிலேயே அந்த வீடுகளை பரிசாக வழங்கினார் அஜய் முனாட்.


அந்த 90 குடும்பங்களும் இன்று மிகவும் சந்தோஷமாக சொல்கிறார்கள் :  “எல்லா கல்யாணங்களிலும் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும்தான் மற்றவர்கள் கல்யாணப் பரிசு கொடுப்பார்கள். ஆனால் இந்தக் கல்யாணத்தில் இந்த மணப்பெண் எங்களுக்கு கல்யாணப்பரிசு கொடுத்திருக்கிறாள். இதை எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் மறக்க மாட்டோம். அந்தப் பெண் ஸ்ரேயா தன் கணவனோடு பல்லாண்டு நலமாக வாழ ஒவ்வொரு நாளும் நாங்கள் 

வாழ்த்துவோம்.” 


நாமும் கூட வாழ்த்துவோம்.


“கால் பட்ட இடமெல்லாம் மலராக

கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும் -

உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்

ஆனந்தக் கண்ணீரே

என்றாகணும்”


வாழ்க வளமுடன் ..!


John Durai Asir Chelliah 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை