கௌதம சித்தார்த்தன்
கௌதம சித்தார்த்தன்
தமிழில் காலம்காலமாக இலக்கியவாதிகளாகட்டும்பெரிய பத்திரிகையாளர்களாகட்டும் அவர்கள் எப்போதுமே தங்கள் நூல்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துகொண்ட சினிமாக்காரர்களை வைத்தும் அரசியல்வாதிகளையும் வைத்தும் வெளியிட்டு வருகிறார்கள். இத்தகைய செயல் இந்த சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை; இது ஒரு ஆதிக்கப்பார்வை.
இவர்கள் எளிய மக்களைப் பார்த்து நீங்கள் இதற்கு லாயக்கு அற்றவர்கள் இதை இன்னார்தான் வெளியிட வேண்டும் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆதிக்க படிமங்களைத்தான் உடைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அரசியல் நூல் ஒன்றை ஒரு பூம்பூம் மாட்டுக்காரர்தான் வெளியிட்டார். இவர்களோடுதான் என்னையும் என் படைப்புகளையும் என் வாழ்வியலையும் அடையாளம் காண்கிறேன். விளிம்புநிலை மக்கள், நாதியற்றவர்களாக உள்ள மக்களுடன்தான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதனால்தான், எளிய மனிதர்களைத் தேடிச்சென்று இந்த புத்தகத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லும்போது இந்த வாழ்வியல் பெரும் அற்புதமாக மாறுகிறது. ஒரு மகத்தான காவியத்தின் நாயகர்களாக அந்த கணம் தொன்றுவதை அவர்கள் முகம் காட்டுகிறது.
தமிழி இதழை வெளியிடுவதற்கு ஒரு அருந்ததியர் பெண்மணியை சந்தித்து இந்த இதழை நீங்கள் வெளியிட வேண்டும் என்று சொன்னேன். அவரிடம் உங்களுடைய பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘என்னுடைய பெயர் குஞ்சால்’ என்று கூறினார். நான் அப்போது அவரிடம், உங்களுடைய பெயர் குஞ்சால் அல்ல, குஞ்சம்மாள் என்றுதான் சொல்ல வேண்டும் என்றேன். அப்போது அவருடைய முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் ஒரு கோடி சூரியனின் பிரகாசம் தெரிந்தது.
இது போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியலில் மட்டுமல்லாது அவர்களுக்கு இந்த சமூகம் சூட்டியுள்ள பெயர்களிலும்கூட ஒரு ஆதிக்க அரசியல் இருக்கிறது.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
Comments