ஒரு கட்டு முருங்கை கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்து முடிக்க

 

 ஒரு கட்டு முருங்கை கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்து முடிக்கஉடல் சுறுசுறுப்பிற்கு முருங்கைக் கீரை சாப்பிட சொல்வது வழக்கம். ஆனால், அதிலிருக்கும் 18 அமினோ அமிலங்கள், முட்டை, பால், இறைச்சிக்கு இணையான புரத சத்துகளை நம் உடலுக்குக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அடிக்கடி முருங்கை கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த முருங்கை கீரை மிகவும் உதவுகிறது. ஒரே ஒரு முருங்கை மரத்தை நட்டு வைத்து, அதன் பயன்களை முழுவதுமாய் அனுபவித்து இருப்பவர்கள், வயதான காலத்திலும் கோலூன்றி நடக்காமல் ஆரோக்கியமாக வாழ உதவும் என்பதைதான், ‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ என்று அந்த காலத்தில் பழமொழியாகக் கூறினார்கள்.


கீரை என்றாலே அதனை ஆய்வதில் இருக்கும் சிரமத்தை நினைத்தே பலரும் அவற்றைத் தவிர்க்கின்றனர். ஆனால், இனி அதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கட்டு கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்துவிட முடியுமென்றால், கீரையை ஒதுக்க மாட்டார்கள் தானே! ஆம், மனிதனுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கும் ஒரே சைவ உணவு, முருங்கை கீரைதான். இதனை முறையாக சமைத்து சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அந்த வகையில் இந்த எளிய முறையைப் பின்பற்றி ஒரே நிமிடத்தில் கீரையை ஆய்ந்துவிடுங்கள்.

அதிலும் முக்கியமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முருங்கைக் கீரையை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது. இவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உபயோகமாக இருக்கும். வீட்டில் முருங்கை வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது கடையில் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, முந்தைய நாள் இரவே முருங்கைக்கீரைக் கட்டை தனியே எடுத்து, அதில் இருக்கும் மஞ்சள் இலைகள், தேவையற்ற இலைகள், குப்பைகள் ஆகியவற்றை மட்டும் தனியே அகற்றிக் கொள்ளவும்.


பிறகு, ஒரு பெரிய நியூஸ் பேப்பரை விரித்து, அதில் முருங்கைக் கீரையை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இதனை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பாருங்கள், இலைகள் தனியாகவும், குச்சிகள் தனியாகவும் இருக்கும். இப்போது நீங்கள் சுலபமாகக் குச்சிகளை மட்டும் தனித்தனியாக எடுத்து விட்டு, கீரையைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம்.

அவ்வளவுதான்.. இவ்வளவு எளிதான முறையில் கீரையை ஆய்ந்து சமைக்க முடியுமென்றால் நிச்சயம் இத்தனை சத்துகள் நிறைந்த கீரையைத் தவிர்க்காதீர்கள்.

பகிர்வு

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,