தமிழுக்கு உரிய தனிப் பெருமை வெண்பா



ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.
சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.
தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.
ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?
இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.
தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.




அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.
தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.
சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே
கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய
கங்கரா கோணாகலா மதியக் கோடீர
சங்கரா சோணா சலா.
இதன் பொருள் :-
நாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத
புலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய
கம் – பிரமகபாலத்தைத் தாங்கிய
கரா – கரத்தை உடையவனே
கோணா – மாறுபடாத
கலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த
கோடீர – ஜடாபாரத்தை உடையவனே
சங்கரா – சங்கரனே
சோணாசலா – அருணாசலனே
சலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ
சங்கம் தா – சங்க வளையலைக் கொடு
பூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு
மேகலை தான் – மேகலையைக் கொடு
இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.
அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.
சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.
அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.
இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.
பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.
இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,