பிரபஞ்சன்





நீண்ட உயரம், சிவந்தமேனி; அகன்ற நெற்றி; கூரிய கண்கள்; பெரிய மூக்கு; பரந்த முகம்; சிரித்த பார்வை; நீண்ட பெரிய ஜிப்பா; தோளில் ஜோல்னாபை இவைதான் அவரது அடையாளம். இந்த அடையாளத்துடன் அவரைப் பார்க்கும் எவரும், அவரொரு முக்கியமான மனிதர் என்பதை உணர்ந்து விடுவர். அவர் தனது ஜிப்பாவைப் பெரும்பாலும் தரமான துணியில் அழகான வண்ணத்தில்தான் அணிந்திருப்பார். அந்த வண்ணமும் கடுவண்ண மாகவே (Thick and fast colour) இருக்கும். அவர் சுவையான காப்பியிலும், இசையிலும் எவ்வாறு மோகம் கொண்டிருந்தாரோ அப்படித்தான் ஆடையின் வண்ணத்திலும் பற்றுக் கொண்டிருந்தார். எப்போதும் பளிச்சென்று காட்சியளிப்பார். பெரும் பாலும் வெளியே கையில் சிகரெட்டுடன் இருப்பார். பலவற்றிலும் நேர்த்தியைக் கடைப்பிடித்த அவர், இந்தச் சிகரெட்டில் எப்படிக் கடைப்பிடிக்காது போனார் என்பது புரியவில்லை; இந்தப் புகைதான் அவருக்குப் பகையானது. அந்தப் புகைதான் அவரது உயிரைப் பறித்து நம்மிடையே இருந்து பிரித்து விட்டது. இது எல்லோர்க்கும் ஓர் எச்சரிக்கையாய் உள்ளது. எதிலும் சமரசத்திற்கு உட்படாதவர், சிகரெட்டுடன் சமரசமானதுதான் விந்தை.
அவருடைய நல்ல குணத்திற்கு ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டுவது ஏற்றது. ஒருமுறை ஓர் இலக்கிய நிகழ்வுக்கு அவரை அழைத்திருந்தனர். இவரும் சென்றார். அங்குப் பேசினார். அவரைப் பாராட்டி பெரிய வாழ்த்து மடலையும் தந்தனர். இரவு நேரம் அதிகமாகி விட்டதால் விழா முடிந்ததும் வீட்டிற்குப் புறப்பட்டார். ஏற்பாடு செய்தவர்கள் அவரைத் திரும்ப அனுப்பப் போக்குவரத்து வசதியைச் செய்யாததுடன், போக்குவரத்துக்கான பணத்தையும் அளிக்கவில்லை. அவரும் அவர்களிடம் எதனையும் கேட்கவில்லை. வீட்டிற்குப் புறப்பட்ட போதுதான் அவருக்கு ஒன்று தெரிய வந்தது. அதாவது, அவர் வீட்டிலிருந்து புறப்படும்போது பணத்தை எடுத்துவர மறந்துவிட்டார். அதனால், அந்த இரவில் அந்தப் பெரிய வாழ்த்து மடலை வரும் வழியில் ஒரு மரத்தின் மீது சார்த்திவிட்டுக் கால்நடையாகவே நடந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இலக்கியப் பேச்சு இப்போது பெரும் வணிகமாகி விட்டது. கள்ள வணிகமாகிவிட்டது. இலக்கிய வாணர்கள் அறவிலை வணிகர்களாக வலம் வருகிறார்கள். இதனை நினைக்கும்போது தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு சமயம் இந்நாட்டு மக்களை எண்ணி 'ஐயோ தமிழ்நாடே! உனக்கொரு ஐயோ!' என்றார். பிரபஞ்சனை ஐயோவென்று
விட்டவர்களை நோக்கி 'ஐயோ மக்களே' என்றுதான் கூற வேண்டி உள்ளது. உண்மையான மனிதரை இம் மக்கள் எப்போதுதான் அறியப் போகிறார்களோ! யாம் அறியோம் பராபரமே!
நன்றி: கீற்று.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,