புதுமைப்பித்தனின் வாழ்க்கையில்
புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டம் இல்லாமல் வசந்தம் வீசியது 1946 என்கிற ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான்.அந்த ஆண்டில் அவர் சினிமாவுக்கு வசனம் எழுதப்போனார். அவ்வையார் படத்தில் தொடங்கி பாகவதரின் ராக முக்தி வரை அது தொடர்ந்தது.ஆனால் அது ஒரு பேயைப்போல அவரை ஆட்டுவித்து அலைக்கழித்தது.சொந்தச் சினிமாக்கம்பெனி ஆரம்பிக்கும் பித்துப் பிடித்து கையில் சேர்ந்த பணத்தையும் அதில் இழந்து மீண்டும் ஓட்டாண்டி ஆனதோடு காசநோயின் கரங்களில் நிரந்தரமாகச் சிக்கிக்கொண்டார்.புனே நகரத்தில் வியாதியோடு தனிமையில் சீரழிந்து நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு சாவதற்காகவே மனைவியும் மகளும் வாழ்ந்துகொண்டிருந்த திருவனந்தபுரம் திரும்பினார்.
அவரே எழுதிய மகா மசானம் கதையில் வருவதுபோல ,
"அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். "ஜே ஜே" என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை”
தன்னைக் காப்பாற்றப் பொருளுதவி செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை நோக்கி கரம் உயர்த்திய புதுமைப்பித்தனை அன்று தமிழ்ச்சமூகம் கண்டு கொள்ளவில்லை. அவன் குரலைச் செவிமடுக்கவில்லை.
பரங்கிப்புண்ணைப் பரிசாகப் பெற்றுத் ”துன்பகேணி”யில் சிதைந்துபோன மருதியைப்போலப் புதுமைப்பித்தன் மனம் சிதைந்து மடிந்தார்.
பிரேதமாகக் கிடந்த புதுமைப்பித்தனின் நெற்றியை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார் கமலா. எழுதி எழுதி வீங்கிப்போன புதுமைப்பித்தனின் வலது கையைத் தன் நெஞ்சோடு அணைத்து மாறி மாறி முத்தமிட்டார்.காலமெல்லாம் கடிதங்களிலேயே வாழ்ந்து முடித்த தன் அருமைக் கண்ணாளின் ஆசை முத்தத்துடன் நம்மிடமிருந்து விடைபெற்றார் புதுமைப்பித்தன்.
நன்றி: விகடன்
Comments