நான் சொந்த நாடு இல்லாமல் இருக்கிறேன்.
முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த காந்தியார், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தார். ஆனால், கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாக இருந்தது. இச்சமயத்தில் அம்பேத்கரை சந்திக்க விரும்பினார், காந்தியார். நேரில் சென்ற அம்பேத்கரை உற்றுப் பார்த்துக்கொண்டே, ``தங்களுக்கு என் மீதும், காங்கிரஸ் மீதும் குறைகள் இருப்பதாக அறிகிறேன். தாங்கள் பிறப்பதற்கு முன்னால், என் பள்ளிக் காலத்திலிருந்தே தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்னை பற்றி நான் எண்ணி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன். மேடைகளில் இதை அடிப்படையாகப் பேசுவதோடு, காங்கிரஸின் திட்டங்களில் ஒன்றாகச் சேர்க்க முயற்சி எடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று சொன்னார் காந்தியார்.
காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னைக்கு அங்கீகாரம் கொடுத்தது உண்மை. ஆனால், பெயரளவில் அங்கீகாரம் கொடுத்ததைத் தவிர காங்கிரஸ் வேறொன்றும் செய்யவில்லை. உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், தாங்கள் எப்போதோ என்னைப் பார்த்திருக்க வேண்டும். மேலும் காங்கிரஸில் சேருவதற்கு கதர் சீருடை அணிய வேண்டும் என்று நிபந்தனை இருப்பதுபோல், தீண்டாமை ஒழிப்பையும் ஒரு நிபந்தனையாக ஆக்கியிருக்க வேண்டும். அப்படி ஒரு நிபந்தனையை ஏற்படுத்தி இருந்தீர்களேயானால், தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைவதை ஒரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எதிர்க்கும் அசிங்கமான செயலைத் தவிர்த்திருக்கலாம். நாங்கள் மகாத்மாக்களை நம்பத் தயாராக இல்லை. நான் வெளிப்படையாகக் கேட்கிறேன், என்னைப் பயங்கரவாதி என்று சொல்லவும், எங்கள் இயக்கத்தை எதிர்க்கவும் காங்கிரஸுக்கு அவசியமென்ன?
- இப்படி காந்தியாருடன் பேசும்போது, அம்பேத்கருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு நிமிடம் தாமதித்து மெதுவாகச் சொன்னார்...
அம்பேத்கர்அம்பேத்கர்
``காந்தி அவர்களே... எனக்குச் சொந்த நாடு இல்லையே?"
சற்றே அதிர்ந்த காந்தியார், ``உங்களுக்குச் சொந்த நாடு இருக்கிறது. வட்டமேசை மாநாட்டில் உங்கள் செயல்களால் உங்களைத் தேசபக்தராக நான் அறிகிறேன்" என்றார்.
``நான் மீண்டும் சொல்கிறேன்... நான் சொந்த நாடு இல்லாமல் இருக்கிறேன். பூனைகளைவிட, நாய்களைவிட எங்களை மோசமாக நடத்துவதும், எங்களுக்கு குடிக்ககூட தண்ணீர் கிடைக்காமல் செய்வதுமாக இருக்கும் இந்த நாட்டை, என் சொந்த நாடு என்று எப்படிச் சொல்வது? மரியாதை உள்ள தாழ்த்தப்பட்டவன் எவனொருவனும், இந்த நாட்டைப் பற்றி பெருமை கொள்ள மாட்டான்.
என்னை அரக்கன் என்று சொல்வதால் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், என்னை அரக்கன் என்று எந்த நாடு சொல்கிறதோ... அந்த நாடுதான் எங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பாகும். இந்த நாட்டுக்கு எவ்வளவு தீங்கு செய்தாலும் அது தவறாகாது. ஆனால், என் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நினைக்காமல், என் மக்களின் உரிமைக்காகப் போராடி வருகிறேன்" என்றார் அம்பேத்கர்
- மல்லை சத்யா
நன்றி: விகடன்
Comments