அந்த ஒருஆளுக்காக நான் பயப்படனுமா?

 அந்த ஒருஆளுக்காக நான் பயப்படனுமா?"

சினிமா, பத்திரிகைத்துறை ஆகிய இரண்டிலும் அற்புதமான ஒரு ஆளுமை..
காரணம், அந்த கிளாசிகல் நையாண்டி. எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் புதிய கோணத்தில் புரட்டிபோட்டு நக்கலடிப்பதில் சோ அவர்கள் கில்லாடி.
சோ என்ற பெயரை தாங்கிய பாத்திரத்தை நாடகத்தில் ஏற்கப்போய், ராமசாமிக்கு அதுவே அடையாளமாக மாறிப் போனது
சிவாஜி நடித்த 1963-ல் பார் மகளே பார் படத்தில் அறிமுகம். அதிலிருந்தே, சினிமாவில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அரசியலை துவைத்து எடுத்தார்..
அதிலும் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றில் அபார திறமை கொண்டவர் என்பதால், எந்த இயக்குநர், முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும் அவருக்கு உண்டான காட்சியை அவர் தனித்தன்மையோடு மெருகேற்றிக்கொள்வார்
சினிமாவில் பக்கா ஆணாதிக்கவாதியாகவே இருக்க விரும்பிய எம்ஜிஆரோடு, இன்னொரு ஆணாதிக்கவாதியான சோ சேர்ந்து நடித்த காட்சிகளெல்லாம் பின்னி பெடலெடுக்கும்..
திரையுலகில் எம்ஜிஆர் கதை எழுதிய ஒரே படம் கணவன்(1968). அதில் ஜூனியர் லாயராக சேர வரும் சோவிடம் சீனியர் லாயர் ராமராவ் கேப்பார், ‘’ ஏன் தம்பி இந்த லாயர் தொழிலுக்கு வந்தீங்க..?
சோ பதில்..'' பொதுவாக நாம செய்யிற தொழில்ல நாம தப்பு பண்ணா நாம மாட்டிக்கூடாது. எலெக்ட்ரீஷியன் தப்பு பண்ணா ஷாக்கடிச்சி அவன் மாட்டிப்பான். டிரைவர் தப்பு பண்ணா ஆக்சிடெண்ல அவன் சிக்கிடுவான்.. ஆனா லாயர் தொழில்லதான், நாம தப்பு பண்ணா, நாம மாட்டமாட்டோம். கட்சிக்காரன்தான் சாவான். அதான் சார்''
அரசியலை நக்கலடித்தபடியே அவர் பிரித்து மேய்ந்த விதத்தை சொல்ல தனி புத்தகமே தேவைப்படும்.. ஒரு படத்தில், ‘’அண்ணே நீங்க ஒரு அரசியல்வாதி..அந்த ஆள் ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர். அவரை பகைச்சிகிறீங்களே..?’’
சோ... ‘’யோவ் நாட்ல பேப்பர் படிக்கறவன்ல நூத்துல தொன்னூறு பேரு சினிமா மேட்டரை தான் படிப்பான்.. பத்து பேருதான் பாலிடிக்ஸ் படிப்பான்..
அந்த பத்து பேருலயே ரெண்டு பேருக்குத்தான் மேட்டரே புரியும்.. புரிஞ்சவன்லயும் ஒருத்தன்தான் ஞாபகம் வெச்சிருப்பான்..அந்த ஒத்த ஆளுக்காக நான் பயப்படணுமா?’’ என்பார்…
பத்திரிகைகளில் பெரும்பகுதி சினிமாக்காரங்க மேட்டர்தான் என்பதனையும் ஜனங்களும் சினிமா மேட்டரைத்தான் அதிகம் படிப்பார்கள் என்பதையும் அரசியலையெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் அப்படி விளாசியிருப்பார்.
1974-ல் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தில், திமுக அதிமுக என இரு கழகங்களையும் வறுத்தெடுத்திருப்பார்.. திமுகவினரின் பேச்சாற்றலையும் கிண்டலடிப்பார்
''தடை பல வென்று வடை பல தின்று, வருகிறேன் தாயே, வைகை வளவன்..'' என்று அரசியல்வாதி சோ வசனம் பேச, அண்ணி மனோரமா உடனே தனது கணவனாக வரும் இன்னொரு சோ பாத்திரமான கான்ஸ்டபிளிடம் சொல்வார், ''என்னங்க இவன், என்னென்னமோ பேசறான்..'' அதற்கு கான்ஸ்டபிள் சோ சொல்லும் பதில்.. ''பேசறது எதுவுமே புரியலையா?, அப்ப அரசியல்ல பெரிய ஆளா வருவான்..''
அதிமுக ஆரம்பித்து அண்ணாயிசம் என முழங்கிக்கொண்டிருந்த எம்ஜிஆரை, அதே தங்கப்பதக்கத்தில், அப்பாயிசம் என காட்சிகள் வைத்து விமர்சிப்பார்..
நையாண்டி என எடுத்துக்கொண்டால், முதலில் பட்டென மனதுக்குள் எப்படி தோணுகிறதோ அதை அப்படியே சொல்லவேண்டும்..அதில் விருப்பு வெறுப்பை சேர்க்க ஆரம்பித்தால் கண்றாவியாகிவிடும்..தேவைப்பட்டால் நம்மை நாமே கிண்டலடித்துக் கொள்ளவும் தயங்கக்கூடாது.. என்பதெல்லாம் அவரெழுத்துக்கள் அடிக்கடி சொல்லிவந்த பாடம்..
1970 ஆண்டு பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிகையை கொண்டுவந்தபோது, முதன் முதலில் போடப்பட்ட அட்டைப்படத்தில் இரு கழுதைகள் பேசிக்கொள்ளும்..
‘’சோவின் பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே’’ என்று சொல்லும் ஒரு கழுதையிடம் இன்னொரு கழுதை, ‘’அப்படியா இனிமே நமக்கு நல்ல விருந்துதான்’’ என்று சொல்லும். அதாவது பத்திரிகை கீழே வீசப்பட்டு கழுதைகள் தின்னும் அளவுக்கு இருக்கும் என்று அவரையே நக்கலடித்துக்கொண்டார் சோ.
ஆனால் துக்ளக் பத்திரிகை, வாங்கிப்படித்த அத்தனை பேரையும் சோவின் நையாண்டிக்கு அடிமையாக்கிவிட்டது.. அவரின் விமர்சனத்தால் வெந்துபோய் நொந்துபோன அரசியல் தலைவர்கள்கூட, அடுத்த இதழை வாங்கிப்படிப்பதில் அவ்வளவு காட்டினார்கள்..
தலையங்கம் மற்றும் கேள்வி-பதில் ஆகிய இரண்டே பகுதிகளை ஒரு வலுவான அடையாளமாக வைத்து ஒரு வாரப்பத்திரிகையை அவர் வெற்றிகரமாக நடத்தியது இன்றளவும் வியப்பின் உச்சம்தான்..
ஆமாம் துக்ளக்கை வாங்குபவர்கள் முதலில் ஒன்று தலையங்கத்தை படிப்பார்கள்.. இல்லையென்றால் கேள்வி பதில் பக்கத்திற்கு ஓடிப்போய் படித்துவிட்டு அதன் பிறகு தலையங்கத்துக்கு வருவார்கள்.. காரணம்.. சோவின் எழுத்தில் உள்ள ஈர்ப்பு அப்படி..
நாடகம் மற்றும் புத்தகம் ஆகியவற்றை படைப்பதிலும் சளைக்கவில்லை.. கூவம் நதிக்கரையினிலே, வாஷிங்டனில் நல்லதம்பி என பெரிய பட்டியலையே போடலாம்..
30 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் அவருடைய சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர்.., அரசியல் தலைவர்களை, பிரபலங்களை, நாட்டு நடப்புகளை பல்வேறு கோணங்களில் தோய்த்து தொங்கப்போட்டதால் அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை காலை தோறும் தொலைக்காட்சியின் முன் அந்த கட்டிப்போட்டது..
"சென்னைக்கு அருகே செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரத்தையடுத்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் எங்கள் பிளாட்டுகள் உள்ளன" என்று வசனம் வைத்து, ரியல் எஸ்டேட்காரர்களை கிண்டலடித்தார்
இன்று உண்மையில் திண்டிவனமும் விழுப்புரமும் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு சென்னைக்கு அருகேதான் உள்ளன..
அதேபோல, எதிர்கால அரசியல் எப்படி போகும் என்பதை கணிப்பதில் பல முறை சோவுக்கு வெற்றியே கிடைத்திருக்கிறது
1972-ல் திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டவுடன், "அவர் பெரிய அளவில் அரசியல் விஸ்வரூபம் எடுப்பார். திமுகவுக்கு நிரந்தர தலைவலியாக மாறுவார்" என்று கலைஞரை எச்சரித்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். முதலாமவர், முரசொலி மாறன். இரண்டாவது பத்திரிகையாளராய், சோ.
இந்தியாவின் எத்தனையோ பெரிய பெரிய ஆளுமைகளோடு சர்வ சாதாரணமாகப்பழகியவர். எதிர்ப்பது என்றால் அவ்வளவு உறுதியாக இருப்பார்.
1975-ல் இந்திராவின் எமர்ஜென்சியை அவர் எதிர் கொண்ட விதம் பிரமிப்பானவை. அதனால்தான் தேசிய அளவில் உள்ள பல தலைவர்களை அவர் ஈர்த்து கடைசி காலம்வரை உறவை பராமரிக்க முடிந்தது.. ராஜ சபா எம்பி பதவி கிடைக்கவும் அது உதவியது.
குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை ஒரு முறை துக்ளக் ஆண்டு விழாவுக்கு அழைத்திருந்தார், மேடையில் பேசிய சோ, அடுத்தபடியாக மெர்சென்ட் ஆப் டெத். அதாவது மரண வியாபாரி உரையாற்றுவார் என சொல்லி நிறுத்தினார்..
சில விநாடிகள் இடைவெளிவிட்டு தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான மரண வியாபாரி, ஊழலுக்கு எதிரான மரண வியாபாரி… என்று அடுக்கிக்கொண்டே போக, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது..மேடையிலும் அப்படியொரு டைமிங் கொடுத்து ஜொலிப்பதில் அவர் கைதேறியிருந்தார்..
தமிழகத்தில், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை கடுமையாக எதிர்ப்பார். அதே நேரத்தில் அவர்கள் அரசியல் ஆலோசனை கேட்டால் தயங்காமலும் சொல்வார்..
சோவை கடுமையாக விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் எல்லோருமே அவருடன் தனிப்பட்ட ரீதியில் நட்பு வைத்திருக்கவே விரும்பினார்கள். சோவின் செல்வாக்கு, சட்ட அறிவு, பல விஷயங்களில் அவர் பெற்றிருந்த ஞானம் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது..
மேல் மட்டத்தில் அரசியல் காய்களை நகர்த்தும்போது உதறவேண்டியதை உதறாவிட்டால் கரைசேர முடியாமல் மூழ்கி விடுவோம் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்..
அதனால்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு தலைவர்களுக்கு அவரின் அரசியல் ஆலோசனை, கூட்டணி கட்டமைப்பு போன்ற விஷயங்களில் சோவின் தயவு தேவைப்பட்டது..
ஆனால் பாவம் அந்த தலைவர்களின் தொண்டரடிப்பொடிகள்தான், இது புரியாமல் சோவை அடிக்கடி அர்ச்சித்து வந்தார்கள்.
எவ்வளவு உயர்வான மனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அடுத்த விநாடியே எளிய மனிதருடன் பேச நேர்ந்தாலும் அதற்கேப்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளும் அவரின் பாங்கு அலாதியானது..
2003-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகை பிரசுரித்த ரைசிங் இன்டாலரன்ஸ் என்ற கட்டுரைக்காக,, ஹிந்து எடிட்டோரியல் புள்ளிகளை அரசு அப்படி துரத்தி துரத்தி வேட்டையாடியது..
ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தும், ஆட்சியை சோ கடுமையாக விமர்சித்தார்.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் ஜெயலலிதாவுக்கு புத்திபுகட்டும் விதமாக, ரைசிங் இன்டாலரன்ஸ் கட்டுரையை மற்ற பத்திரிகைகள் அனைத்தும் மறுபிரசுரம் செய்யவேண்டும் என்று வாளை சுழற்றினார்..
நேர்மை, மனுதர்மம், ஆன்மீகம், ஊழல் எதிர்ப்பு பத்திரிகை சுதந்திரம் என என்றெல்லாம் எழுத்துக்களில் முழங்கிய ஆளுமைமிக்கவர் சோ..
அப்படிப்பட்டவர் ஊழல் பணத்தில் ஊற்றெடுத்த மதுபான உற்பத்தி நிறுவனங்களோடு நிர்வாக ரீதியாய் தன்னை தொடர்புபடுத்தி கொண்டு கடும் விமர்சனத்தை சந்திக்க நேர்ந்தது காலத்தால் அழிக்க முடியாத அவருடைய கருப்பு பக்கங்கள்..
ஏனெனில் அவருடைய உயரம், அவரை நேசித்தவர்களால், நம்பியவர்களால் அந்த அளவில் வைத்துப்பார்க்கப்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்றளவும் சர்ச்சை. விசாரணைக் கமிஷன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு நம்பகமான சோவும் அதே அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மரணம் அடைந்த மறுநாளைக்கு மறுநாளே மரணமடைந்தார் என்பதும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான ஒன்று.
அப்பேர்பட்ட சோவின் ஐந்தாமண்டு நினைவு தினம் 7/12/2021இன்று.
(சீனியர் ஜர்னலிஸ்ட் ஏழுமலை வெங்கடேசன் பகிர்வுComments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்