2021-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்கள்

 2021-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்கள் யார்-யார்?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட், அஸ்வின், ரிஸ்வான் ஆகியோருக்கு 2021-ம் ஆண்டு சிறப்பானதாக அமைந்தது.





இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் முந்தைய 2021-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-


டெஸ்ட் கிரிக்கெட்;


2021-ம் ஆண்டில் மொத்தம் 44 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வெற்றிகளை குவித்துள்ள அணி இந்தியா. 14 டெஸ்டில் விளையாடி 8-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. அதிக தோல்விகளை தழுவிய அணி இங்கிலாந்து. 15 டெஸ்டில் ஆடி 9-ல் மண்ணை கவ்வியிருக்கிறது. 


கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 659 ரன்கள் குவித்தது ஓர் அணியின் சிறந்த ஸ்கோராகும். மோசமான ஸ்கோரையும் நியூசிலாந்தே பெற்றிருந்தது. மும்பையில் நடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெறும் 62 ரன்னில் சுருண்டது.



இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 15 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 1,708 ரன்கள் சேர்த்து பேட்டிங்கில் ‘நம்பர் ஒன்’ இடத்தை ஆக்கிரமித்தார். அவரை தவிர யாரும் ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை. ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் வசப்படுத்தினார். மொத்தம் 58 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கேப்டன் கருணாரத்னே, வங்காளதேசத்துக்கு எதிராக 244 ரன்கள் திரட்டியது தனிநபர் அதிகபட்சமாகும். சிக்சர் மன்னனாக இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (15 சிக்சர்) வலம் வருகிறார்.


அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதலிடத்தை (54 விக்கெட்) பிடித்துள்ளார். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கபளீகரம் செய்தது சிறந்த பந்து வீச்சாகும்.


ஒரு நாள் கிரிக்கெட்;


கடந்த சீசனில் 71 ஒரு நாள் போட்டிகளே நடந்தன. இதில் அதிகபட்சமாக இலங்கை அணி 15 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும் சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. 6 ஆட்டங்கள் மட்டுமே ஆடிய இந்தியா 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் எதிர்கொண்டது.


ரன் குவிப்பில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்கும் (3 சதம் உள்பட 705 ரன்), பந்து வீச்சில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் (20 விக்கெட்) முதலிடம் பெற்றனர். 34 சதங்கள் எடுக்கப்பட்டன. தனிநபர் அதிகபட்சமாக பாகிஸ்தானின் பஹார் ஜமான் 193 ரன்கள் விளாசியதும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்கோத்ரா ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கியதும் (பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக) குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


20 ஓவர் கிரிக்கெட்;


7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில், எல்லா அணி களும் ஒரு நாள் போட்டியை விட 20 ஓவர் கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் அளித்தன. இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 333 ஆட்டங்கள் அரங்கேறின. மொத்தம் 71 அணிகள் விளையாடின. இதில் ஜெர்மனி, பக்ரைன், இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ், செர்பியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட குட்டி அணிகளும் அடங்கும். பாகிஸ்தான் அணி 29 ஆட்டங்களில் விளையாடி 20-ல் வெற்றிகளை (6-ல் தோல்வி, 3-ல் முடிவில்லை) ருசித்தது. இந்தியாவை பொறுத்தவரை 16 ஆட்டங்களில் களம் இறங்கி 10-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டது.



 தங்கள் அணியின் எந்த ஒரு ஆட்டத்தையும் தவற விடாத பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 29 ஆட்டங்களில் ஒரு சதம், 12 அரைசதம் உள்பட 1,326 ரன்கள் திரட்டி வியப்பூட்டினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையாளராக உருவெடுத்தார். அதிகபட்ச சிக்சரும் (42 சிக்சர்) அவரது வசமே ஒட்டிக் கொண்டது. மொத்தம் 16 சதங்கள் பதிவாகின. 


அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் ஹசரங்கா, தென்ஆப்பிரிக்காவின் ஷம்சி தலா 36 விக்கெட்டுடன் முதலிடம் பிடித்தனர். பனமாவுக்கு எதிராக கனடா ஒரு விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். லெசோதோ அணி, உகாண்டாவுக்கு எதிராக 26 ரன்னில் ஆல்-அவுட் ஆனது மோசமான ஸ்கோராகும். 20 ஓவர் உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி