புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022/கவிஞர் பிருந்தாசாரதி
: புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
*
தொலைவு பெரிது
*
என் தாகமே தணிந்துவிடாதே
என் வேகமே ஓய்ந்துவிடாதே
பசியைத் தீர்ப்பதில் அல்ல
பசியில் எரியட்டும் நம் தீ.
தாகம் தணித்தலில் அல்ல
தாகத்தில் சுடர்விடட்டும் நமது உயிர்.
சிகரங்களில் சுவடு பதிக்கப்
புறப்பட்டது நமது பயணம் ....
நிழல் மரங்களின் கீழே
பாய்விரித்து உறங்க நேரமில்லை.
பிரபஞ்ச ரகசியம் காட்டும்
உன்னதச் சொல் ஒன்று
நம்முடைய தேடல்....
அது
வெற்றுப் புலம்பலுக்கல்ல .
வெயில் மழை
இரவு பகல்
மேடு பள்ளம் எல்லாம்
நம் பயணக் கதையின் பக்கங்கள்தான்
வேகத்தடைகள் அல்ல.
வழியில்
சிறகுகள் கிடைத்தால் சிறப்பு
காயம் தவிர்க்கும் காலணிகள் என்றால்
பரவாயில்லை
நிழற் குடைகள் கூடவே கூடாது.
பயணத்தின் தொலைவோ பெரிது
வழங்கப்பட்ட காலமோ வரையறுக்கப்பட்டது.
அதனால்தான் சொல்கிறேன்
வழியில் யார் வழிமறித்தாலும்
எதிரில் எது கண்சிமிட்டி அழைத்தாலும்
என் தாகமே தணிந்துவிடாதே
என் வேகமே ஓய்ந்துவிடாதே
*
நண்பர்கள் அனைவருக்கும்
என் அன்பான
புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
#Welcome2022
கவிஞர் பிருந்தாசாரதி
Comments