எம்.ஜி.ஆர். சற்று மாறுபட்ட மனிதர்

 



எம்.ஜி.ஆர். சற்று மாறுபட்ட மனிதர். நாம கையிலே வாட்ச் கட்டி அதுக்கு மேலை முழுக்கைச் சட்டை போடுவோம். ஏனென்றால் நாம் Ordinary Man. வாத்தியார் முழுக்கை சட்டை அணிந்து அதுக்கு மேலே வாட்ச் கட்டுவார். ஏனென்றால் அவர் சூப்பர் மேன்.
நாம இடது கையில் வாட்ச் கட்டுவோம். அவர் வலது கையில் கட்டுவார். ஏனென்றால் அவர் ஆயிரத்தில் ஒருவன்.
ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு பிரத்தியேக ஸ்டைல் இருக்கும். நாஞ்சில் மனோகரன் கையில் “மந்திரக்கோல்”. கலைஞருக்கு கறுப்புக் கண்ணாடி. தமிழ்வாணனுக்கு தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும்.
எம்.ஜி.ஆருக்கோ பட்டு வேட்டி, பட்டு முழுக்கைச் சட்டை.
கறுப்புக் கண்ணாடி ஜெர்மன் தயாரிப்பு . கோலாலம்பூர் நண்பர் வழங்கிய FUR தொப்பி. காஷ்மீர் மன்னர் பரிசளித்த ‘பஷ்மினா’ சால்வை. துபாய் அன்பர் தயாரித்து அனுப்பும் காலணி. சுவிட்ஸர்லாந்தில் தயாரிக்கப்படும் கைக்கடியாரம். இதுதான் அவரது டிரேட் மார்க்.
எம்.ஜி.ஆருக்கு விதவிதமான உயர் ரக கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரோலெக்ஸ், ஒமேகா. ரேடோ, பதேக் பிலிப்ஸ், ஃபேவர் லுபா, மோண்ட் ப்ளாங்க் இதுபோன்ற – குறிப்பாக chronograph watches – அவரிடம் ஏராளமாக இருந்தன. ராமாவரம் தோட்டத்தில் அவர் பயன்படுத்திய சில பொருட்களை கண்காட்சியாக வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் அவர் உணர்ச்சிவசப்பட்டு விட்டால், பிரியப்பட்ட யாருக்காவது தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்து, அவர்களை அன்பினால் திக்கு முக்காடச் செய்துவிடுவார்.
இப்படி பரிசுபெறும் அதிர்ஷ்டம் கங்கை அமரனுக்கு மாத்திரமல்ல, எத்தனையோ பேர்களுக்கு வாய்த்திருக்கிறது.
“கலங்கரை விளக்கம்” படத்திற்காக எம்.ஜி.ஆர். முன்னிலையில் காதல் பாட்டு ஒன்றுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. அப்போது அருகில் அமர்ந்திருக்கும் பாடலாசிரியர் வாலிக்கு எம்.ஜி.ஆர். ஒரு பரிட்சை வைக்கிறார்.
“இந்த இசைக்கு 15 நிமிடத்தில் பாடல் எழுதித் தந்துவிட்டால் என் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை பரிசாகத் தந்து விடுகிறேன்” என்று கூறுகிறார். சவாலை ஏற்றுக் கொண்ட வாலி ‘கிடுகிடு’வென்று குறிந்த நேரத்தில் பாடலை எழுதி முடிக்க , வாலியின் கையில் எம்.ஜி.ஆர். தனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கட்டிவிட கவிஞருக்கு அடிக்கிறது ஜாக்பாட் பரிசு.
அப்படி உருவான பாடல்தான் இது:
நான் காற்று வாங்க போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் – அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்த
கன்னி என்ன ஆனாள்..
அதனைத் தொடர்ந்துவரும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
வாலிக்கு இதுபோன்ற சவால்கள் அல்வா சாப்பிடுவது போன்றது.
கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்துவை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட . ‘பிள்ளையோ பிள்ளை’ தொடக்கவிழாவுக்கு எம்.ஜி.ஆரே நேரில் வந்து வாழ்த்தினார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கும் பந்தயக்குதிரை மு.க.முத்து என்று நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், பட வெளியீட்டு சிறப்புக்காட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். தனது கைக்கடிகாரத்தை அவருக்கு பரிசாக அளித்துவிட்டுச் சென்றார்.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! – நீ
மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!
இப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகளை கேள்வியுற்ற எம்.ஜி.ஆர். “ஏன்யா எனக்கு எழுதும்போதெல்லாம் இந்த மாதிரி சொற்கள் உனக்கு வந்து விழவில்லையா..?” என்று கவிஞர் காளியை செல்லமாகக் கடித்துக் கொண்டாராம்.
கல்லக்குடி போராட்டத்திற்குப்பின் திருச்சியில் சிறைவாசத்தை முடித்துவிட்டு சென்னை இரயில் நிலையத்திற்கு கலைஞர் வருகிறார். கூட்ட நெரிசலிலிருந்து அவரை பாதுகாக்க வேண்டி எம்.ஜி.ஆர் அவரை குண்டுகட்டாகத் தூக்கியபோது, எம்.ஜி.ஆருடைய “ரேடோ” வாட்ச் கீழே விழுந்து காணாமல் போனது.
“அடடா.. என்னாலே உங்களது வெளிநாட்டு கைக்கடிகாரம் காணமல் போய்விட்டதே..?” என்று கலைஞர் பதறிப்போனபோது எம்.ஜி.ஆர். பதட்டப்படாமல் சொன்னது “வெளிநாட்டு கடிக்காரம் போனால் என்ன? உள்நாட்டுத் தலைவர் உங்களைக் காப்பாற்றிய சந்தோஷத்திற்கு எத்தனை கடிகாரத்தையும் நான் இழக்கத் தயார்”. எம்.ஜி.ஆரின் அன்பின் வெளிப்பாட்டுக்கு இதுவும் ஒரு TIP OF THE ICEBERG.
அப்துல் கையூம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,