ரஜினிகாந்த் இனியாவது பெண்களுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக பேசவேண்டும்.

 இதுக்கு காரணமே ரஜினிதான்.. பெண்களுக்கு அட்வைஸ் பண்றத நிறுத்துங்க சார் .. ஒரே போடு போட்ட Dr.ஷாலினி.
இதற்கு முக்கிய காரணமே ரஜினிதான், அதில் இவருக்கு அதிக பங்கு உள்ளது. வீட்டில் அவரது மகள்களுக்கு எவ்வளவு சுதந்திரம் தருகிறாரோ அதுபோல மற்ற பெண்களுக்காகவும் அவர் பேச வேண்டும். தனது படங்களில் பெண்களை மட்டம் தட்டி  பேசிவரும் ரஜினிகாந்த் இனியாவது பெண்களுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக பேசவேண்டும்.  


தமிழ் சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதற்கும், பெண்கள் பற்றி தவறான அபிப்ராயம் பொதுப்புத்தியில் இருப்பதற்கும்  ரஜினி திரையில் பேசிய பஞ்ச் டயலாக்குகள் தான் காரணம், இனியாவது அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து அறிவித்துள்ள நிலையில் அவர் ரஜினிக்கு இவ்வாறு அட்வைஸ் செய்துள்ளார்.


ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்கள் பிரிவதற்கான உண்மை காரணங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனாலும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாகரத்துக்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதில் பெரும்பாலான தகவல்கள்  நடிகர் தனுஷின் நடவடிக்கைகளை குறை சொல்வதாகவே உள்ளது. திருமணமான பிறகும் தனுஷ் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரைக் குறித்து ஊடகங்களில் வெளிவருகின்ற கிசுகிசுக்கலால் ஐஸ்வர்யா மனம் உடைந்து போனதே இருவருக்கும் இடையேயான விரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  அதே நேரத்தில் திருமணம் ஆனது முதலே நடிகை ஐஸ்வர்யா தான் சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற மன நிலையிலேயே, இருந்து வந்தார், கணவருடன் இருந்ததைக் காட்டிலும் அவர் தாய் வீட்டில் இருந்ததுதான் அதிகம், தனுசுக்கு உரிய மரியாதையை அவர் கொடுக்கவில்லை, இது தான் ஐஸ்வர்யா மீது  தனுஷுக்கு வெறுப்பு ஏற்பட காரணம் என்றும் அது நாளடைவில் அதிகரித்து விவாகரத்து நிலை வரை வந்துள்ளது என்றும் செய்திகள் அடிபடுகின்றன.


இந்த விவகாரம் குறித்து பலரும் பல வழிகளில் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனநல மருத்துவர், சமூக ஆர்வலர், பெண்ணிய ஆர்வலர் டாக்டர் ஷாலினி நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தில் ஆணாதிக்க மனநிலை ஊடுருவுவதற்கு அவரும் ஒரு காரணம், அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பேசிய வசனங்கள், பஞ்ச் டயலாக்குகள் பெரும்பாலும் பெண்களை மட்டம் தட்டும் வகையிலேயேதான் இருந்து வந்தது என குற்றம் சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- யாருடைய மகனாக இருந்தாலும், யாருடைய மகளாக இருந்தாலும் மனம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான், திருமணம் என்பது மனம் சார்ந்த விஷயம் என்பதால் யாருக்குமே மனம் கசந்து போனால், உறவு ஒத்துவரவில்லை என்றால்  பிரிந்து தனித்தனியாக வாழலாம் என்ற நிலை யாருக்கு வேண்டுமானாலும் உருவாகலாம். குறிப்பிட்ட ஒரு நடிகரின் மகளுக்கும், மருமகனுக்கும் இதுபோன்ற நிலை உருவாக கூடாது என்று எதிர்பார்ப்பதும் ஒருவகையான அடக்குமுறை தான்.


எவர் ஒருவரும் ஒரு பிம்பத்திற்குள்ளாகவே சிக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே ஒவ்வொருவரும் விவாகரத்து செய்வது என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதில் தேவையில்லாமல் மற்றவர்கள் மூக்கை நுழைத்து கருத்து கூற கூடாது. அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ விட்டுவிட வேண்டும் என்பது தான் மிகச்சிறந்த போக்காக இருக்கும். எனவே இந்த விவகாரம் குறித்து யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஐஸ்வர்யாவுக்கோ தனுஷுக்கோ இல்லை. யாரும் அவர்களை நிர்பந்திக்கவும் முடியாது.


அதேபோல் ஒரு தம்பதியர் விவாகரத்து செய்வதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அதை இந்த சமுதாயம் ஏதோ குற்றமாக பார்க்கக்கூடாது, திருமணம் என்பது கணவன்-மனைவிக்கு இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம், அதில் இருவரும் சமமாக பங்களிப்பு செய்ய வேண்டும், அதில் ஒருவர் மட்டும் அதிக பங்களிப்பு செய்து மற்றொருவர் அப்படி செய்யவில்லை என்றால் அந்த துணைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு, அப்போது வெறுப்புடன் இருவரும் சேர்ந்து வாழ்வது மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அந்தத் துணை பாதிப்பை ஏற்படுத்தும்.


மன வெறுப்புடன் இருவரும் இணைந்து வாழ்வதை விட பிரிந்து இருப்பதே உத்தமமானது என்று அவர்கள் முடிவு செய்ய அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பிரிந்து இருப்பது ஆரோக்கியமான ஒன்றுதானே ஒழிய, ஆனால் பிரிந்து இருப்பதை ஏதோ இழுவாக சமூகத்தில் பார்க்க கூடாது. மீண்டும் திருமணம் புனிதமானது அது இது என்று சொல்லி அந்த தம்பதியை மீண்டும் ஒரு சிறைக்குள் தள்ளுவதும் கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையில் நடிகர் ரஜினிகாந்திடம் நான்  ஒன்று கேட்டுக்கொள்கிறேன், அவர் எல்லா படத்திலும் பெண்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார். அடுத்து வரப்போகிற படங்களிலாவது ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் டயலாக் பேச வேண்டும். குறைந்தபட்சம் அந்த படத்தைப் பார்க்கிற ஆண்களுக்காவது அதன்மூலம் சில விஷயங்கள் புரியும். திரும்பத் திரும்ப இவர் தன் படங்களில் பெண்களை மட்டும் மையப்படுத்தி பெண்களை குறிவைத்து அட்வைஸ் செய்கிறார், பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும், சீதையைப் போல இருக்க வேண்டும், பெண்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் மத்தியில் ஒரு ஆதிக்க சிந்தனையை உருவாக்கி வைத்திருக்கிறார்.


இதற்கு முக்கிய காரணமே ரஜினிதான், அதில் இவருக்கு அதிக பங்கு உள்ளது. வீட்டில் அவரது மகள்களுக்கு எவ்வளவு சுதந்திரம் தருகிறாரோ அதுபோல மற்ற பெண்களுக்காகவும் அவர் பேச வேண்டும். தனது படங்களில் பெண்களை மட்டம் தட்டி  பேசிவரும் ரஜினிகாந்த் இனியாவது பெண்களுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக பேசவேண்டும். ரஜினி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பெண்ணியவாதியாக இருக்கிறார் அதை நாங்கள் பாராட்டுகிறோம், ஆனால் திரையில் எடுக்கிற அவதாரத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக, தவறான வசனங்களை தொடர்ந்து அவர் பேசுகிறார். அது பொது புத்தியை பாதித்திருக்கிறது, எங்கோ அவர் படத்தில் பேசிய டயலாக்குகள், பல ஆண்களால் பெண்களிடம் பேசப்படுகிறது. அவர் செய்த தவறை அவரைத் திருத்த வேண்டும், இனியாவது அவர் தன்னுடைய நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆதரவாக பெண்களின் சுதந்திரத்திற்காக அவர் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெண்கள் பற்றி தவறான அபிப்ராயம் பொதுப்புத்தியில் வளர்ந்திருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இன்றைய சூழ்நிலையில் ரஜினி தான் என மேலும் ஷாலினி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,