நடைபாதை சிறுமியின் கல்விக்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி தந்தபோக்குவரத்து காவலர் மகேந்திரன்

 சென்னை போக்குவரத்து காவலர் மகேந்திரன்...

ஒரு நடைபாதை சிறுமியின் கல்விக்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி தந்தவர் 🙏



ஒருவரின் தேவை அறிந்து அவர் கேட்காமலேயே உதவிடும் அனைவருமே கடவுள் தான். இந்த உலகில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக மாணவர்களுக்கு இந்த கோவிட் பரவல் ஒரு கடும் சவாலாக முளைத்துள்ளது. பள்ளிகள் மூடப்படுகின்றன. வாழ்க்கையில் அற்புதமான பள்ளி அத்தியாயத்தை மாணவர்கள்  இழக்கிறார்கள். கொரோனா நச்சுக் கிருமி பரவல் காரணமாக பள்ளிப் படிப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. 


ஒரு சில மாணவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக ஆன்லைன் படிப்புகளுக்கு இடமளிக்கும் இணைய வசதிகளைப் பெறுவதற்கு அதிர்ஷ்டமும் துணை இருப்பதில்லை. அதில் ஒரு மாணவி சென்னையில் நடைபாதையில் வசிக்கும் 12 வயது தீபிகா. இவரது பெற்றோர் ரஞ்சித் மற்றும் சுதா, பழ வியாபாரிகள். அவர்களுக்கு மேலும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.


கல்வியைக் கற்க நினைக்கும் தீபிகாவின் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் அந்தக் கல்வியின் கடவுள் சரஸ்வதி பதிலளித்துள்ளார். ஃப்ளவர் பஜார் போக்குவரத்து அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் எஸ்.மகேந்திரன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வடிவில் உதவி வந்துள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவியான தீபிகாவை கான்ஸ்டபிள் மகேந்திரன் பார்த்தபோது, அந்த சிறுமி வயதுடைய சிறுசுகள் நடைபாதையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் நோட்டுப் புத்தகத்தில் கவனமாக இருந்திருக்கிறார். தீபிகாவுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்த அந்த கல்வி மீது உள்ள தேடல், மகேந்திரனின் கண்களையும் மனதையும் கட்டி ஈர்த்தது. 


கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மகேந்திரன் ரயிலில் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்தார். கணிதப் பாடச் சிக்கல்களைத் தீர்ப்பதில் தீபிகா செலுத்திய அலாதியான கவனம், அந்த இடத்திலிருந்த பல்வேறு கவனச்சிதறல்களுக்கு மத்தியில், அந்த 29 வயது இளைஞனின் கண்ணில் பட, அவர் அந்தச் சிறுமியின் அருகில் அமர்ந்தார். 


சிறுமியுடன் நடந்த ஒரு சிறிய உரையாடல், அந்தப் பிஞ்சு உள்ளத்துக்குள் ஒரு சிற்பம் ஒளிந்து கொண்டு இருப்பதை கண்டறிய போதுமானதாக இருந்தது. தீபிகா ஒரு நடைபாதை சிறுமி. கல்வியில் இவர் கடக்கப்போகும் பாதைகளில் வசந்தம் வீச வேண்டும் என்று நினைத்தார் மகேந்திரன். 


கணிதத்தில் பட்டதாரியான மகேந்திரன், ஒரு சிற்பியாக இருந்து தன்னால் முடிந்தவரை கல்வியை கற்பித்து அந்தச் சிறுமியை சிற்பமாக செதுக்க முடிவு செய்தார். அன்றிலிருந்து அவர் அவ்வழியாகச் செல்லும்போதெல்லாம், தீபிகா தனது பாடப்புத்தகத்துடன் வந்து, அவரிடம் தன் சந்தேகங்களைக் கேட்டுக் தீர்த்துக் கொள்வர். ஃப்ளவர் பஜார் நடைபாதையில் வாகனங்கள் ஒருபுறம் சீறிப்பாய்ந்து கொண்டுருக்க, ஒருபுறம் மகேந்திரன் பயிற்சிகள் அலைபோல் தீபிகாவின் மனதுக்குள் சீறிப்பாய்ந்து. 


"அந்தச் சிறுமியின் ஆர்வம்தான் என்னை அவருக்கு உதவ வைத்தது. அவர் பாடங்களை மிக எளிதாகப் புரிந்துகொள்கிறார். தீபிகா ஒரு நல்ல கல்வியைப் பெறுவார் என்று நான் நம்புகிறேன். அது அவருடைய வாழ்க்கையை மாற்ற  பெரிதும் உதவும்," என்று மகேந்திரன் கூறுகிறார்.


தனக்கு கணிதம் மிகவும் பிடிக்கும் எனவும், மகேந்திரன் அவர்களின் இந்த உதவி கடவுள் தந்த வரம் என்றும்,  தான் நன்றாக படிக்க விரும்புவதாகவும் தீபிகா  முகத்தில் தன்னம்பிக்கை நிரம்ப கூறுகிறார். கணித ஆசிரியையாக வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறும் தீபிகா, உயரத்தில் பறக்க வேண்டும் என்ற கனவுகளைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை அவருக்கு ஒரு தடையாக இருந்தது. ஆனால் மகேந்திரனின் வருகையால் தீபிகாவின் சிறகு விரிந்தது; தடை உடைந்தது. 


வீசுகின்ற வாசனையைப் பொறுத்து தான் மலர்களுக்கு சிறப்பு சேர்கிறது. அது போல் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தான் மனிதர்களின் மதிப்பும் உயர்கிறது. மகேந்திரனின் நன் மதிப்பு எட்டா உயர்த்தில் இருக்கிறது. யாராலும் எதையும் மாற்றி ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கித் தர முடியும் என்பதற்கு இவர் சான்றாக இருக்கிறார். ஒரு நடைபாதை சிறுமியின் கல்விக்கு இவர் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி தந்துள்ளார்.


மகேந்திரனின் இந்தச்  செயலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். நிழல் வாழ்க்கையில் கதாநாயகர்களாக திகழ்பவர்களைப் போற்றி விட்டு, நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்களாக வலம் வருபவர்களை அடையாளப்படுத்த மறந்துவிடுகிறோம். இருளில் இருந்த ஏழை மாணவியின் வாழ்க்கையில் கல்வி ஒளியை பாய்ச்சிய கான்ஸ்டபிள் மகேந்திரன் போன்றவர்களே நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள். மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க இந்த இயற்கையிடம் பிராத்திக்கிறேன்...


சரஸ்வதி வெறும் கல்வி தெய்வம் தான். ஆனால் நடைபாதை சிறுமிக்கும் கல்வி தந்த இவர் பேசும் தெய்வம். மகேந்திரனுக்கும் தீபிகாவுக்கும் இடையே உள்ள அற்புதமான மற்றும் அன்பான பிணைப்பை இந்த யூடியூப் இணைப்பில் காணலாம்


https://youtu.be/ggV9hb2On0U


இவரை வாழ்த்த நெடிய கவிதை தேவையில்லை; 

இந்த ஒரு படம் பேசும் அவரின் பெருமையை.....


அவரின் செயலைப் பார்த்து 

வியந்து போனவர்களில் நானும் ஒருவன் 🙏


ராஜ் குமார் (மலேசியா)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,