நாம் மூவரும் ஒரே இதயத்தில் தொற்றிக்கொண்டிருக்கிறோம்

 


மந்திரிகுமாரியில் நாட்டின் தளபதி வீரமோகனாக வரும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் “வீரர்களே, சிங்கங்கள் உலவும் காட்டில் சிறுநரிகள் திரிவது போல இன்று நம் நாட்டைச் சுற்றி அலைகிறது ஒரு சோதாக்கும்பல். எண்ணிக்கையிலே குறைந்த அந்த இதயமற்றக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது. நிரபராதிகளின் சொத்துக்களை சூறையாடி சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அளளிக்குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி கிளம்புகிற அளவுக்கு அவர்களின் அட்டகாசம்! இனி பொறுமையில்லை. அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விட்டுவைக்கவும் உத்தேசமில்லை. கொதித்துக்கிளம்புங்கள். அவர்கள் சிலர்; நாம் பலர். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள்!...வீரர்களே ஒவ்வொருவரும் பத்துப்பேருடன் கிளம்புங்கள்...அந்த பாவிகளை காடுகளில் தேடுங்கள். மரங்களில் பாருங்கள். குகைகளில் நுழையுங்கள். சந்தேகப்படுபவர்களை கைது செய்யுங்கள். சிக்கினால் காலதாமதம் வேண்டாம்; கை்கால்களை வெட்டிஎறியுங்கள். முதுகெலும்பை நொறுக்குங்கள். அந்த மூர்க்கர்களின் முண்டங்களை பொடி செய்யுங்கள்.... உம் சிங்கத்தமிழர்களே சீறி எழுங்கள்!” என்ற கருணாநிதியின் வசனங்களை நரம்பு புடைக்கப் பேசி கர்ஜித்தபோது எம்.ஜி.ஆரின் பாத்திரம் இன்னும் மிடுக்காக தெரிந்தது. எம்.ஜி.ஆர்- கருணாநிதி இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் திரைப்பட வாய்ப்புகளுக்கு பரிந்துரை செய்தனர். தத்தம் கொள்கைகளைப்பேசி இருவரும் வாதிட்டுக் கொள்வார்கள். வென்றது கருணாநியே. 50 களின் ஆரம்பத்தில் கதருக்கு விடை கொடுத்துவிட்டு கருணாநிதியின் கருத்துக்களை கூர்ந்து கவனிக்கத்துவங்கினார் எம்.ஜி.ஆர்.

மந்திரிகுமாரிக்குப்பின் நாம், மலைக்கள்ளன், மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித்தலைவன் வரை எம்.ஜி.ஆருக்கு புகழ்தந்த வசனங்களை எழுதினார் கருணாநிதி. மருதநாட்டு இளவரசியில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி ஜானகியிடம் பேசும் “மிருக ஜாதியில் புலி மானைக்கொல்கிறது. மனிதஜாதியில் மான் புலியைக்கொல்கிறது” என்ற வசனம் பெரும்கைதட்டலையும் அந்நாளில் பாராட்டையும் பெற்ற வசனம். மலைக்கள்ளனில் கருணாநிதியின் வசனம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்துவந்த பகுத்தறிவையும் பறைசாற்றுவதாக அமைந்ததது. ஒரு காட்சியில் நாயகி பானுமதியை மலைக்கள்ளனாக வரும் எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அதற்கு நன்றிகூறும் நாயகி, “நீ யார்?” என வினவுவார். அதற்கு மலைக்கள்ளன் "கற்புக்கரசியைக்காக்க வந்த கடவுள், துஸ்ட, நிக்ரக, சிஸ்ட பரிபாலனம் செய்யவந்த ஆண்டவன் எடுத்த அவதாரம் என்றெல்லாம் எண்ணாதே!... நான்தான் மலைக்கள்ளன்!” என சொல்லி முடிக்கும்போது தியேட்டரில் கைதட்டல் பறக்கும். அண்ணா என்ற தலைவருடன் கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவருக்கும் நெருக்கம் இருந்ததால் படங்களில் தங்கள் கட்சியின் கொள்கைகளை வசனங்கள் மூலம் புகுத்தி வெற்றிபெற முடிந்தது கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரால்.
காஞ்சித்தலைவனில் காஞ்சியின் புகழைக்கூறும் நாயகனிடம், “காஞ்சிபுரம் குறும்பு” என்பார் நாயகி. “ஆனால் ஒருபோதும் கண்ணியம் குறையாது” என பதிலடி தருவான் நாயகன். படத்தில் அண்ணனை நினைத்து தங்கை கதாபாத்திரம் பேசும் வசனங்கள் முழுக்க அறிஞர் அண்ணாவையே மறைமுகமாக குறிப்பிடும். “அண்ணாவின் போக்கை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. வெற்றியொடு திரும்புங்கள் அண்ணா”... “ மற்றொரு காட்சியில் “அந்த 3 ஈட்டிகளும் ஒரே இடத்தில் தொற்றிக்கொண்டிருப்பதுபோல” என எம்.ஜி.ஆர் வசனம் பேச “நாம் மூவரும் ஒரே இதயத்தில் தொற்றிக்கொண்டிருக்கிறோம்” என எஸ்.எஸ்.ஆர் முடிப்பார். எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், கருணாநிதி போல தீவிர தி.மு.க-க்காரர் என்பது புரிந்தவர்கள் அந்த வசனத்தை ரசித்துக்கைதட்டினர்.
இணையத்தில் இருந்து எடுத்தது.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்