மனிதம், மனித நேயம்.


இலங்கையின் மலையக நகர் நுவர எலிய. 'LITTLE ENGLAND' என்று அறியப்பட்ட, மிக உயரமான மலைகளின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் பசுமையும், அழகும் கொஞ்சி விளையாடும் இடம். நகரின் நடுவே அழகிய ஏரி, குதிரைப் பந்தயத் திடல் இவற்றுடன் சற்றுத் தள்ளி GOLF GROUND. இவை எல்லாமே பிரிட்டிஷாரின் புண்ணியத்தில் இலங்கைக்குக் கிடைத்து, காலத்துக்குக் காலம் அபிவிருத்தியடைந்தவை.


அங்கிருந்துகண்டி நகருக்கு வரும் மலைப்பாதை. கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு கொண்டை ஊசி வளைவுகளுடன் (HAIR PIN BENDS) நெளிந்து வரும். இடையே தேயிலைத் தோட்டங்களும், காய்கறிப் பயிர் தோட்டங்களும் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை.


இந்த வளைவுகளுடனான மலைப்பாதையை நமது வண்டி கடக்கும் போது, அழகான மலர்க் கொத்துகளை கையில் ஏந்திய வண்ணம், நமது வண்டிகளுக்கு முன்னால் புன்முறுவலுடன் கைகளை நீட்டி விற்கக் காத்திருக்கும் இந்தச் சிறுமிகள் நடுத்தர வர்க்கத்தை விட குறைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருமே பாடசாலை மாணவிகள்.


ஒரு இடத்தில் நாம் வாங்கிவிட்டால் சரி, வாங்காவிட்டாலோ, அந்த ஏழெட்டு வளைவுகளையும் தாண்டி நம் வண்டி மலைப்பாதையில் இறங்கும்போது, நமக்கு முன்னால் ஒற்றையடிப் பாதையில் 'கிடுகிடு'வென்று கீழே ஓடிவந்து அடுத்த வளைவின் கீழே நின்று, அதே மாறாத புன்னகையோடு மீண்டும் மலர்க் கொத்துக்களை நீட்டுவது மிகச் சாதாரணமான வழமையானதொரு காட்சி.


எனது சிறிய வயதில் அப்பாவோடு வண்டியில் பயணித்த காலத்திலிருந்து, வாலிப வயதில் நானே வண்டி ஓட்டிய காலத்திலும், இன்று வரையிலும் இது மாறாத, மறையாத காட்சி. 


இளமைக் காலத்திலும் சரி,  திருமணமாகி, மனைவி, குழந்தைகளோடு பயணிக்கும் காலத்திலும் சரி,  வேடிக்கையாக ரசித்த இந்தக் காட்சி என் மனதை நெருடிய தருணங்கள் காலம், வயது இவற்றோடு என் மனித நேயத்தை தொட்டுப் பார்த்ததென்றால் அது மிகையாகாது. அநேகமாக சொன்ன விலையைவிட சற்று அதிகமாகக் கொடுப்பது என் வழக்கம்.


சில வருடங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் பயணம்.  வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறேன். அதே காட்சி. இந்தச் சிறுமி  ஒரு நான்கைந்து வளைவுகளைத் தாண்டிய பின்னரும், சளைக்காமல், களைக்காமல் ஓடி வந்ததும், புன்னகை மாறாமல் முகத்தை வைத்துக் கொண்டிருந்ததும் என் மனதை அசைத்தது.


வண்டியை நிறுத்தி இறங்குகிறேன். நண்பர்கள் மூவரிடமும் எந்த சலனமும் இல்லை. என்னை நன்கறிந்த நண்பர்கள் அல்லவா? சிறுமியை நெருங்குகிறேன். அவளோடு எங்கள் சிங்கள மொழியில் நடந்த உரையாடலைத் தமிழில் தருகிறேன்.


"பாப்பா.........,!"


"(மஹாத்தயா) - உயர்ந்தவர்கள், வயதில் மூத்தவர்களை மரியாதையாக அழைக்கும் வார்த்தை.


"இவ்ளோ தூரம் அசராமே ஓடி வந்துட்டே இருக்கியே, உனக்கு களைப்பா இல்லே?"


சிரித்தபடி சொல்கிறாள் - "இல்லேங்க, எங்கம்மாவுக்கு பாப்பா பொறந்திருக்கா. இந்தப் பூவெல்லாம் எங்க தோட்டத்திலே வளர்ந்தது. எல்லாத்தையும் குடுத்து நெறைய காசு கொண்டாறேன்னு அம்மா கிட்டே சொல்லிட்டு வந்திருக்கேன்."


"உங்கப்பா?"


"அவரு காலைலேயே காய்கறித் தோட்ட (கூலி) வேலைக்குப் போய்ட்டாரு"


"நீ பள்ளிக் கூடம் போகலே?" 


"இன்னிக்கி சனிக்கிழமை. திங்கட்கிழமை போவேன். எனக்குக் கூட கலர் பாக்ஸ், கலர் பென்சில் எல்லாம் வாங்கணும்"


இங்கே ஒரு கணம் என் குழந்தைகள், கூடவே பேரப் பிள்ளைகள் ஞாபகம் வந்து விட, மனம் நெகிழ வார்த்தைகள் வராமல் வாயடைத்து நிற்கிறேன். சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்டு,


"இந்த பூக்களுக்கு எவ்ளோ காசு வேணும் பாப்பா?"


"தெரியலயே, எவ்வளவாச்சும் தாங்க!" 


விழிகளை நிறைத்த நீர் அணையை உடைத்து பாயத் தயாராகி நிற்கிறது. ஒரு கணிசமான தொகையை எடுத்து கொடுக்கிறேன்.  "போதுமா பாப்பா?"


ஒன்றும் புரியாமல் மறுபடி என்னைப் பார்த்து சிரிக்கிறாள். உடைந்து போகிறேன். என் தோளில் ஒரு கை விழுகிறது. திரும்புகிறேன். என்னுடன் வந்த நண்பர்கள்.


"டேய், என்னடா நீ?" - பேச்சு வரவில்லை எனக்கு. என்னோடு அவர்கள் மூவரும் கணிசமான ஒரு தொகையை அவளுக்குக் கொடுத்து விட்டு, அவள் கையிலிருந்த நான்கு மலர்க் கொத்துக்களையும் வாங்கிவிடுகிறோம்.


ஒன்றும் புரியாதவளாய் - "எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவா. நானும் கலர் பென்சில் எல்லாம் வாங்கிடுவேன்" நன்றி சொல்லக் கூடத் தெரியாத அந்தச் சிறுமியிடமிருந்து கனத்த இதயத்தோடு விடை பெறுகிறேன்.


ஒரு ஐம்பது கிலோ மீட்டர் தாண்டும் வரை வண்டியை  ஓட்டிய நானாே மற்ற யாருமோ எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. என்னை நன்கறிந்த நண்பர்கள் அவர்கள் என முன்பே சொன்னேன் அல்லவா?


இறைவா, வாழும் காலம்வரை - இல்லை என்றோ, பசி என்றோ என் முன்னால் யார் வந்தாலும் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல், என்னால் முடிந்ததைக் கொடுக்கும் பாக்கியம் ஒன்றே போதும்.


இந்த முகத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் அந்த எண்ணம் வருகிறதல்லவா? அதுதான் மனிதம், மனித நேயம். 

🙏🙏🙏🙏🙏 Loganadan Ps  - ஸ்ரீ லங்கா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,