மின்னலே'ல பாடல்கள் எழுத எனக்கு வாய்ப்பு
'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தொடங்கி, சுஹாசினி அவர்கள் அப்போ தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துட்டு இருந்தாங்க. அந்தக் காலகட்டத்துல அவருடைய தொடர்களுக்கான தலைப்புப் பாடல் நான்தான் எழுதிட்டு இருந்தேன். அதற்காக அடிக்கடி அவர்கள் அலுவலகம் போய்வருவேன். அந்த சமயம், மணிரத்னம் மாதவன்ங்கற புதுமுகத்தை வைத்து 'அலைபாயுதே' எடுத்துகிட்டிருந்தார்.
ஒருமுறை 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, `டாக்டர் முரளி மனோகர் தயாரிப்புல, புதுமுக இயக்குநர் கெளதம்னு ஒருத்தரோட இயக்கத்துல, மாதவன் நடிக்க இருக்கார். தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு நீங்க போய்ப் பாருங்க'ன்னு சொன்னாங்க. 1997-ல இருந்தே நான் பாடல்கள் எழுதிட்டு இருந்தாலும், திரைத்துறையில அந்த சமயத்துல போராடிக்கிட்டுதான் இருந்தேன். நான் 20 பாடல்களுக்கும் மேல எழுதி இருந்தாலும் 12 பாடல்கள்தான் வெளிவந்திருக்கும். டாக்டர் முரளி மனோகரின் அலுவலகத்துக்குப் போய், அவர் சொல்லி அங்கேயே கௌதமை சந்திச்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். ஒரே ஊர்க்காரங்க வெளிநாட்டுல சந்திச்சிகிட்டா எப்படி ஒரு மகிழ்ச்சி வருமோ அந்த மாதிரி நாங்க ரெண்டு பேரும் பொறியாளர்கள் அப்படிங்கறதால எங்களுக்குள்ள ஒரு புன்னகை அங்கயே ஆரம்பமாகிடுச்சு. அவர் படிச்ச படிப்பு தொடர்பா எங்கயும் வேலை செய்யலை. ஆனா, நான் ஏழு ஆண்டு ஒரு பெரிய தொழிற்சாலைல வேலை பார்த்துட்டுத்தான் வந்தேன். 'I have an Engineer inside me Gautam'ன்னு சொல்வேன். `மின்னலே'ல பாடல்கள் எழுத எனக்கு வாய்ப்புக் கொடுக்க திடீர்னுதான் கௌதமுக்கு சூழல் ஏற்பட்டது. ஏன்னா வாலி அவர்கள்தான் எல்லாப் பாடல்களையும் எழுதறதா இருந்தது. பிறகு நான் மூன்று பாடல்கள், வாலி மூன்று பாடல்கள்னு மாறிச்சு.
Comments