பேனா மன்னன் என்றழைக்கப்பட்ட டி. எஸ். சொக்கலிங்கம்

 பேனா மன்னன் என்றழைக்கப்பட்ட டி. எஸ். சொக்கலிங்கம் காலமான தினமின்று





சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார்.
காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த "தமிழ்நாடு" இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்.
'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சொக்கலிங்கம், தினமணி ஆசிரியராக இருந்தபோது, ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 1943 இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். பின்னர் 1944 இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.
புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.
சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும் கூட. லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான போரும் அமைதியும் என்ற நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,