கவிதையாகவே வாழும் அய்யப்பமாதவன்

 கவிதையாகவே வாழ்கிறார் கவிஞர் அய்யப்பமாதவன்


கவிதை தன்னைப்பற்றி சொல்வைதை கேளுங்க




என் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.


குறிப்பாய் என் வீட்டில் படித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் இலக்கியம் கற்கவில்லை. இலக்கியம் பேசவில்லை. என் ஊரில் கம்பன் கழகமிருந்தது. அதில் இன்னொருவர் எழுதிக்கொடுத்து ராமாயணம் பற்றிப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு என் ஊர் நூலகத்தில் வார சஞ்சிகளைப் படித்திருக்கிறேன்.


கல்கிப் பத்திரிகையில் தராசு என்ற கேள்வி பதில் பகுதியில் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். அதில் சிறந்த கேள்விக்கான பரிசு பத்துரூபாய் பெற்றிருக்கிறேன். பிறகு நண்பன் செழியன் மூலம் கவிஞர் மீராவின் அறிமுகம் கிடைத்தது.


செழியனின் ஊரான சிவகங்கைக்கு அவ்வப்போது அவனைப் பார்க்கப் போவேன். அப்போது அங்கிருந்த மீராவின் அன்னம் பதிப்பகத்திற்குப் போகத் தொடங்கி நிறைய நல் இலக்கிய நூல்கள் வாசிக்கத் தொடங்கினேன்.


அப்போதுதான் ஹைகூ கவிதை நூல் ஒன்றை மீரா அவர்கள் மொழி பெயர்த்து தமிழில் அழகாய் வெளியிட்டிருந்தார். அந்த மூன்று வரிக் கவிதைகளைப் படிக்கத் தொடங்கியபோதுதான் ஏன் நானும் இதுபோன்று மூன்று வரியில் கவிதைகள் எழுதக் கூடாதென்று எண்ணம் தோன்றியது. அப்படித்தான் என் முதல் கவிதையை எழுதத் தொடங்கினேன். கவிதை எழுதத் தொடங்கியபோது தொழிற்நுட்பக் கல்வியை முடித்திருந்தேன்.


நான் எழுதிய முதல் மூன்றுவரிக் கவிதை


கண்களுக்குத் தூண்டிலிட்டேன்

மாட்டிக்கொண்டது 

இதயம்.


இதை உடனே தாய்ப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். இந்தக் கவிதை உடனே பிரசுரமானது. கவிதை பிரசுரமான பத்திரிகையும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையை நண்பர்களிடம் காட்டிக் காட்டி பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்படித்தான் என் கவிதைப் பயணம் தொடங்கியது. பிறகு பஞ்சமில்லாமல் மூன்று வரிகளை நிறைய எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து தாய்ப்பத்திரிகையிலும் கவிதைகள் வரத் தொடங்கின.


பிறகு குறிப்பிட்ட அளவுக்கு கவிதைகள் சேர்ந்ததும் முதல் கவிதை போடும் ஆர்வம் பிறந்தது. அப்பா கொடுத்த தங்க மோதிரத்தையும் கைகடிகாரத்தையும் அடமானம் வைத்து ரூபாய் 900/ மீரா அவர்களிடம் கொடுத்து என் முதல் கவிதை நூலை வெளியிட்டேன்.


முழுக்க ஹைகூ கவிதைகள். அந்த நூலிற்கு என் ஊர் புலவர்களைக் கூட்டி வந்து சிவகங்கையில் அறிமுக விழாவெல்லா நடத்தினேன். ஒரு வழியாய் முதல் நூல் வெளியானதும் அடுத்தடுத்து ஹைகூ தவிர சாதாரண கவிதைகளும் எழுத தொடங்கினேன். பிறகு இரண்டாவது நூல் வெளியிட்டேன். ஊரிலிருந்து நகரத்திற்கு வந்ததும் இன்னும் வெவ்வேறு விதமான கவிதைகளை எழுதிப் பார்த்தேன். கவிதாசரண் போன்ற இலக்கிய பத்திரிகையில் என் கவிதை பிரசுரமானது. இப்படியே எழுதி எழுதி நவீன கவிதைகள் பக்கம் என் பார்வை திரும்பியது.


அப்போதுதான் நானென்பது வேறொருவன் என்ற என் மூன்றாம் கவிதை நூலை அன்னம் வெளியிட்டது. அந்த நூல் கவிதை உலகினிடையே பரவலான கவனம் பெற்றது. ஒரு பக்கம் வாழ்க்கைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதும் நான் கவிதைகள் எழுதுவதை விட்டுவிடவில்லை. கவிதைகளுக்கிடையில் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.


கவிதைகள் எழுதி கவிஞன் என்ற பெயர் மட்டுமே கிடைத்தது. ஆனால் அதுவே போதுமானது. ஆனால் குடும்பத்திற்கு அது போதவில்லை. கவிதைகள் வைத்து பணம் பண்ண முடியாதென்பது மிக துரதிருஷ்டவசமானது. ஆயினும் என் வாழ்க்கை கவிஞனாய் முடிந்துவிடுமென்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.


இதுவரை பதினைந்து கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதை நூலொன்றும் வந்திருக்கிறது. என் கவிதைகளை குறும்படமாகவும் எடுத்திருக்கிறேன். இன்னும் கவிதைகள் என்னிடம் இருக்கின்றன எழுதுவதற்கு எனச் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.


நூல்கள்


1. தீயின் பிணம்

2. மழைக்குப் பிறகும் மழை

3. நானென்பது வேறொருவன்

4. நீர்வெளி

5. பிறகொருநாள் கோடை

6. எஸ்.புல்லட்

7. சொல்லில் விழுந்த கணம்

8. நிசி அகவல்

9. ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

10. குரல்வளையில் இறங்கும் ஆறு

11. குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்

12. லிங்கு - அய்க்கூ ( லிங்குசாமி கவிதைகள் குறித்த திறனாய்வு)

13. உரையாடலில் பெரும் மழை

14. தனிமைப்படுத்துதல்

15. எனக்குப் பிடித்த கவிதைகள்

16. எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப்பறவை

17. யாமினி


18.பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள் ( சிறுகதை நூல் )

19.புத்தனின் விரல் பற்றிய நகரம் ( தேர்ந்தெடுத்த கவிதை நூல் )


எடுத்த குறும்படங்கள்


1. இன்று - காட்சியியல் கவிதை

2. சாலிட்டரி

3. சிகப்பு சுடி வேணும்ப்பா

4. பனிவீடு

5. ரோசம்மா.

//---அய்யப்பமாதவன்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி