தனிமனுஷி திலகபாமாநடத்திய கிராமிய விழா

 

தனிமனுஷி நடத்திய கிராமிய விழா-ஒரு சாதனைதான்

*****************************************************
எனது 20 ஆண்டு கால குடும்ப தோழி எழுத்தாளர் திலகபாமா தமது சொந்த பொருட்செலவில் ஜனவரி 5,6,7,8,9 என 5 நாட்களாக சிவகாசியில் கிராமிய விழாவை நடத்த திட்டமிட்டார். கடைசி இரண்டு நாள் நான் கலந்துக்கொள்வதாக ஏற்பாடு. இயக்குனர் தங்கர் பச்சான், எழுத்தாளர் சோ .தர்மர் முதல் மூன்று நாள் கலந்துக்கொள்ள ஏற்பாடு.

கரகாட்டம் ,சிலம்பாட்டம், தப்பாட்டம், உரி அடித்தல், குலதெய்வ வழிபாடு ,தாலாட்டு பாட்டு போட்டி ,கும்மி போட்டி ,பொங்கல் வைக்கும் போட்டி , பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி ,என நிறைய ஏற்பாடு .அதில் சுற்றியிருக்கும் கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏற்பாடு என தமிழ் இனத்தின் கலாச்சார பண்பாட்டு மீட்டெடுப்பு மற்றும் வேரை கண்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் சிறப்பான வேலை.
கொரோனா பரவும் காலம் என்பதால் காவல் துறை ஜனவரி 5,6,7 என 3 நாட்களாக திடீரென சுருக்க சொல்லி விட்டது. எனவே ரயிலில் வருவதாக இருந்த என்னிடம், சூர்யா நீ உடனே கிள்ம்பி வா .நீ என் கூட இருந்தா பக்கபலமா இருக்கும் என்று மதுரைக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பி மதுரையிலிருந்து காரில் சிவகாசி வர ஏற்பாடும் செய்தார் திலகபாமா. சிவகாசியில் எனக்கும் சோ.தர்மருக்கு பேனர் வைத்து இருந்தார். எப்போதும் என்னை கொண்டாடும் தோழி அவர். ஓட்டலிருந்து சோ.தர்மரும் நானும் காரில் கிளம்பி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு சென்று இறங்கியதும் அப்படி ஒரு வரவேற்பு மேளதாளம் முழங்க அழைத்து சென்றார். கல்லுரி மாணவர்களிடம் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் என் நண்பன் அமிர்தம் சூர்யா என்று அறிமுகம் செய்து வைத்தார்
மூன்று நாள் உற்சாகம். ஆனந்தம். முதல் முறையாக அம்மியில் அரைத்து மண்பாண்டத்தில் விறகு அடுப்பில் 26 குழு மாணவர்கள் (ஆண்களும் பெண்களும்)சமைத்தனர் கருவாட்டு குழம்பு, நாட்டு கோழி வறுவல், மீன் வறுவல், மீன் குழம்பு , கம்பு களி ,தினை அரிசி சோறு, என கண் எரிச்சலோடு புகை நடுவே அத்தனை பிள்ளைகளும் சமைத்தனர். நடுவராக மூன்று பேராசிரியர்கள் . நான் ஒவ்வொரு அடுப்பாக போய் அவர்களிடம் பேசி காரம் புளிப்பு உப்பு பார்த்து ,பெரிய வெங்காயம் போடாதே சின்ன வெங்காயத்தை போடு.இன்னும் வதக்கு ,தக்காளி வதக்கும் போது உப்பு போட்டு வதக்கு சீக்கிரம் வதங்கும் , நல்லஎண்ணெய் யூஸ் பண்ணு. அம்மியை எப்படி இழுத்து அரைக்கணும்னு சொல்லி காட்டி எல்லா இடத்திலும் டேஸ்ட் பாக்குறேன்னு ஒரு பிடி சாப்பிட்டு அது ஒரு மகா ஆனந்தம்.
26 விதமான பொங்கல் வைக்கும் போட்டி , இளவட்ட கல் தூக்கும் போட்டி பெண்கள் மட்டும் கலந்துக்கொண்ட உரி அடிக்கும்போட்டி என பெண்களின் ஆரவாரம் ஆனந்த கூச்சல் செம. பறையாட்டத்தில் கல்லூரி பெண்களும் உற்சாகமா கலந்து ஆடினர் .ஒரு கட்டத்தில் நானும் ஆடினேன்
, நடு நடுவே ஒவ்வொரு போட்டி பற்றியும் இலக்கியத்தில் என்னவாக இது இருந்தது எந்த காலத்தில் இதை தமிழன் கொண்டாடினான் என்றெல்லாம் ஏற்கனவே எடுத்து மனப்பாடம் செய்த குறிப்புகளை மைக் பிடித்து பேசி கைத்தட்டல் வாங்கி மாணவிகள் என்னோடு செல்பி எடுக்கும் அளவு ஒன்றி போனேன்.மூன்று நாட்கள் வந்திருந்த மக்கள் தொலைக்காட்சி எல்லாவற்றையும் பதிவு செய்தனர் என்னையும் பேட்டி எடுத்தனர்.
எல்லாப்போட்டிக்கும் திலகபாமா முதல் மூன்று பரிசு மட்டுமன்றி கலந்துக்கொண்ட எல்லா கல்லூரி மாணவர்களுக்கு பரிசு அளித்தார். எல்லோரும் மதிய உணவு மூன்று நாளும் இலவசமாக தயார் செய்து மாணவர்களுக்கு அளிக்க ஒரு சமையல் குழுவே வேலைசெய்தது.
தன்னார்வ தொண்டர்கள் 30 பேர் களத்தில் இருந்தனர். சோ.தர்மரை சுற்றி கல்லூரி மாணவர்கள் இலக்கியம் பேசிக்கொண்டு அது தனி ஆவர்த்தனம் நடந்தபடி இருந்தது.
கூடவே கலகலப்புக்கு கட்டக்கால் கலைஞன், சவ்வு மிட்டாய் தாத்தா, சுற்றி சுற்றி வந்தனர். கரும்பு ஜூஸ் ,பணியார கடை, பானக கடை என சில கடைகளும் போட்டிருந்தனர். கையில் மைக்குடன் ஒருநாளில் பத்து மணி நேரமும் பம்பரமாய் சுற்றிக்கொண்டு ஏற்பாடுகளை கவனித்தபடி மாணவர்களுடன் அவரும் ஆடி பாடி விழாவை உற்சாக வைத்திருந்தார்.
மூன்று நாளும் எழுத்தாளர் சோ.தர்மர் எங்களுடனேயே இருந்தார். வீடியோக்காரகளும் மக்கள் தொலைக்காட்சி ஊடகம் கூடவே போட்டோ கிராபர் சூர்யா நடுநடுவே கருமாண்டி ஜங்ஷனுக்காக நானும் சூட் பண்ணிக்கொண்டே இருந்தோம். விஸ்வனம் குழுவினர் நிறைய ஒத்துழைப்பு தந்தனர் .
நண்பரும் பாமக மாவட்ட செயலாளர் டேனியல் , சூர்யா அண்ணா இதை கொஞ்சம் மைக்கில் அறிவிங்க.. இதை பத்தி சொல்லுங்க ..என்றபடி என் கூடவே இருந்தார் . கூட்டத்தில் எந்த அத்துமீறலும் நடக்காதவாறு பார்த்துக்கொண்டார்.திலகபாமாவின் இளைய மகனும் மருமகளும் கூட போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டது பார்க்க ஆனந்தமாக இருந்தது.
ராஜபாளையத்திலிருந்து விழாவை பார்க்கவும் என்னை சந்திக்கவும் வந்திருந்தார் டீச்சரும் சிறார் இலக்கிய எழுத்தாளருமான லதா ராஜா.எப்போதும் போல் கூடவே தம்பி முருகேஷ் உடன் பிரபா முருகேஷ் வந்துவிட்டனர்.
இதற்கு முன் ஆண்டு தோறும் திலகபாமா சிவகாசியில் கல்லூரியில் மூன்று நாள் இலக்கிய விழா நடத்துவார் 30 எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலந்துகொள்வோம் எல்லாமே அவர் சொந்த பணம் தான் .இப்போது கிராமிய விழாவாக ஒரு இனத்துக்கான கலாச்சார பண்பாட்டு மீட்பு மற்றும் வரும் சந்ததிக்கு வேரை அறிமுகப்படுத்தும் விழாவாக மாற்றி செலவு செய்துள்ளார்.
திலகபாமாவுடன் எப்போதும் நிழலாக இருக்கும் தோழி முனைவர் ராஜேஸ்வரி ஒத்துழைப்பை என்ன சொல்ல ..இந்த மூன்று நாளும் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்விலும் ஆத்மார்த்த தோழி என்பதை நிருபித்தபடியிருந்தார்.
திலகபாமாவின் கிராமிய கலைவிழா போல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு மாவட்டத்தில் இப்படி நடத்தி அதில் மாணவர்களை கலந்துக்கொள்ள செய்யவேண்டும். இதுதான் அசலான நம் பழக்க வழக்கத்தை , கலாச்சாரத்தை பண்பாட்டை விளையாட்டை கலையை மீட்டெடுக்கும். முயற்சி.----- அமிர்தம் சூர்யா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,