எனது திருமணத்திற்கு காமராஜர் வரவேண்டும் என்று எனது தந்தை கருணாநிதி ஆசைப்பட்டார்
“1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ஆம் தேதி எனது திருமணம் நடந்தது.
எனது திருமணத்திற்கு காமராஜர் வரவேண்டும் என்று எனது தந்தை கருணாநிதி ஆசைப்பட்டார். அப்போது காமராஜர் உடல் நலம் சரியில்லாமல் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார்.
திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு எனது தந்தை காமராஜர் வீட்டுக்கு நேரில் சென்று கொடுத்தார். “உங்களுக்கு உடல் நலம் சரியில்லை. திருமணம் முடிந்ததும் ஒரு நாள் மணமக்களை அழைத்து வருகிறேன். நீங்கள் வாழ்த்த வேண்டும்’’ என்று என் தந்தை கருணாநிதி கூறியுள்ளார்.
அதற்கு காமராஜர் “நான் உன் பையனை வாழ்த்த நேரில் வரவேண்டும். இப்போது தான் அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளான். நேரில் வந்து வாழ்த்த வேண்டும். என்னால் படிக்கட்டு ஏற முடியாது… அதற்கு மாற்றாக ஏதாவது ஏற்பாடு செய்தால் வருகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார் காமராஜர்.
காமராஜர் வருவதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமண மண்டப மேடைக்கே கார் வரும்படி ஏற்பாடு செய்தார் என் தந்தை. கார் வருவதற்காக திருமண மண்டபமே மாற்றப்பட்டது.
இல்லை…இல்லை…புதிய மண்டபமே உருவாக்கபட்டது. மேடைக்கு கார் வரும் படியாக ஸ்டிராங்காக மேடை அமைக்கப்பட்டது.
திருமணத்துக்கு வந்த காமராஜர் – காரில் நேராக மேடைக்கு வந்து- என் இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என்னை வாழ்த்தினார்.
1967 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் விருதுநகரில் காமராஜர் போட்டியிட்டார். காமராஜருக்கு எதிராக தி.மு.க.சார்பில் மாணவர் தலைவர் சீனிவாசனை பெயரளவுக்கு நிறுத்தினோம்.
அப்போது இருந்த சூழலில் காமராஜரால் வெற்றி பெற முடியவில்லை. நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணா வீட்டு முன்பு பட்டாசு வெடித்து தி.மு.க.வினர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அண்ணாவுக்கு மகிழ்ச்சி இல்லை. காமராஜர் தோற்றிருக்கக் கூடாது என்று ஆதங்கப்பட்டார். அவர் சட்டசபைக்கு வந்து எனக்கு ஆலோசனை சொல்லி இருக்க வேண்டும் என்று அண்ணா கருதினார்.
அப்போது காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசன், அண்ணா வீட்டுக்கு மாலை போட வருகிறார்.
ஆனால் அந்த மாலையை வாங்க அண்ணா மறுத்து விட்டார்.
“உன்னைப் பாராட்டுகிறேன். ஆனால் வாழ்த்த மாட்டேன்’’ என்று சீனிவாசனிடம் கூறி மாலையை வாங்காமல் திருப்பி விட்டார். அந்த அளவுக்கு காமராஜர் மீது பற்று வைத்திருந்தார் அண்ணா.’’
ஸ்டாலின்
நன்றி: தாய்
Comments