வந்தார்கள் வென்றார்கள்

 வந்தார்கள் வென்றார்கள்


திட்டம் போட்டு, நிறைய குறிப்புகளெல்லாம் தயார் பண்ணிக் கொண்டு, நான் இந்த வரலாற்றை எழுத ஆரம்பிக்கவில்லை. எல்லாமே, எழுத ஆரம்பித்த பிறகுதான் நடந்தது!
தனிப்பட்ட முறையில் படித்து ரசிக்கலாம் என்று நினைத்து, மொகலாய மன்னர்களைப் பற்றி இரு புத்தகங்கள் எதேச்சையாக வாங்கினேன். டைம் புக்ஸ் இன்டர்நேஷனல் வெளியீடான Bamber Gascoigne எழுதிய ‘The Great Moghuls’ மற்றும் ‘Babur Nama’… இந்த இரு புத்தகங்களைப் படித்த பிறகு, ‘எவ்வளவு கலர்ஃபுல்லான மன்னர்கள்!’ என்ற வியப்பும் பிரமிப்பும் ஏற்பட்டது. அப்போதும்கூட வரலாற்றுத் தொடர் எழுதலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமான ஐடியாவெல்லாம் கிடையாது!
ஒரு நாள், மாலை நேரம்… துணை ஆசிரியர் ராவ் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாபர் பற்றி படித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். துணை ஆசிரியர் ‘பிஸினஸ் லைக்’கான டைப். ‘இவ்வளவு சுவையான தகவல்களை வைத்துக்கொண்டு, அதை ஒரு தொடராக எழுதாமல் இருக்கக்கூடாது!’ என்றார். விடாப்பிடியாக… கூடவே ஆசிரியரிடம் கூறிவிட்டு, ஜூனியர் விகடனில் அதுபற்றிய ஒரு அறிவிப்பும் உரிமையோடு வெளியிட்டுவிட்டார்.
‘சரிதான்… தைமூர் டெல்லியில் நிகழ்த்திய அராஜகம் பற்றி ஒரு வாரம் எழுதிவிட்டு, பிறகு பாபரில் ஆரம்பித்து ஔரங்கசீப் வரை ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ மாதிரி பதினைந்து வாரங்கள் எழுதிச் சமாளித்துவிடலாம்!’ என்று முடிவு கட்டினேன். முதல் அத்தியாயம் எழுதி முடித்தேன். அதை படித்துவிட்டு ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் கூப்பிட்டனுப்பினார்.
‘ஆரம்பத்திலேயே ஏகமாகச் சூடுபிடித்துவிட்டது. பிரமாதமாக வரவேற்பு பெறும் போலிருக்கிறது. ஆகவே, தொடரை விஸ்தாரமாகவே கொண்டு போங்கள்…’ என்றார்.
‘பாபரிலிருந்து, ஔரங்கசீப் வரை ஆறு சக்ரவர்த்திகளைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். எத்தனை வாரம்தான் சார் எழுதுவது..?’ என்றேன்.
பிறகு எங்கள் பேச்சு கோரி முகமது, கஜினி… குத்புதீன் அமைத்த அடிமைகள் சாம்ராஜ்யம், கில்ஜி மற்றும் துக்ளக் டைனாஸ்டி பற்றித் தொடர்ந்தது. அதையே பிடித்துக்கொண்டு விட்டார் ஆசிரியர்.
‘இதெல்லாம் எப்படி எழுதாமல் விடுவது..? புராண காலத்திலிருந்து டெல்லி எப்படி இருந்தது, அங்கே என்னவெல்லாம் நடந்தது என்றுகூடத் தகவல்கள் திரட்டி எழுதலாமே… வாசகர்கள் நன்றாகவே ரசிப்பார்கள். இது உங்களால் முடியும்!’ என்றார். கல்லூரியில் ஆசிரியருக்கு இரண்டாவது முக்கிய பாடம் – சரித்திரம். அவரை டபாய்க்க முடியாது!
கூடவே, ‘தொடருக்குத் தேவையான எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடுவது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தகவலுக்காக லைப்ரரி, அது இது என்று அலைந்து கொண்டிருக்கக்கூடாது…’ என்று முடிவாகியது. மேலும் சில முக்கிய புத்தகங்களையும் பல ஆதாரங்களையும் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எனக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் கொண்டுவந்து கொடுத்து உதவினார், சென்னை பல்கலைக்கழகத்தில் சரித்திரம் மேற்படிப்பு படிக்கும் குமாரி லக்ஷ்மி பத்மநாபன்.
ஒரு பக்கம் எல்லாப் புத்தகங்களும் ஒரு சூறாவளியாக – மொகலாய காலத்துக்கு என்னை இழுத்துக் கொண்டுவிட, ஆசிரியர் சொன்னதும் நடந்தது. முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டே ஏராளமான வாசகர்கள் பாராட்டு கடிதங்கள் எழுதியனுப்ப, ஒருவழியாகச் சற்று மயங்கிப் போனேன்.
ஆக மொத்தம் – நான் அகலக்கால் வைத்துவிடக் காரணம்… இதெல்லாம்தான்!
இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் பற்றியும், மொகலாய அரசர்கள் ஆண்ட காலம் பற்றியும் நூற்றுக்கணக்கில் நுணுக்கமான புத்தகங்கள் நம்மிடையே இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இவற்றில் முக்கியமான எல்லாப் புத்தகங்களையும் ‘வந்தார்கள்… வென்றார்கள்!’ ஆரம்பித்த சூட்டோடு படித்துவிட நேர்ந்ததால், வரலாற்றுப் பின்னணிகளை ஓரளவு தெளிவாகப் புரிந்துகொண்டு நடுநிலைமையோடு, பொறுப்பு உணர்ச்சியோடு இந்தப் புத்தகத்தை என்னால் எழுத முடிந்தது!
இந்தத் தொடரில் ஆங்காங்கே நிகழும் உரையாடல்களை மட்டும் – இப்படித்தான் பேசியிருக்க முடியும் என்ற யூகத்தின் அடிப்படையில் – கற்பனை செய்து எழுதினேன். மற்றபடி, ஒவ்வொரு வரியும் வரலாற்றில் உண்மையில் நடந்தவையாகும்!
ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் நிறைய வாசகர்கள், ‘அதை ஏன் விட்டுவிட்டீர்கள்..?’ என்று குறிப்பிட்டுக் கடிதங்கள் எழுதினார்கள். அதுதான் அனார்கலி – சலீம் காதல் விவகாரம்! அப்படி ஒரு காதல் நடந்ததற்கான ஆதாரங்கள் எந்த வரலாற்றுப் புத்தகத்திலும் இல்லை என்பதே உண்மை. இதுபற்றி சரித்திரப் பேராசிரியர்களிடமும் கேட்டதில், அதற்கு ‘ஆதாரம் கிடையாது!’ என்றே சொன்னார்கள். அனார்கலி என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று, லாகூரில் இருப்பது உண்மை. அதோடு சரி… மற்றபடி, எந்தப் புத்தகத்திலும் விவரம் இல்லை!
ஒவ்வொரு வாரமும் ஜூனியர் விகடனுக்கான மற்ற வேலைகளை முடித்துவிட்டு, அந்த வாரத்துக்கான அத்தியாயத்தை எழுத ஆரம்பிக்கும்போது… நிச்சயம் நடுநிசி ஆகிவிடும்! அப்போதும் என்னோடு கூடவே விழித்திருந்து, பத்திரிகையில் அத்தியாயம் அழகாக வெளிவர வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்ட இளைஞர், சீனியர் ரிப்போர்ட்டர் அசோகனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
ஓவியர் அரஸ், விகடன் அலுவலகத்துக்கு வந்து தங்கி, நான் எழுதி முடிக்கும்வரை காத்திருப்பார். பிறகு எதை, எந்தக் கோணத்தில் வரையலாம் என்று ஆர்வமாக விவாதித்துவிட்டு ஓவியம் வரைவார். அந்தப் பின்னிரவு நேரத்தில் வண்ணங்களையும் பிரஷ்ஷையும் எடுத்துக்கொண்டு, அவர் இயங்கும் வேகம் – என்னை அதிசயிக்க வைக்கும்!
கடைசியாக – காலை மூன்று மணி சுமாருக்கு நான் வீட்டுக்குத் திரும்பி, காலிங் பெல்லை அழுத்தியதும் முகம் சுளிக்காமல் வந்து கதவைத் திறந்து, வீட்டுக்குள்ளே அனுமதித்த என் மனைவிக்கும் நன்றி!
– மதன்
நன்றி: விகடகவி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,