ஈருயிர் கொண்டவன்
ஈருயிர் கொண்டவன்
****************************
பிருந்தா சாரதி
நீ இல்லாத
இடமும் காலமும்
தனிமை என உணர்ந்த
பேதமை இறந்துவிட்டது.
நீ இல்லாமலேயே
உன்னுடன் வாழும் சூட்சுமம்
புரிந்துவிட்டது.
இப்போது
என் ஒவ்வொரு கணத்திலும்
ஒவ்வொரு நினைப்பிலும்
ஒவ்வொரு அசைவிலும்
கலந்திருக்கிறாய் நீ.
என் உடல்மொழி கூட
உன் போல் ஆகிவிட்டது.
உன் போல்
நகம் கடித்தபடி யோசிப்பதும்
உடன்படாத பேச்சுக்கு
உதட்டை மடித்து 'பட்' என
ஒலி எழுப்புவதும்
நாற்காலியின் ஒரு ஓரமாய்
சாய்ந்து உட்காருவதும்
உன் போலானதை
மறைக்க விரும்பியும் முடியாமல்
ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.
கேலிகளும் உள்ளூற
குதூகலம் அளிக்கின்றன.
பேச்சின் தொனியில் நீ புகுந்ததை
என் வாழ்நாள் சாதனையாக
ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
நெருங்கிய நண்பர்கள்
என் பெயரால் என்னை
அழைத்துத் தோற்றுப்போய்
உன் பெயர் கூறி அழைப்பதற்குப்
பழகிக் கொண்டுவிட்டனர்.
என்னை விட்டுப் பிரிந்து விட்டதாய்
நீ மட்டும் நினைத்து மகிழ்.
உயிரோடு கலந்து வாழும்
உன்னைச் சுமப்பதால்
இப்போது எனக்கு
இரண்டு உயிர்.
*
('ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம் ' தொகுதியில் இருந்து....)
***
#காதலர்தினம் #loversday
--பிருந்தாசாரதி
Comments