இந்துமதி
எழுத்தாளர் இந்துமதி அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💕
*
கல்லூரியில் படித்த காலத்தில் இந்துமதி அவர்களின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' படித்து அவர்கள் மீது மிகப் பெரிய ஈர்ப்பு உண்டானது.
ஒவ்வொரு பக்கத்திலும் அன்பு தளும்பும். அண்ணிக்கும் நாயகனுக்குமான அழகான நட்பு பண்பாட்டுக்கும் நவீனத்துக்குமான இலக்கணமாக இருக்கும். அந்நாவலை அப்படி ரசித்து ரசித்துப் படித்திருக்கிறேன்.
அவர்கள் பின்னாளில் எங்கள் 'ஆனந்தம்' படத்தை அதேவிதமாக ரசித்தது எங்கள் பேறு.
'ஆனந்தம்' படத்தைப் பார்த்துவிட்டு அப்படிக் கொண்டாடிவிட்டார். பல பதிவுகள் இட்டார். இயக்குனர் என் . லிங்குசாமியையும் என்னையும் அழைத்து விருந்து கொடுத்தார். லிங்குசாமி வீட்டுக்கு வந்து பல மணிநேரம் இருந்து குடும்ப நண்பராக இல்லை - உறவாகவே - ஆகிவிட்டார்.
இப்போது அவரை நாங்கள் மேடம் என்று அழைப்பதில்லை. அம்மா என்றே அழைக்கிறோம்.
இனிமை... இனிமை... இனிமை... இதுதான் இந்துமதி.
குரலில் இனிமை...
பேச்சு முழுவதும் இனிமை...
நினைவு முழுவதும் இனிமை.
வாழ்க்கையில் எவ்வளவோ கரடுமுரடான பாதைகள்
எத்தனையோ மேடு பள்ளங்கள்
வரும் போகும்...
அவற்றால் காயப்படாமல் மனதைக் காப்பதே ஒரு கலை.
எங்கே போனாலும் ஒரு நறுமணம் பரவும் சூழலை சிலரால் எளிதாய் எடுத்துச் செல்லமுடியும். அது திட்டமிட்டால் நடக்காது. அவர்களின் இயல்பிலேயே அது இருக்கும். அப்படியானவர் இந்துமதி அம்மா.
அவரது இந்தப் பிறந்த நாளில் உடல் மன ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் நிறைவாழ்வைத் தொடர அவரை வணங்கி வாழ்த்துகிறேன் 💐
*
அன்புடன்,
பிருந்தா சாரதி
Comments