கனவுகளில் உயிர்

 


சண்டை போட்டு

சமாதானமாகும்போதெல்லாம்

ஒரு முத்தம் தருகிறாய்

மற்ற நேரங்களில்

நீ தருவதேயில்லை

இதற்காகவே..

ஒரு சண்டையையும்

ஒரு சமாதானத்தையும்

தயார் செய்தே வைக்கிறேன்.


பேசுவதற்கு..

நேரமில்லை உனக்கு

வந்தவுடன் ஆரம்பிக்காதே

என்பாய்

சாப்பிட விடு என்பாய்

தூக்கம் வருகிறது என்பாய்

வேலைக்கு போகுற

நேரத்திலயா என்பாய்

ஏன் முன்பே சொல்லவில்லை

என்று கோபித்துக்கொண்டு

மௌனமாகவே இருந்திடுவாய்.


உன் கோபத்திற்கு

பிறகு வரும் மௌனத்தை

அவ்வளவு ரசிக்கிறேன்

எனக்கான வரிகளையெல்லாம்

நானே நிரப்பிக்கொள்கிறேன்

நீ கொஞ்சி கெஞ்சி

சமாதானப்படுத்துவதாக

மௌனத்தை மொழிபெயர்த்து

உன் மௌனத்தோடு

பேசிக் கொண்டிருப்பேன்.


உன் சட்டையோடு

நானும் சட்டையாக

நினைப்பேன்..

நீ வெற்று உடம்போடு

படுக்கும்போது

உன் மார்பு ரோமத்தோடு

என் கூந்தலை

சிக்கு போட்டுக்கொள்வேன்.


கலவிக்கு நான் ஏன்

உன்னை அழைக்க கூடாது

என் சமிக்கைகளை

கண்டுகொள்ள தெரியாதபோது

நான் முத்தமிட்டு

தொடங்கி வைப்பேன்

பேசுவதற்கு நிறைய இருக்கிறது

பேசிக்கொண்டே

என்னை உளற வை

உளறிக்கொண்டே

என்னை முனங்க வை


நான் சொல்ல நினைப்பதும்

செய்ய நினைப்பதும்

இப்படி கள்ளக்காதலிலா

ஈடேற்ற வேண்டும்

உன் மீது எனக்குள்ள

இந்த காதலை புரிந்திருந்தால்

இது கள்ளக்காதலாக

மாறி இருக்குமா..

பார்..

நீ உறங்கி கொண்டிருக்கிறாய்

நான் கனவு காண்கிறேன்

இப்போது நீ விழித்தாலும்

நான் உறங்குவதாகத்தான் தெரியும்

என் காதல் கணவா

உறங்கு..

இந்த இரவை விழிக்க விடாமல்

நான் உன்னோடு

வாழ்ந்துகொள்கிறேன்

கனவுக்கு பஞ்சமில்லை

அதில் நீ எப்போதும்

என் காதலுக்கு அடிமைதான்.

கற்பனைகளில் நம்பிக்கை

கணிப்புகளில் காதல்

கனவுகளில் வாழ்க்கை

திருட்டில் தாம்பத்தியம்

இருட்டில் இல்லறம்.

விடியலுக்காக..

இங்கே நானல்ல

யாரும் காத்திருக்கவில்லை

வாழ பழகிவிட்டோம்.

💗💗💗💗💗💗💗💗💗

நயினார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,