பாரதி படத்தை கமலுக்கு போட்டுக் காட்ட முயன்ற சுஜாதா**

 பாரதி படத்தை கமலுக்கு போட்டுக் காட்ட முயன்ற சுஜாதா**
பாரதி படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக / தணிக்கைக் குழு அதிகாரியாக தன் பணிகளைத் திறம்படச் செய்தவர் என்பது பலர் அறிந்த விஷயம். அவர் பாரதி படத்தை இயக்கியபோது, அதை மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தவர் நம் சுஜாதா. அவருடன் வரதராஜன், மணிபிரசாத் என்ற இருவரும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.
பாரதி திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதா என்பது தெரியாது, இருந்தும் ஒரு யுக புருஷனைப் பற்றிய அந்தப் படத்தில் பாரதியாக மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதியாக வாழ்ந்திருந்தார் என்றால் அது மிகையாகாது.
பாரதியார் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு எஸ் வி சுப்பையாவின் பண்பட்ட நடிப்புதான் நினைவுக்கு வரும். அந்த அளவு அவர் பாரதியாராக கப்பலோட்டியத் தமிழன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் கப்பலோட்டியத் தமிழனாக நடிகர் திலகம்
அருமையாக
நடித்திருந்தும், மகாகவி பாரதியாராக நடித்த எஸ் வி சுப்பையாவின் மறக்க முடியாத நடிப்பும் அப்போது பெரிதும் பேசப்பட்டது என்பார்கள்.
மீடியா ட்ரீம்ஸ் சார்பாக எடுத்த பாரதி படத்தைப் பற்றி, இயக்குனர் ஞான. ராஜசேகரன், சித்ரா லெட்சுமணனுடன் நடத்திய உரையாடலை மிகவும் ரசிக்க முடிந்தது. அதில், இயக்குனர், பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன், முதலில் மனதில் தோன்றிய நடிகர் கமல் என்கிறார். தான் கமலைச் சந்தித்து இந்தப் படம் பற்றி கூறியவுடன், கமல் மகிழ்ந்து, "நான் ஸ்டார் என்பதை மறந்து விடுங்கள். ஒரு நடிகனாக என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் நன்றாகச் செய்கிறேன்" என்று வாக்களித்து இருக்கிறார். முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளராக தாணு முன்வந்து எடுக்க ஆர்வமாக இருந்திருக்கிறார். "பாரதியின் படத்தை மிக நன்றாக எடுத்து அது ஓடாமல் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை" என்று அவர் சொன்னதாக இயக்குனர் சொல்கிறார்.
படம் சம்பந்தமாக, கமலை தயாரிப்பாளர் சந்தித்ததாகவும், அப்போது கமல், இயக்குனர்
ஞான. ராஜசேகரனிடம் பேசியதற்கு நேரெதிராக தனக்கு வர வேண்டிய கோடிகள் சம்பளமாக வந்துவிட வேண்டும் என்றும், அதில் எந்தவித சமரசமும் இல்லை" என்று கராறாகப் பேசியிருக்கிறார். அப்போதும், தாணு தயாராக இருந்தும், இயக்குனர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாரதி வாழ்ந்தவரை ஒரு பரதேசியாக, எந்தவித படாடோபமும் இல்லாமல் வாழ்ந்தவர். எனவே அவர் படத்தை அவ்வளவு செலவளித்து எடுப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு வேறு பொருத்தமான நடிகரைத் தேடியுள்ளார்.
அப்போது சாயாஜி ஷிண்டே புகழ்பெற்ற பெரிய நடிகர் ஆகவில்லை. ஷூல் (சூலம்) என்ற படத்தில் வில்லனாக நடித்ததைப் பார்த்து, அவரை பாரதியாராக நடிக்க வைக்கலாம் என்று இயக்குனருக்குத் தோன்றியுள்ளது.
ஷூல் ஹிந்தித் திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது சூப்பர் ஸ்டாராக விளங்கும் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிக்க, சாயாஜி வில்லனாக நடித்துள்ளார். அவரை, மும்பையில் சந்தித்த ஞான ராஜ சேகரன் தன்னுடைய படமான பாரதியைப் பற்றிக் கூறி, நடிக்க விருப்பமா என்று கேட்க, சாயாஜி அதில் மிகவும் ஈடுபாடு காட்டியுள்ளதோடு, தான் பட்ஜெட் படமாக எடுப்பதால், அவருக்கு ஊதியமாக ரூ. ஐந்து லட்சம் மட்டுமே தர முடியும் என்று கூறியும். சாயாஜி மறுப்பு ஏதும் கூறாமல், அவ்வளவு புகழ்பெற்ற கவியைப் பற்றிய படம் என்பதால், பணம் பெரிதில்லை என்று கூறியுள்ளார். உடனே மளமளவென வேலைகளை ஆரம்பித்துள்ளார் ஞான ராஜசேகரன்.
படத்தின் முழு வசனத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டுள்ள சாயாஜி, நடிக்கப் பயிற்சி செய்ததோடு மட்டுமல்லாமல், வசனங்களையும் மனப்பாடம் செய்துள்ளார். படத்தில் அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்த நடிகர் ராஜீவ், மிக கச்சிதமான வேலையைச் செய்திருந்தாலும், பாரதியின் வேடத்தில் சாயாஜி ஒன்றியதால் மிகவும்
அருமையாக
நடிக்க வந்துள்ளது.
முதலில், சாயாஜிக்கு பாரதியார் உருவ ஒப்பனை செய்துவிட்டு, எப்படி நடக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்துள்ள ஞான. ராஜசேகரன், சாயாஜியை நடிக்கச் சொல்லி தனக்கு அந்த வீடியோவை அனுப்பும்படி கூறியுள்ளார்.
சாயாஜி அப்படியே செய்துள்ளார். அதைப் பார்த்த இயக்குனர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளார். அந்த அளவுக்கு சாயாஜியின் நடிப்பு அந்த வீடியோவில் இருந்துள்ளது. பேசுவதும், பாடுவதும், சித்தப்பிரமை பிடித்தவர் போல அமர்வதும், பிதற்றுவதும் என்று எல்லாவற்றையும் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார் சாயாஜி.
இத்தனை கலாட்டவுக்கு நடுவே, படத்தின் தயாரிப்பை மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள, அதன் சார்பாக, சுஜாதா மற்றும் இருவர் செயல்பட்டுள்ளனர்.
சுஜாதாவை ஏற்கனவே இயக்குனர் ஞான. ராஜசேகரன் அறிந்துள்ளதால், தான் ஏற்பாடு செய்த அந்த வீடியோவை சுஜாதாவுக்குப் போட்டுக்காட்ட, சுஜாதாவும் அசந்து போயிருக்கிறார். "என்ன சார், இவன் இப்படி நடிச்சிருக்கான்" என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.
இதன் பின், பாரதியின் மனைவி செல்லம்மாவாக தேவயானியியும், இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜாவும், மற்ற நடிகர்களும் படத்தில் இணைந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் "நிற்பதுவே, நடப்பதுவே" பாடலை யார் மறக்க முடியும்? அதைப் பாடிய ஹரிஷ் ராகவேந்திரா மிகவும் அருமையாகப் பாடியிருந்தார். மற்ற பாடல்களும் இந்தப் படத்தில் தெவிட்டாத தேனாக இனிக்கும்.
இதன் நடுவே சாயாஜிக்கு உடல்நலம் சரியில்லை என்று ஞான. ராஜசேகரனுக்குத் தகவல் வந்துள்ளது. பயந்து போன அவர் மும்பை விரைந்துள்ளனர். அவர் சாயாஜியைச் சந்தித்த போது, அவர், "சார், இந்தப் படத்தை விரைவில் முடித்துவிடுங்கள். பாரதி எனக்குள் இருந்துகொண்டு என்னவோ செய்கிறார்" என்று கூறியுள்ளதைக் கேட்டு, இயக்குனர் பாரதியின் பாத்திரத்தில் சாயாஜி எவ்வளவு தூரம் ஒன்றிப்போயுள்ளார் என்று உணர்ந்து மகிழ்ந்திருக்கிறார்.
படம் முடிந்த பிறகு, மும்பைக்கு விமானம் ஏற்றிவிட, சாயாஜியுடன் ஞான ராஜ சேகரன் விமான நிலையம் சென்றுள்ளார். வேறு ஏதோ விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மற்ற விமானங்கள் தாமதமாக, சாயாஜி இயக்குனரிடம் சொல்லியுள்ளார்.
"சார், நேரமாகிவிட்டது, நீங்கள் கிளம்புங்கள். நான் செல்லும் விமானம் ஏதாவது விபத்துள்ளாகி, நான் இறந்து போனாலும் பரவாயில்லை. ஒரு மிக நல்ல பாத்திரத்தில், நல்ல படத்தில் நடித்துவிட்டேன்" என்றதைக் கேட்டு கண் கலங்கியுள்ளார் இயக்குனர்.
இந்தப் படம் ரிலீஸானாவுடன் அதை கமலுக்கு போட்டுக்காட்ட, மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் Consulatant ஆகவும், நல்ல நண்பராகவும் சுஜாதாவே முயன்றும், கமல் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. பாரதி படத்தின் Creative Head ஆக சுஜாதா இருந்துள்ளார்.
எங்கோ மகாராஷ்டிரத்தில் பிறந்து, பாரதியாக வாழ்ந்து காட்டிய சாயாஜி ஷிண்டேயைப் பார்க்கும் போது இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
தசாவதாரத்தில் நாயுடு வேடத்தில் நடிக்கும் கமல் பேசுவதாக ஒரு வசனம் வரும், "தெலுகு தாய்மொழி எனக்கு, நான் தமிழில் பேசுகிறேன். ஆனால், தமிழ் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் ஆங்கிலம் பேசினால் தமிழ் எப்படி வளரும்?" என்று விஞ்ஞானியாக வரும் கமலிடம் கேட்பார். அதற்கு, அந்தக் கமல் அலட்சியமாக, "உங்கள் மாதிரி யாராவது ஒரு தெலுங்கர் வந்து வளர்ப்பார்" என்பார்.
தமிழ் மொழியின் அடையாளமான மஹாகவியின் வேடத்தில் நடிக்க, தன்னை பாரதியின் பெரும் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முன்னணி தமிழ் நடிகர் நடிக்க விரும்பவில்லை என்பது கொடுமை.
-THANKS
சுஜாதா வாசகர்கள் குழு FACE BOOK

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,