முத்தங்களைச்சமைப்பவள்

 முத்தங்களைச்சமைப்பவள் 

#பிப்ரவரி13 #உலகமுத்ததினம்



*

பிருந்தா சாரதி

*

முதல் பார்வையில் 

மனதைத் தீப்பற்றவைத்துப் 

பின்  தீண்டல்களால்

வாழ் நாள் முழுமைக்குமான உணவைச் 

சமைக்கத் தெரிந்தவள் அவள்.


பறித்த கிழங்கின் வாசனையும் 

பனை நுங்கின் ருசியும்

அவள் அங்கங்களில்.


வேறு வகை உணவுகளும் உண்டு அவளிடத்தில்.


ஜென்மாந்திரப் பசியை  நொடியில் தீர்க்கும் 

அட்சய பாத்திர உள்ளங்கையில்

உலகறியா நறுமணத்தைப்

பதுக்கியிருந்தாள்.


அவன் கனவுகளின் கூடாரத்தைக் கைப்பற்றி 

வாஸ்து பார்த்து 

இதய மூலையில் 

தன் சமையல்கூடத்தை அமைத்துக் கொண்டாள்.

 

அவர்கள் நெருக்கத்தில்

சிக்கிமுக்கிக் கல்லுரசி 

பற்றி எரிகிறது அடுப்பு.


பசி வழியும்  பாத்திரத்தில்    தாகங்களால்  கொதிக்கவைக்கிறார்கள் ஆசைகளை.


உலை தளதளக்க

நீள்கிறது சமையல்.


ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசம் மணக்கிறது

அச்சமையலில்.


சமைத்தபடியே  

மாறி மாறி ருசி பார்ப்பதால்  காலியாகிவிடுகிறது உணவு 

ஒவ்வொரு முறையும்.


காயசண்டிகையாய்

தீராப்பசி கொண்டு அலையும் மனதை

வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறது 

சோர்ந்துபோன உடல்.


பசியே ருசி என்பதை உணரும் கணத்தில்

அமிர்தமென ஊறிப் பரவுகிறது

இரண்டு உள்ளங்களிலும்

காதல்.

*

#பிப்ரவரி13 #உலகமுத்ததினம்

பிருந்தா சாரதி




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,