பாடல் வரிகள்


 ''ஒரு படத்தில் அனைத்து அம்சங்களும் காலப்போக்கில் ரசிகனுக்கு மறந்துபோகலாம். ஆனால், அவனுக்கு மறக்காமல் இருப்பது பாடல் வரிகள்தான். பாடல் வரிகளை வைத்துதான் பல படங்கள் அடையாளம் கூறப்படுகின்றன. உதாரணமாக, 'வயசுப் பொண்ணு’ என்று ஒரு படம். இந்தப் படத்தைப் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனால், 'காஞ்சிப் பட்டுடுத்தி... கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்’ என்று நான் எழுதிய பாட்டு பெருமளவில் புகழ் பெற்றது. இப்போதும்கூட இந்தப் பாடல் இந்தப் படத்தில்தான் என்றவுடன், அந்தப் படத்தைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயமே ஏற்படும். ஒருவேளை அது ரொம்ப நல்ல படமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும் (அது மோசமான படம் என்று நான் சொல்லவில்லை. ஓர் உதாரணம் சொன்னேன்!).

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் எழுதிய பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடியிருக்கின்றன. பாடல்களுக்குப் பணம் தர முடியாமல் உடுமலை நாராயணகவிக்கு ஒரு ஏரியாவையே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மட்டும் என்ன? அடிவாரத்தில் நிற்கும் படங்களை, நல்ல பாடல்கள் மலையுச்சிக்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன அல்லவா? பாடல் வழியாக ஒரு கருத்து வரும்போது, அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகமிக முக்கியமானவை. நல்ல கருத்துகளை மக்கள் மனத்தில் பதியவைப்பது பாடல்கள்தான். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரை உருவாக்கியதே பாடல்கள்தானே! இதை யாராவது மறுக்க முடியுமா? 'பாடல்கள் இல்லாத படம் ஒன்று பண்ணலாமா?’ என்று ஒரு இயக்குநர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, 'அப்படி ஒரு படத்தை என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. யோசிக்கவும் நான் விரும்பவில்லை’ என்றாராம் புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானபோது ஒரு அமெரிக்கப் பத்திரிகை 'இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் நான் அவருக்கு எழுதிய 'அன்புக்கு நான் அடிமை’ என்ற பாடலையும் 'இது நாட்டைக் காக்கும் கை’ பாடலையும் எழுதி, அவற்றின் ஆங்கில அர்த்தத்தையும் குறிப்பிட்டு 'இதுபோன்ற பாடல்களால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்’ என்று எழுதியிருந்தார்கள்!''
கவிஞர் முத்துலிங்கம்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி