எழுத்தாளர்களுக்குள் இத்தனை பிரிவுகள் வேண்டியதில்லை .

 எழுத்தாளர்களுக்குள் இத்தனை பிரிவுகள் வேண்டியதில்லை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் எழுத்துகளைப் படித்துதான் நாங்கள் எழுத ஆரம்பித்தோம். சுஜாதா போன்றவர்கள் எல்லாம் பெரிய மேதைகள். பாலகுமாரன் கைகளில் இருக்கும் அந்த மொழிநடையும் வேகமும் ரொம்ப அற்புதமானது. அற்புதமான ஆற்றல் நிறைந்தவர் அவர். ஜனரஞ்சகமாக, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதனாலுமே ஒருவர் தீவிர இலக்கியவாதி இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வெகுஜன பத்திரிகைகளில் எழுதுவதில் வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் ஆரம்பித்து குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதிலிருந்து, பக்கக் கணக்கு, நாங்கள் எதையும் வெட்டுவோம் என்று சொல்வது போன்ற சிக்கல்களை சொல்லலாம். இத்தகைய விஷயங்களுடன் எப்படி ஒருவரால் இணங்கிப் போக முடிகிறது என்பது ஒரு விஷயம். இரண்டாவதாக இன்று வெகுஜன பத்திரிகைகளில் எல்லாமே பலசரக்காக இருக்கின்றன. அதில் ஒரு பக்கத்தில் ஆபாசம், இன்னொரு பக்கம் ஆன்மீகம், ஒரு பக்கம் சமையல், கவிதை, கட்டுரை, மருத்துவம் என்று பக்கத்திற்குப் பக்கம் இருக்கும். இவற்றில் ரொம்பவும்

மேலோட்டமாக விஷயங்கள் கையாளப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு இடத்தில் சமூகசிந்தனை உள்ள ஒரு நபர் இடம் பெறலாமா என்ற கேள்வியைத்தான் அவர்கள் வைக்கிறார்கள்.
ஆனால் ஒரு புத்தகம் என்றால் சுமார் 98 பக்கங்கள் இருக்கின்றன. அதில் சுஜாதாவின் கேள்வி பதில் வரும் பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவரது கற்றதும், பெற்றதும் பகுதி மிகவும் உபயோகரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பயனுள்ள விஷயங்கள் அந்த 98 பக்கத்தில் நான்கு பக்கங்களை காப்பாற்றிவிடுகிறது அல்லவா? இந்த மாதிரிகூட நாம் பார்வையைத் திருப்பலாம்.
அதுபோல் சிறு பத்திரிகை நடத்துபவர்கள்கூடக் குற்றம் இல்லாதவர்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களிடையே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் இருக்கின்ற இடம் சார்ந்து, இனம் சார்ந்து, சாதிகள் சார்ந்து, இவர் காலச்சுவடு குரூப், இவர் கணையாழி குரூப் என்று பத்திரிகைகளை சார்ந்து, பிறகு இவர் கரிசல் எழுத்தாளர், இவர் கொங்கு எழுத்தாளர் என்று வட்டங்கள் சார்ந்து நிறைய மோதல்கள் இருக்கின்றன. ஒருவரைஒருவர் தாக்கி எழுதுவது, காரசாரமாக விவாதம் செய்வது போன்றவைகள் எல்லாம் வருகின்றன.
எழுத்தாளர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் படைப்பாளியாக, மக்களுடைய குரலாக இருக்க வேண்டும். அடுத்து வரும் சமூகத்திற்கு, அடுத்து வரும் சந்ததிக்கு அவர்களது வாழ்க்கையை நாம் பிறந்த காலத்தில் இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் இனிமையானதாக ஆக்கிக்கொடுத்துப் போனவர்களாக இருக்க வேண்டும். எதிர்கால உலகத்திற்கான ஒரு ப்ளூ பிரிண்ட் போடுபவனாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படியாக இயங்கக்கூடிய கட்டாயங்கள் எழுத்தாளர்களுக்கு உண்டு. அதை அவர்கள் உணராமல் எதற்கு இவ்வளவு பிரிவினைகள் என்று நான் நினைக்கிறேன்.
- திலகவதி ஐபிஎஸ்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம்

நீலமணி கவிதைகள்