அகிலன் .

 அடிமை இந்தியாவில் பிறந்து (27/6/1922 ) , சுதந்திரப் போராட்ட உணர்வில் ஈர்க்கப்பட்டு ஈடுபட்டு , மாணவப் பருவத்திலேயே காந்திய வழியில் தேச நலனை வளர்க்கமுடியும் எனக் கனவு மிகக் கொண்டார் அகிலன் .


காட்டிலாகா அதிகாரியாக ராஜாங்க உத்தியோகம் பார்த்த தந்தை . ஊரில் கணக்கப் பிள்ளை வீடு எனும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் திடீரென ஓர் நாளிரவு பெய்த புயல் மழையில் அடித்துச் செல்ல , அதன் பின் நோய்ப் படுக்கையில் வீழ்ந்தார் அன்புத் தந்தை . தன் மகன் அகிலனை ஐ சி எஸ் படிக்க வைத்து அடிமை இந்தியாவில் மிக உயர்ந்த பதவியான கலெக்டராகவோ , சுதேச சமஸ்தானத்தின் திவானாகவோ வேலையில் அமர்த்திப் பார்க்க விரும்பியவரின் ஆசையும் அடித்துச் சென்றது அப் புயல் மழையில் . பள்ளிச் சிறுவன் அகிலனை அருகழைத்து , ” நீ திறமைசாலி ; வாழ்க்கையில் முன்னுக்கு வருவாய். நீ எந்தப் பதவியில் , எந்தப் பொறுப்பில் ,
எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் லஞ்சம் மட்டும் வாங்கக் கூடாது. நீ வாங்கமாட்டாய் என்று எனக்குத் தெரிந்தாலும் , நான் உனக்கு இதைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது ” என்று கூறி விடை பெற்றார். ( 1938 )
தந்தை அப்பழுக்கற்ற ராஜ விசுவாசி.
தாயின் ஊர் கரூர் .விடுதலைப் போரின் வெக்கை மிகுந்த ஊர். அவ்வூரில் நான்காம் – ஐந்தாம் வகுப்பு மாணவனாய் கள்ளுக்கடை மறியலுக்குச் சென்றவர் அகிலன்.
ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்து நாடே போற்றும் எழுத்தாளராக , சமூக அக்கறை மிகுந்த படைப்பாளியாக உருவாக முடிந்தது அகிலனால் .
உடல் நலன் இல்லாத போதும் இலக்கிய அமைப்பின்அழைப்பைத் தட்டாமல் ஒரிசாவின் புவனேஸ்வருக்குப் பயணித்தார் .
பொதுவாகவே அகிலன் அவர்களுடன் என் சின்னஞ் சிறு வயதிலிருந்தே உடன் பயணிக்கும் பேறு பெற்றவன் என்பதால்தானோ என்னவோ எனக்குள் லேசாய் அகிலனின் இலக்கிய மூச்சுக் காற்று புகுந்ததைப் பெருமையுடன் நினைக்கிறேன்.
சிவாஜி கணேசன் , எம்.ஜி .ஆர் . இருவரும் அகிலன் அவர்கள் மீது உள்ளார்ந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர் .பாவைவிளக்கு , வாழ்வு எங்கே ? ( குலமகள் ராதை ) , கயல் விழி ( மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ) ஆகிய இவரது படைப்புகள் திரை வடிவம் கண்டன . சிவாஜி கணேசன் , ‘ வேங்கையின் மைந்தன் ‘ நாவலை மேடை நாடகமாக நடித்தார். நெஞ்சின் அலைகள், வெற்றித் திருநகர் , எங்கே போகிறோம் ? நாவல்களும் மேடையேறின.
- அகிலன் கண்ணன்
நன்றி: இந்து தமிழ் திசை

என் தந்தை அமரர் அகிலனின் நூலகத்தில் பற்பல துறைப் புத்தகங்கள் ‘என்னை எடுத்துப் படி’ எனத் தூண்டும். பள்ளியிறுதி நாள்களில் நான் எடுத்துப் படித்த முழுப் புத்தகங்கள் பாரதியார் கவிதைகள், காந்தியின் சத்தியசோதனை போன்றவை.
இவற்றிடையே ‘அன்பு நண்பர் அகிலனுக்கு வாழ்த்துகளுடன் கண.முத்தையா’ என்று கம்பீரமான எழுத்துக்களில் முன்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த ராகுல்ஜியின் ’பொதுவுடமைதான் என்ன?’ நூலைப் படித்தேன். இச்சமயத்தில் வீட்டருகே குடியிருந்த நண்பர்(ன்) பாலகுமாரன் ’ஜீன் பால் சாத்ரே’யை அறிமுகப்படுத்தினார். அறிஞர் அண்ணா அவர்களின் பல கூட்டங்களில் ராகுல்ஜியின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, நூல் பற்றிப் பேசிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது. படித்தவர்கள் எல்லாம் அந்த நூலைப் பற்றிப் பேசக் கேட்டதும் ’பொதுவுடமைதான் என்ன’ நூலும், என்னை ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படிக்கத் தூண்டின.
அன்றிலிருந்து இன்று வரை அந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய தாகம் மிகச் சிறந்த அனுபவமாகும். மனித சமுதாய நாகரீக வளர்ச்சியைத் தெரிந்துகொள்ளவும் உலக அரசியல் சரித்திரத்தின் பின் புலனைப் புரிந்துகொள்ளவும் பார்வையை விசாலப்படுத்தவும் அந்த நூல் தந்துள்ள அறிவுப் பகிர்தலும் ஆதாரப் பூர்வமான நிலை நிறுத்தல்களும் என்னை பிரமிக்க வைத்தன.
சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரீகம் முதலியன பற்றிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் 20 கதைகளாக எழுதியுள்ளார் ராகுல்ஜி. சரித்திரம் சலிப்பை ஏற்படுத்தும் எனும் பொதுவிதியைத் தகர்க்கக் கதை வடிவில் அதைத் தந்துள்ளார்.
காலங்காலமாக மக்களின் மனவெளிப்பாட்டை, செயல் வடிவங்களை மருளச்செய்யும் உண்மைகளை அப்படியே நிதரிசனமாகச் சொல்லும் கதைகள் இவை.
நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன், புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன், பந்துலமல்லன், நாகதத்தன், பிரபா, சுபர்ணயெளதேயன், துர்முகன், சக்ரபாணி, பாபா நூர்தீன், சுரையா, ரேக்கா பகத், மங்கள சிங், சபதர், சுமேர் என்று கதை மாந்தர் வடிவில் சரித்திரத்தைச் சுவைபடக் கூறுகிறார். காந்தி வரை வருகிறார்.
பந்துலமல்லன், மக்கள் விருப்பத்தை, வெறுப்பை உணர்ந்து இந்தச் சமயத்தில் நான் தேவையில்லை. ’’குசீனாராவுக்குப் பந்துலனின் சேவை தேவையாயிருக்கும்போது அவன் எங்கிருந்தாலும் சரி… உடனே இங்கு வந்துவிடுவான்’’ என்று தான் வளர்ந்த பூமியை விட்டுப் பயணமாவதைப் படிக்கும்போது தலைமையின் தலைமைப் பண்பை உணர்கிறோம். அங்கங்கே தற்போது கால நிகழ்வுகள் பற்றிய ராகுல்ஜியின் விமர்சனங்கள் மின்னல் கீற்றுகளாகவும் பளிச்சிடும். இப்புத்தகத்தில் அன்றைய அரசியல், சரித்திரம் ஆதாரங்களுடன் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன.
’36 மொழிகள் தெரிந்த அறிஞர் ராகுல்ஜி, 150 நூல்களை எழுதியவர். அவரது இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர் அமரர் கண.முத்தையா.
‘உலகத்தில் எத்தைனையோ பாஷைகளில் உள்ள தர்க்க ரீதியிலான மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு, இவைகளிலே எழுதப்பெற்றும் செதுக்கப்பெற்றும் உள்ள சரித்திரம், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பலநாட்டின் பல பழக்க வழக்கங்கள், புதைபொருள்கள் இவைகளில் இருந்ததெல்லாம் ஆதாரங்கள் தேடப்பட்டு’ இந்த நூலை எழுதியுள்ளார் ராகுல சாங்கிருத்தியாயன்.
திருமழிசையில் தங்கித் தமிழ் கற்ற இவர் இம்மொழி பெயர்ப்பைத் தமிழிலேயே படித்து அங்கீகரித்துள்ளார்.
ராகுல்ஜி இந்த மக்களை இம்மக்களின் மேம்பாட்டை எவ்வளவு நேசித்திருந்தால், இந்த அறிவுப் பெட்டகத்தை நமக்குத் தந்திருப்பார் என மலைக்க வைக்கும் புத்தகம் இது. 1949 முதல் இன்று வரை 23 பதிப்புகள் கண்டுள்ள அரிய நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, இந்தியாவில் ராகுல்ஜியின் பெயர் புழங்கும்வரையில் தமிழகத்தில் அவரது வால்காவிலிருந்துகங்கை வரை நூலும் அதை மொழிபெயர்த்துப் பதிப்பித்த தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தையாவின் நினைவும் போற்றப்படும் இதே நூல்கள் சில ஆதிக்க சக்திகளால் அண்மையில் தெருவில் வீசி எறியப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு போற்றுதலுமே இந்த நூலில் உண்மைக்குச் சான்று.
- அகிலன் கண்ணன்
நன்றி: தினமணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,