நீங்கள் செய்யும் சமையலில் ருசியை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த 15 ரகசிய குறிப்புகள்

 நீங்கள் செய்யும் சமையலில் ருசியை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த 15 ரகசிய குறிப்புகள்



சமையல் கலையில் நாம் சிறு சிறு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் நமக்கு அந்த சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொடுக்க முடியும். எதை செய்தால்? எந்த சமையல் ருசி கூடும்? என்பதை தெரிந்து வைத்து சமைக்கும் பொழுது தான் அந்த சமையலில் உயிரோட்டம் இருக்கும். இன்றைய இளம் தாய்மார்களுக்கு தேவைப்படக் கூடிய ருசி கூட்டக் கூடிய அட்டகாசமான 15 குறிப்புகள்


குறிப்பு 1: சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார்! இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

குறிப்பு 2: ரவா லட்டு தயாரிக்கும் பொழுது சுவை கூடுதலாக இருப்பதற்கு மிக்ஸியில் கொஞ்சம் அவலை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நெய்யில் வறுத்து லட்டு பிடித்தால் ருசியாக இருக்கும். கூடுதலாக பால் பவுடர் சேர்த்து செய்யும் பொழுது ரவா லட்டு இன்னும் ருசிக்கும்.


குறிப்பு 3: ஆப்ப மாவு கொண்டு ஆப்பம் சுடுவதற்கு முன்பு மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்தால் சீக்கிரம் ஆப்பம் காயாமல் இருக்கும்.

குறிப்பு 4: புதினா துவையல், கொத்தமல்லி துவையல் போன்றவற்றை செய்யும் பொழுது புளி சேர்ப்பதற்கு பதிலாக மாங்காய் துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும், மணமும் அட்டகாசமாக இருக்கும்.



குறிப்பு 5: பருப்பு சேர்த்து கீரை கடையும் பொழுது கொஞ்சம் பால் சேர்த்து கடைந்தால் ருசி கூடுதலாக இருக்கும். 

குறிப்பு 6: ரவா இட்லி தயாரிக்கும் பொழுது ஒரு கைப்பிடி சேமியாவை வெறும் வாணலியில் வறுத்துதயிரில் 10 நிமிடம் ஊற வைத்து கலந்து பின் அவித்து பாருங்கள், ருசி கூடுதலாக இருக்கும்.


குறிப்பு 7: தோசை மாவு தனியாக அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து அரைத்து பாருங்கள், தோசை மிருதுவாக மெத்தென்று வரும்.

 குறிப்பு 8: தக்காளி மட்டும் சேர்த்து சட்னி அரைக்க போகிறீர்கள் என்றால், அதனுடன் கொஞ்சம் எள்ளு பொடியை வறுத்து சேர்த்து பாருங்கள். புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து சட்னி அரைத்து பாருங்கள், இன்னும் கூடுதலான ருசியை கொடுக்கும்.

குறிப்பு 9: வெங்காய பக்கோடா வீட்டில் செய்யும் பொழுது அதனுடன் கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்தால் பக்கோடா செம டேஸ்டாக இருக்கும்.


 குறிப்பு 10: இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு வேக வைத்த சாதத்தை சேர்த்து அரைத்தால் இட்லி, தோசை எதுவாக இருந்தாலும் மெத்தென்று மிருதுவாக வரும்.

குறிப்பு 11: சாம்பார் செய்யும் போது திடீரென தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் கொஞ்சம் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கி சாம்பாருடன் சேர்த்து பாருங்கள், கெட்டியான சாம்பார் கூடுதல் ருசியுடன் தயார்!


 குறிப்பு 12: காலிஃப்ளவர் செய்யும் பொழுது அதன் பச்சை வாசம் சிலருக்கு அப்படியே இருக்கும். இது போன்ற சமயத்தில் பால் சேர்த்து தயாரித்துப் பாருங்கள், பச்சை வாசம் நீங்கும்.

குறிப்பு 13: காய்கறிகள் செய்யும் பொழுது இறுதியாக சேர்ப்பதற்கு தேங்காய் இல்லை என்றால் அதற்கு பதிலாக கொஞ்சம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டு வறுத்து மாவாக்கி வைத்துக் கொண்டால் தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம்.


 குறிப்பு 14: தேங்காயை எப்பொழுதும் கண் பகுதிக்கு கீழே இருக்குமாறு வைக்கக் கூடாது, மேலே பார்த்தவாறு வைத்தால் நீண்ட நாட்கள் தேங்காய் உள்ளே கெடாமல் இருக்கும்.

குறிப்பு 15: தேங்காய் பால் அரைக்க நேரம் இல்லாத சமயங்களில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்து பாதி ஆறியதும், தேங்காயை எடுத்து பிழிந்தால் சுலபமாக தேங்காய் பால் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி